Friday, 14 November 2014

ஹா – ஹாங்காங் 3

ஹாங்காங் கைமாறும் (மீண்டும்) சடங்கு 1997 ஜூன் 30 அன்று நடந்தேறியது. முக்கிய விருந்தினராக வேல்ஸ் இளவரசர் வந்திருந்து அரசியின் சார்பில் ஒரு பிரியாவிடை உரையாற்றினார். அப்போதுதான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேரும் வந்திருந்தார். சீனாவின் சார்பில் அதன் தலைவர் ஜியாங் ஜெமின் வந்திருந்தார்.
ஹாங்காங் மீண்டும் சீனாவின் பிடிக்குள் வந்தது. பிரிட்டனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஹாங்காங்கிற்கு சுதந்திரமான சிறப்பு அந்தஸ்து தர ஒத்துக் கொண்டாலும் சீனா தன் கெடுபிடிகளை அவ்வப்போது காட்டத்தான் செய்கிறது.
‘ஹாங்காங் பள்ளிகளில் தேசிய உணர்வு குறைவாகவே ஊட்டப்படுகிறது’ என்று சீன உயர் அதிகாரி ஒருவர் கருத்து கூறினார். தங்களுடன் மீண்டும் இணைந்த ஒரு பகுதி தனித்துவத்துடன்தான் இருப்பேன் என்பதைச் சீனா எப்படி அனுமதிக்கும் என்ற கேள்வி நியாயமானதுதான். இதற்கு மேலும் வலு சேர்க்கிறது சீனாவின் அரசியல் சூழல்.
‘ஒரே கட்சியின் பிடியில் சிக்கிக்கொண்ட சர்வாதிகார அரசு’ என்பதுதான் சீன அரசைப் பற்றிய உங்கள் எண்ணமா? ஆனால் அது முழு உண்மையல்ல. சீனாவுக்கும் அரசியலமைப்புச் சட்டம் உண்டு! அங்கு ஜனாதிபதியாக வேண்டுமானால் ‘நாற்பத்தைந்து வயதாகியிருக்க வேண்டும். இருமுறைக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியாது’ என்று மட்டும்தான் சொல்கிறது அவர்கள் அரசியலமைப்பு சட்டம். அதாவது ஒரு ‘காம்ரேட்’ மட்டுமே ஜனாதிபதியாக முடியும் என்பதில்லை. ஆனால் ..
தேசிய மக்கள் பேரவை என்ற அமைப்புதான் சீன நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும். (கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் கைகாட்டும் நபரைத்தான் பேரவை ஒப்புக் கொள்ளும்). ஒவ்வொரு தேர்தலிலும் ஒரே ஒருவரைத்தான் தேசிய மக்கள் பேரவை பரிந்துரைக்கும்! அவர்தான் சீனாவின் ஜனாதிபதி. அதாவது போட்டியே கிடையாது. இவ்வளவு சக்தி வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் (சேர்மென்) பதவியில் இதுவரை நான்கு பேர்தான் இருந்திருக்கிறார்கள். சென் டுக்ஸியூ, மாசேதுங், ஹுவா குவாஃபெங், ஹூயாவோ பாங்.
இப்போது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தலைவர் என்று யாரும் இல்லை. 1982க்குப் பிறகு அந்தப் பதவியின் சிறப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டன. அப்போதிலிருந்து கட்சியின் பொதுச் செயலாளர் பதவிதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. இதற்குத் தகுந்தாற்போல் அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட்டது. சீனக் குடியரசின் ப்ரிமீயர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்தான் நாட்டை வழிநடத்திச் செல்வார். கட்சி, அரசு ஆகிய இரண்டிலுமே ஜனாதிபதி தலையிடமாட்டார்.
இப்படி அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட்ட பிறகு பெரும்பாலும் சீனாவின் ஜனாதிபதியே கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் ‘தேர்ந்தெடுக்கப்படுகிறார்’. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர பிற கட்சிகளும் உண்டு என்றால் நம்ப வேண்டும். ஆனால் இவை தேர்தலில் போட்டியிடுவதில்லை. கலை, கல்வி, மருத்துவம் போன்ற தனிச்சிறப்புப் பெற்ற துறைகளில்தான் இவை கவனம் செலுத்துகின்றன. இப்படி மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு ஒவ்வொரு மாநிலக் குழுவிலும் போனால் போகிறது என்று இடம் தருகிறது சீன அரசு. இந்தக் கட்சிகள் ஆலோசனை கூறுவதோடு அடங்கிவிட வேண்டும்.
சீனா ஒரு வியப்புக்குரிய நாடாகவே இருந்து வருகிறது. ஒருபுறம் சந்தைப் பொருளாதாரம், மற்றொருபுறம் அதிகார மையம், ஒரே கட்சி ஆட்சி! ஜனநாயகம் ஏன் சீனாவில் இன்னமும் மலரவில்லை? அப்படி மலர வேண்டும் என்ற முணுமுணுப்பு அங்கு அவ்வப்போது எழத்தான் செய்கிறது. ஆனால் உடனே எங்கிருந்தோ ‘தேசியவாதம்’ எனும் வாதம் பிரமாண்டதாக எழும். “இஷ்டத்துக்கு சுதந்திரம் கொடுத்தால் தைவான், திபெத் போன்ற `அலங்கோல நிகழ்ச்சிகள்’ தான் நடக்கும்’’ என்பார்கள். முணுமுணுப்புகள் அடங்கிவிடும்.
தவிர, “திடீரென்று ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தினால் குழப்பங்கள் விளையும். அது பொருளாதார மற்றும் அரசியல் தற்கொலைக்கு ஒப்பானதாகும்’ என்று கருதுபவர்களும் உண்டு. கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக வெளிநாட்டினரால் பலவிதங்களில் சிறுமைப்படுத்தப்பட்ட சீனர்கள் பிற நாடுகளை ஒருவித அச்சத்தோடும் வெறுப்போடும்தான் இன்னமும் பார்க்கிறார்கள்.
1839-ல் பிரிட்டனோடு தொடங்கிய ஓபியம் யுத்தத்திலிருந்து 1945-ல் முடிந்த ஜப்பானிய முற்றுகை வரை அவர்கள் கண்டதெல்லாம் அவமானமும் ஆக்கிரமிப்பும்தான். பரப்பில் படர்ந்த, பழங்கால சிறப்பு கொண்ட தங்கள் தேசத்துக்கு இவ்வளவு இழிவா எனும் அவமானம் அவர்கள் மனதில் நிறைந்திருக்கிறது. பிற நாட்டு சக்திகளை ஒட்டுமொத்தமாக வெளியேற்றிய காரணத்தால் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘கிட்டத்தட்ட’ சர்வாதிகாரத்தை அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்ளச் செய்திருப்பது இந்த உணர்வுதான்.
ஆனால் ஹாங்காங் மக்கள் சுதந்திரத்தை இடையே அனுபவித்து விட்டவர்கள். பொருளாதார வளத்தினால் உண்டான நியாயமான கர்வம் வேறு. அதனால் மோதல்கள் பலமாகவே தொடங்கின.

No comments:

Post a Comment