எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய்வழி திறனாய்வுத் தேர்வுக்கு டிசம்பர் 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இதற்குத் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு டிசம்பர் 27-ம் தேதி திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் தற்போது 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு 7-ம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண் (எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 50 சதவீதம்) பெற்றிருக்க வேண்டியது அவசியம். தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்களை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் www.tndge.in வருகிற 29-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர் 2-ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணம் ரூ.50- உடன் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment