Monday, 17 November 2014

சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகளை கண்காணிக்க தேர்தல் ஆணையத்தில் புதிய கமிட்டி: தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் அமைகிறது

தேர்தலில் வாட்ஸ் அப், பேஸ் புக் மற்றும் இன்ஸ்டாக்ராம் போன்ற சமூக வலைத் தளங்களை தவறாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளைக் கண்காணிக்க, தகவல் தொழில் நுட்பக் கமிட்டியை, தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து, இத்திட்டத்தை தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங் களில் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொதுத் தேர்தல் களை வெளிப்படையாக, அமைதி யாக நடத்தும் முறைகளைத் தெரிந்து கொள்ள, பல்வேறு நாடு கள் ஆர்வமாக உள்ளன. இதற்காக தேர்தல் ஆணையத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தப் படி, ஐ.நா. சபை சார்பில், இந்தியா வில் வெளிப்படையான தேர்தலுக்கு தகவல் தொழில்நுட்ப உதவிகள் அளிக்கப்படுகின்றன. இந்தியாவில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், ஹரியாணா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் இத்திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐ.நா.சபையின் மேம் பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த, தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முதலில் தேர்தல் ஆணையம் சார்பில் தகவல் தொழில்நுட்பக் கண்காணிப்புக் கமிட்டி அமைக் கப்பட உள்ளது. இக்கமிட்டியின் தலைவராக நிபுணத்துவம் பெற்ற தகவல் தொழில்நுட்ப வல்லுநர் நியமிக்கப்பட்டுள்ளார். குழுவின் மேற்பார்வையாளராக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி செயல்படுவார். அவரது வழிகாட்டுதலில் கண்காணிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப தேர்தல் மேம்பாட்டுக் குழு செயல் படும். கமிட்டியின் நிபுணராக செயல்பட உள்ள வல்லுநரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் துறை இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இத்திட்டத்தில் தேர்தல் துறை செயல்பாடுகள் மற்றும் அனைத்து தகவல்களும் மின்னணு தொழில் நுட்பத்துக்கு மாற்றப்படும். வாக் காளர்களின் பெயர், முகவரி மாற்றம் குறித்த விவரங்கள், வாக் காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகள், தகவல் கள், தொகுதி, வார்டு மற்றும் வாக்குச்சாவடி வாரியாக, போலி களை நீக்கி சரியான பட்டியலைத் தயாரித்து, அவற்றை மின்னணு முறைகளுக்கு மாற்றுதல் என அனைத்து பணிகளும் இத் திட்டத்தில் அடங்கும்.
தேர்தல் காலங்களில் விதிகளை மீறி, ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள், இணையத் தள பிரச்சாரம் மற்றும் களப் பிரச் சாரம் போன்றவற்றை தனியாக, இணைய மென் பொருள் (சாப்ட் வேர்) மூலம் கண்காணித்து, தலைமைத் தேர்தல் ஆணையத்துக் கும், உயரதிகாரிகளுக்கும் உடனுக் குடன் தகவல் அனுப்பப்படும். சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தும் அரசியல்வாதிகள் கண்காணிக்கப்படுவார்கள்.
குறிப்பாக மக்கள் மத்தியில் தகவல்களைப் பரப்புவதில் முன்ன ணியில் இருக்கும் வாட்ஸ் அப், முக நூல் (பேஸ் புக்), ட்விட்டர், டெலக்ராம் மற்றும் இன்ஸ்டாக்ராம் போன்ற சமூக வலைத் தளங்கள் கண்காணிக்கப்படும்.
தேர்தல் கால நடவடிக்கை குறித்த வீடியோக்களில் தில்லு முல்லுகள் நடைபெறாமல், அந்தந்த தேர்தல் அதிகாரி அலு வலகங்களில் கணிணிகளில் பதிவு செய்யப்படும். மேலும், தொலைக் காட்சி, செய்தித்தாள் மற்றும் இணையத்தள ஊடகங்களின் பெய்டு நியூஸ் எனப்படும், ஒரு தரப்பு ஆதரவு செய்திகளும் நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென் பொருள் மூலம் தானாகவே பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாவட்டத் தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் வாக்குச்சாவடி அதிகாரி வரை அனைவருக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் துறையின் செயல் பாடுகளை, தகவல் தொழில் நுட்பத்தில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி அறை வரையிலும் வீடியோ கான்பரன்ஸ் வசதிகள் செய்யப்படும். இதற்கு தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத் தலைமையகத்தில் கட்டுப்பாட்டு மையம் செயல்படும்.
இதன் மூலம் மிகவும் வெளிப்படையான, நேர்மையான, தொழில்நுட்ப ரீதியில் தேர்தலை நடத்துவதில், இந்தியா முதன் மையானது என்பது உலக அரங்கில் தொடர்ந்து நிரூபிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment