Saturday, 29 November 2014

பிறவிப் பகைவர்கள் - பாலஸ்தீனம், இஸ்ரேல் 4

கோலான் ஹைட்ஸ், சினாய் தீபகற்பம், காஸா நிலப்பரப்பு, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் என்று பல புதிய பகுதிகளைத் தன் வசம் கொண்டு வந்துவிட்டது இஸ்ரேல்.
அளவில் சின்ன நாடு. அதுவும் அப்போதுதான் உருவான நாடு. அப்படியிருந்தும் இஸ்ரேலினால் எப்படி பல்வேறு திசைகளிலிருந்து தாக்குதல் நடத்திய அரபு நாடுகளை சமாளிக்க முடிந்தது?
இரண்டு காரணங்கள். ஒன்று, அமெரிக்காவிடமிருந்து வந்து சேர்ந்த நவீன போர்க்கருவிகள். இரண்டு, ஏரியல் ஷாரன். இஸ்ரேல் ராணுவத்தின் தளபதியாக அப்போது விளங்கினார் ஏரியல் ஷாரன் (பல வருடங்களுக்குப் பிறகு அந்த நாட்டின் பிரதமரும் ஆனார்).
ராணுவச் சிப்பாயாகச் சேர்ந்து ராணுவ அதிகாரியாக வெகுவேகமாக உயர்ந்தவர் இவர். இஸ்ரேலின் சரித்திரத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தவர். 1948 போரில் மட்டுமல்ல அதற்குப் பிறகு நடந்த மிக முக்கியமான இரு போர்களிலும் இஸ்ரேல் அடைந்த வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தா.
இஸ்ரேல் மக்கள் இவரை ‘இஸ்ரேலின் மன்னர்’ என்று அன்புடன் அழைத்தனர். அமெரிக்க ராணுவம் இவரை வியந்து பார்த்தது. ‘போரில் இவ்வளவு புதுமையான வியூகங்களை ஒருவர் வகுக்க முடியுமா!’ என்று வெளிப்படையாகவே பாராட்டியது.
எடுத்துக்காட்டாக எகிப்து ராணுவத்தை இஸ்ரேல் ராணுவம் எதிர்கொண்டதைக் கூறலாம். சின்னச்சின்னப் பகுதிகளாக தன் ராணுவத்தை பல்வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று எகிப்து ராணுவத்தை தாக்கச் செய்தார் ஷாரன். இதன் காரணமாக எகிப்து ராணுவம் ஒன்றுபட்டு செயல்பட முடியாமல் அந்தந்தப் பகுதிகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. இது இஸ்ரேலுக்குப் பெரும் சாதகமாக அமைந்தது.
ராணுவத்திலிருந்து ஓய்வெடுத்த பிறகு ஷாரன் அரசியலில் சேர்ந்தார். லிகுட் என்ற கட்சியின் உறுப்பினராகி 2000ல் அந்தக் கட்சியின் தலைவரானார். பின்னர் 2001லிருந்து 2006 வரை இஸ்ரேலின் பிரதமராகவும் செயல்பட்டார். (பிரதமரான பிறகு இவர் சில சமாதானச் செயல்களில் ஈடுபட்டதைப் பிறகு பார்ப்போம்).
 - ஏரியல் ஷாரன்
2006ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சுமார் எட்டு வருடங்கள் படுத்த படுக்கையாகக் கிடந்து விட்டு 2014 ஜனவரியில் இறந்தார். தற்காப்பு என்ற இலக்கைத் தாண்டி ஆக்கிரமிப்பு என்ற கட்டத்தை இஸ்ரேல் அடைந்ததும் ஐ.நா. குறுக்கிட்டது.
‘‘ஆக்கிரமித்த பகுதிகளை திருப்பிக் கொடுத்துவிடு. அவர்களை உன்னிடம் இனி வாலாட்டாமல் இருக்கச் சொல்கிறேன்’’ என்று ஐ.நா. போட்ட டீலுக்கு இஸ்ரேல் ஒத்துக் கொள்வதாயில்லை. பாலஸ்தீனியர்கள் ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
‘‘எங்களுக்கென்று தாய் நாடே இல்லையே’’ என்று யூதர்கள் புலம்பியதுபோக, ‘‘எங்கள் தாயகம் எங்கள் கையைவிட்டுப் போயிடுச்சே’’ என்று பாலஸ்தீனியர்கள் கதறத் தொடங்கினார்கள். வருடங்கள் கழிந்தன. வன்மம் மட்டும் அப்படியேயும் அதிகமாகவும் மனங்களில் சுற்றிச் சுற்றி வந்தது. 1973ல் யோம் கிப்பூர் நாள் வந்தது. அது யூதர்களுக்கு மிக முக்கியமான ஒரு நாள். அந்த வருடம் அது முஸ்லிம்களுக்குப் புனிதமான ரம்ஜான் மாதத்தில் வந்தது.
அரபு முஸ்லிம்கள் அந்த நாளை வேறுவிதமாகக் ‘கொண்டாடத்’ தீர்மானித்துவிட்டனர். எகிப்து மற்றும் சிரியா நாட்டு ராணுவங்கள் தாங்கள் அமைதி உடன்படிக்கையில் ஒத்துக் கொண்ட எல்லைகளைத் தாண்டின. சினாய் தீபகற்பத்தை எகிப்து ராணுவம் தாண்டியது. கோலான் ஹைட்ஸ் என்ற பகுதியை சிரியா நாட்டு ராணுவம் தாண்டியது.
ஆறு நாட்கள் உக்கிரமான போர் நடந்தது. வேகவேகமாக அமெரிக்கா தனது ஆதரவை வார்த்தைகளின் மூலமும், போர்க்கருவிகளின் மூலமும் இஸ்ரேலுக்கு அளித்தது. சோவியத் யூனியன் தனது எக்கச்சக்கமான போர்க் கருவிகளை அரபு நாடுகளுக்கு அனுப்பியது.
ஆக மேலுக்கு இது அரபு நாடுகள்–இஸ்ரேல் போர் என்றாலும் ஒருவிதத்தில் இது அமெரிக்க - சோவியத் வல்லரசுகளின் போராகவே விளங்கியது.
சூயஸ் கால்வாயைத் தாண்டியது எகிப்திய ராணுவம். சினாய் தீபகற்பத்தை எளிதில் கடந்த எகிப்து அடுத்த மூன்று நாட்களில் தனது ராணுவம் முழுவதையும் இஸ்ரேலைத் தாக்குவதற்குத் தயார் நிலையில் வைத்துக் கொண்டது.
எகிப்திய ராணுவம் இஸ்ரேலைத் தாக்கும் அதே நேரத்தில் தங்களது தாக்குதலும் இருக்க வேண்டுமென்று திட்டமிட்டது சிரியா. அப்போதுதானே இஸ்ரேல் பரிதவிக்கும், அதன் ராணுவம் பிளவு படும், தோற்கும்! ஆனால் இஸ்ரேலிய ராணுவம் மீண்டும் தன் திறமையை நிரூபித்தது. சிரியாவின் ராணுவத்தைத் தனது எல்லைக் கோட்டை நெருங்க விடாமல் செய்தது. சொல்லப்போனால் சிரியாவுக்கு உள்ளேகூட இஸ்ரேலிய ராணுவம் நுழைந்தது.
அடுத்த வாரமே இஸ்ரேலிய ராணுவம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை நோக்கி எரிகுண்டுகளை வீசத் தொடங்கியது.
எகிப்தின் பிரதமர் அன்வர் சதாத் கவலைப்படத் தொடங்கினார். சினாய் தீபகற்பத்தின் இரண்டு முக்கிய கணவாய்களை தங்கள் வசம் கொண்டுவந்து விட்டால் தங்களை அசைக்க முடியாது என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் இஸ்ரேல் கடுமையாக பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சூயஸ் கால்வாயைத் தாண்டி எகிப்துக்குள் நுழைந்தது. எகிப்தின் தலைநகரம் கெய்ரோவை நோக்கி தன் தாக்குதலைத் தொடங்கியது.
திரைப்படத்தின் முடிவில் வரும் போலீஸ்போல இருதரப்பிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்ட பிறகு ஐ.நா. அமைதி ஒப்பந்தத்துக்கு முயற்சி செய்தது.
அக்டோபர் 24 அன்று இஸ்ரேல் ராணுவம் தான் ஒருபடி மேல் என்பதை தெளிவாகவே நிலைநிறுத்திக் கொண்டது. எகிப்து ராணுவத்தை சுற்றி வளைத்திருந்தது இஸ்ரேல் ராணுவம். இத்தனைக்கும் போரின் தொடக்க நாட்களில் இஸ்ரேலுக்குக் கொஞ்சம் பின்னடைவுதான்.
எகிப்துடன் மட்டும் சமாதானமாகப் போக இஸ்ரேல் ஒத்துக் கொண்டது. தான் எகிப்திடமிருந்து ஆக்கிரமித்த சினாய் தீபகற்பத்தை எகிப்துக்கு மீண்டும் அளிக்கவும் தயாரானது. ஏன் இந்த தாராளம்? எகிப்து சமாதான முயற்சிகளுக்கு தானாகவே முன்வந்தது முதல் காரணம். சோவியத் யூனியனிடமிருந்து எகிப்து தன்னைப் பிரித்துக் கொண்டது அடுத்த காரணம்.
யோம் கிப்பூர் போர் என்றே குறிப்பிடப்படும் இந்த ஆறு நாள்போரில் எகிப்து-சிரியா கூட்டணியை இந்த அளவுக்கு இஸ்ரேல் சிதறடித்தது அரபு நாடுகளுக்குப் பேரதிர்ச்சி கொடுத்தது. அமைதிப் பாதையை அவை கொஞ்சம் அதிகமாகவே யோசிக்கத் தொடங்கின.
(இன்னும் வரும்..)

No comments:

Post a Comment