Friday, 14 November 2014

தேசம் உங்களை வணங்குகிறது நேரு!

நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் நேரு. அலகாபாத்தில் உள்ள அவருடைய பூர்விக இல்லமான 'ஆனந்த பவன்' பெரிய குதிரை லாயம், இரு நீச்சல் குளங்கள் என்று ஏகப்பட்ட வசதிகளைக் கொண்ட பெரும் மாளிகை.
நேருவுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுக்க ஸ்காட்லாந்து ஆசிரியர்களை வீட்டுக்கு வரவழைத்துப் பாடம் எடுக்கவைத்தார் நேருவின் அப்பா மோதிலால். பின்னாளில் அவர் கல்வி கற்றது ஹாரோ, கேம்பிரிட்ஜ் என்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனங்கள்.
*
ஒரு வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய பணக்கார நேருவை அரசியலை நோக்கி இழுத்தது சுதந்திரப் போராட்டம். ஜாலியன் வாலாபாக் படுகொலை அவரை உலுக்கியது. காந்தியம் அவரை தேசத்தை நோக்கி இழுத்தது.
*
நேருவின் இல்லற வாழ்க்கை என்பது துயரங்கள் நிரம்பியது. இளமைப் பருவத்தின் பெரும் பகுதியை அவர் போராட்டங்களிலும் சிறைகளிலும் கழித்தார். 1931 டிசம்பர் முதல் 1935 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 6 மாதங்கள் மட்டுமே கைதாகாமல் வெளியில் இருந்தார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்தியதற்காகக் கைதுசெய்யப்பட்டு, 1945 ஜூன் வரை சிறையில் இருந்தார். அவர் மனைவி கமலாவுக்கு அருகே இருக்க வாய்த்த காலகட்டங்களில் கமலா காசநோயால் படாத பாடுபட்டுக்கொண்டிருந்தார். இருந்தும் நேருவின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஊக்கம் கொடுத்தார் கமலா. 1930-ல் உப்பு சத்தியாகிரகத்துக்காக நேரு கைதுசெய்யப்பட்டபோது, கூடவே, கமலாவும் சிறை சென்றார்.
*
நேரு நினைத்திருந்தால், தேர்தலில் தான் பெற்ற வெற்றியையும், கட்சியிலும் மக்களிடத்திலும் தனக்கு இருக்கும் வானளாவிய செல்வாக்கையும் கொண்டு நாட்டுக்கே சர்வாதிகாரியாக ஆகியிருந் திருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. எதிர்க் கட்சிகள் தன்னைக் கேள்வி கேட்க இடமளித்தார்; அதைவிட, தன்னுடைய கட்சியைச் சேர்ந்தவர்களே தன்னைக் கேள்விகேட்க அவர் அனுமதித்தார். இந்தியா என்பது காங்கிரஸுக்கானது மட்டுமல்ல என்ற காந்தியின் எண்ணத்தையே நேருவும் பின்பற்றினார். "ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுத வேண்டும்" என்ற காந்தியின் யோசனையைப் பின்பற்றி அம்பேத்கரை அந்தப் பொறுப்பில் நியமித்தவர் நேருதான்.
*
நேருவுக்கும் படேலுக்குமான கருத்து வேறுபாடுகள் இன்றைக்கு ஊதிப் பெருக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவை ஒரு வலிமையான நாடாகக் கட்டியெழுப்புவதிலும் சரி, காந்தியின் சீடர்களாக அவர்களின் அடிப்படை நோக்கங்களில் அவர்களுக்குள் பெரிய வேறுபாடுகள் இல்லை. முக்கியமாக, காங்கிரஸின் சிதைவு, இந்தியாவின் சிதைவு என்று கருதினார் படேல். நேருவா, படேலா எனும் சூழலை அவரைச் சுற்றியிருந்தவர்கள் உருவாக்கியபோது, "மகாத்மா இல்லாத வேளையில் நேருவே நம் தலைவர். நேருவைத் தன் வாரிசாக அறிவித்தார் பாபு. அவருடைய மரண சாசனத்தை நிறைவேற்றிவைப்பது நம் கடமை. மகாத்மாவின் படையில் நான் விசுவாசமற்ற வீரன் அல்ல" என்று படேல் அறிவித்தார். இப்படிப் பேசிய மூன்றாவது மாதமே அவர் காலமானார்.
*
மிகச் சிறந்த வாசகர் நேரு. மே 21, 1922-க்கும் ஜனவரி 29, 1923-க்கும் இடைப்பட்ட நாட்களில் மட்டும் அவர் படித்திருந்த புத்தகங்களின் எண்ணிக்கை 55.
மூன்று நூல்களை அவர் எழுதினார்: 'தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா', கிளிம்ப்ஸஸ் ஆஃப் வேர்ல்ட் ஹிஸ்ட்ரி', 'டுவார்ட் ஃப்ரீடம்' (சுயசரிதை). இது தவிர, அவருடைய உரைகள், கடிதங்கள், வெவ்வேறு சூழ்நிலைகளில் அவர் எழுதிய கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட்டுப் பல தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன.
*
இந்தியச் சூழலில் சந்தைப் பொருளாதாரத்தைவிடக் கலப்புப் பொருளாதாரமே சிறந்தது என்று நேரு நம்பினார். சோஷலிஸத்துடன் முதலாளித்துவத்தின் சாதகமான அம்சங்களையும் அவர் கலந்தளித்தார். இன்றைய நிலைக்கு முற்றிலும் நேரெதிராக, மனிதமுகம் கொண்ட வளர்ச்சியை நேரு அப்போது முன்னெடுத்தார். மத்திய திட்டக் குழு, ஐந்தாண்டுத் திட்டம், அணைகள், தொழிற்சாலைகள் என்று அவர் முன்னெடுத்த திட்டங்களெல்லாம் மக்களுக்கான திட்டங்களாக இருந்தனவே தவிர, முதலாளிகளுக்கான திட்டங்களாக அல்ல. பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் தோன்ற நேருவே வழிவகுத்தார்.
*
சர்வதேச அரசியலில் இந்தியாவுக்குத் தனி முகம் கிடைக்கச் செய்தவர் நேரு. அமெரிக்கா, ரஷ்யா தலைமையிலான அணிகளுக்கு மாற்றாக அணிசாரா நாடுகள் என்ற அமைப்பை நேரு ஏற்படுத்தினார். அவர் உருவாக்கிய 'பஞ்சசீலக் கொள்கை' ஆசியாவின் அமைதிக்கு அடிப்படையாக அமைந்தது.
*
இந்தியாவின் எதிர்காலம் குழந்தைகளிடம், அவர்கள் பெறும் கல்வியிடம் இருக்கிறது என்பதை ஆழமாக நம்பினார் நேரு. அனைவருக்குமான பொதுப் பள்ளிகளாக, அரசுப் பள்ளிகளை நாடெங்கும் உருவாக்க ஊக்கம் அளித்தவர், இன்றைய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடித் திட்டமாகப் பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பால், சத்துமாவு வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்.
*
பாபர் மசூதி எவ்வளவு பெரிய விவகாரம் ஆகும் என்பதையும் இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தை எப்படிப் பாதிக்கும் என்பதையும் அன்றைக்கே உணர்ந்திருந்தார் நேரு. 26.12.1949-ல் அயோத்தி பிரச்சினை தொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வர் ஜி.பி. பந்துக்குப் பிரதமர் நேரு அனுப்பிய தந்தி இது: "அயோத்தியில் நடந்த நிகழ்வுகளை அறிந்து வேதனை அடைந்தேன். இந்த விஷயத்தில் நீங்கள் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிகழ்வின்மூலம் உத்தரப் பிரதேசத்தில் ஒரு மோசமான முன்னுதாரணம் ஏற்படுத்தப்படுகிறது. இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்."
*
சீனப் போர் தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்னால் 'மான்செஸ்டர் கார்டியன்' என்ற பத்திரிகையின் நிருபர் டயா ஜின்கினுக்கு நேரு பேட்டியளித்தார். உங்களுடைய மிகப் பெரிய சாதனை எது என்று கேட்டபோது, அவர் பதிலாகக் குறிப்பிட்டது, "இந்துச் சட்டங்களைத் திருத்தியது.''
*
தன்னுடைய மரணத்தை 5 ஆண்டுகளுக்கு முன்னரே யூகித்திருந்தார் நேரு. 1958-ல் ஒரு நாள் தன்னுடைய தனி உதவியாளர் எம்.ஓ. மத்தாயிடம், "நான் 74 வயதுக்குப் பிறகு உயிரோடு இருக்க மாட்டேன்" என்று சொன்னார். ஆச்சரியம் அடைந்த மத்தாய், "அறிவியல் அணுகுமுறையும் நவீன சிந்தனையும் கொண்ட நீங்களும் ஜோதிடர்களின் வலையில் விழுந்துவிட்டீர்களா?" என்று பதிலுக்குக் கேட்டார். நேரு சொன்னார்: "என்னுடைய குடும்பத்தில் இருந்த முன்னோர்களின் வயதையெல்லாம் ஆராய்ந்தேன். அவையெல்லாவற்றையும் கூட்டிக் கழித்தால், 74 ஆண்டுகள், 6 மாதங்கள், 13 நாட்களே சராசரி ஆயுள் காலமாக வருகின்றன!"
*
நேருவுக்குப் பிறகு யார்? 1961 'சண்டே ரெவியூ' பேட்டியில் இந்தக் கேள்விக்குப் பதில் அளித்தார் நேரு. "எனக்குப் பிறகு ஒருவரைத் தேர்வுசெய்வது என்னுடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டது; குடும்ப ஆட்சியைத் தொடங்க நான் விரும்பவில்லை."
*
நேருவின் செல்வாக்கு ஆசியாவைத் தாண்டியும் நீள்கிறது. உலகின் முக்கியமான ஆளுமைகள் பலரிடமும் நேருவின் செல்வாக்கு இருந்தது. நெல்சன் மண்டேலா நேருவைத்தான் தன்னுடைய 'ஆதர்ச நாயகன்' என்று குறிப்பிட்டார்; கொர்ப்பசேவ் ஆளுமையிலும் நேரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.
****
இந்தியாவுக்காக மட்டுமல்ல, உலகத்துக்காகவும்...
நீண்ட போராட்டத்தின் முடிவில், வரலாற்றின் உதயத்தின்போது இந்தியத் தாய் தன்னுடைய முடிவில்லாத தேடலைத் தொடங்கி யிருக்கிறாள்...
இன்று நாம் கொண்டாடும் வெற்றிகள் ஒரு படிக்கல்தான், வாய்ப்புகளுக்கான ஒரு திறவுகோல்தான், மிகப் பெரிய வெற்றி களும் சாதனைகளும் நமக்காகக் காத்திருக்கின்றன. இந்த வாய்ப்பைப் பற்றிக்கொள்ளவும், எதிர்காலம் நமக்கு அளிக்க விருக்கும் சவால்களைச் சந்திக்கவும் நாம் துணிச்சல் மிக்கவர் களாக இருக்கிறோமா, புத்திசாலிகளாக இருக்கிறோமா?
இந்தியாவுக்கு சேவைசெய்வது என்பது துயரத்தில் வாடும் கோடிக் கணக்கான மக்களுக்கு சேவைசெய்வதுதான். அந்த சேவை என்பது வறுமையை ஒழிப்பது, அறியாமை இருளை அகற்றுவது, நோயற்ற வாழ்வை அளிப்பது, ஏற்றத்தாழ்வுகளை நீக்கி நாட்டின் வளங்களில் ஒவ்வொருவருக்கும் சமவாய்ப்பை அளிப்பது.
இந்த நன்னாளில் நம்முடைய சிந்தனையெல்லாம், இந்த சுதந்திரத்தை நமக்கு வாங்கித்தந்த தேசப்பிதாவை நோக்கித்தான் முதலில் செல்கிறது. இந்தியாவின் தொன்மையான உணர்வுகளுக்கு இலக்கணமாகத் திகழும் அவர், சுதந்திர தீபத்தையேற்றி நம்மைச் சுற்றியிருந்த அடிமை இருளைப் போக்கினார். அவருடைய போதனைகளுக்கு ஏற்ப நடக்கும் அருகதையற்ற சீடர்களாக, அவர் போதித்த உண்மைகளிலிருந்து நாம் விலகிச் சென்றோம். ஆனால், நாம் மட்டும் அல்ல; இனி வரும் தலைமுறைகளும் இந்தியாவின் அரும்புதல்வரான அவருடைய போதனைகளைத் தங்களுடைய இதயங்களிலே பொறித்துவைத்துக்கொள்வார்கள்.
நம்முடைய தலைமுறையைச் சேர்ந்த மிகப் பெரிய மகானின் லட்சியமே ஒவ்வொரு கண்ணிலிருந்தும் வழியும் நீர் துடைக்கப்பட வேண்டும் என்பதுதான். அது நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட தாக இருக்கலாம் - கண்ணீர் இருக்கும்வரை, துயரங்கள் தொடரும்வரை நம்முடைய பணிகள் முற்றுப்பெறாது...
எனவே, கடினமாக உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும், நம்முடைய கனவுகள் நனவுகளாக வேண்டும். அந்தக் கனவுகள் இந்தியாவுக்காக மட்டுமல்ல, அவை உலகத்துக்காகவும்கூட...
இந்த தேசத்தின் சேவைக்காக நாம் நம்மை மீண்டும் பிணைத்துக்கொள்வோம். ஜெய் ஹிந்த்!
- ஜவாஹர்லால் நேரு, 14.8.1947 அன்று நள்ளிரவில், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது டெல்லியில் ஆற்றிய உரையிலிருந்து...

No comments:

Post a Comment