நாட்டு நலனுக்காக உருவாக்கப்பட்ட மொழிக் கொள்கைக்கு இப்போது குழி தோண்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மொழியிலும் உள்ள சிந்தனைகளை அந்தந்த மொழியின் வழியே படிப்பது அந்தச் சிந்தனைகளை அவற்றின் முழுப் பரிமாணத்தில் புரிந்துகொள்ள உதவும். ஆனால், பள்ளிப் படிப்பில் கிடைப்பது 10 ஆண்டுகளே. இந்தக் குறுகிய ஆண்டுகளில் எத்தனை மொழிகள் படிக்க வேண்டும் என்பது கல்வியில் மொழிக் கொள்கையின் மூலம் அரசு முடிவுசெய்ய வேண்டிய ஒன்று. அரசு நாட்டின் தேவையையும், அந்தத் தேவையை நிறைவேற்றக் குடிமக்கள் பெற வேண்டிய மொழித் திறனையும் முன்னிறுத்திக் கொள்கையை வகுக்கும்.
இப்படி 1961-ல் வகுக்கப்பட்டதுதான் மும்மொழிக் கொள்கை. மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் சமரசக் கொள்கையாக இது ஒப்புக்கொள்ளப்பட்டது. அப்போது கல்விக் கொள்கைகளை வகுக்கும் பொறுப்பு மாநிலங்களிடம் இருந்தது. மும்மொழிக் கொள்கை நாடு முழுவதற்கும் பொருந்தும் நாட்டுக் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்குப் பின் வந்த எல்லாக் கல்விக் கொள்கைகளிலும் - பல கட்சி சார்ந்த கூட்டணி ஆட்சிக் காலங்களிலும் - மொழிக் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மும்மொழிக் கொள்கையில் மாற்றம்
இருப்பினும், மாநிலங்கள் இந்தக் கொள்கையில் மாற்றம்செய்ததும் நடந்தது. தமிழ்நாட்டில் 1968-ல் திமுக அரசு மும்மொழிக் கொள்கையை இரு மொழிக் கொள்கையாகச் சட்டமன்றத் தீர்மானத்தின் மூலம் மாற்றியது. தமிழ் அடையாளத்தின்மீது கட்டுமானம்
செய்யப்பட்ட மாநில ஒருமைப்பாட்டுக்கு, இந்தி (அல்லது இன்னொரு இந்திய மொழி) தேவை இல்லை என்ற நோக்கத்தைக் கொண்டு இந்தக் கொள்கை அமைந்தது. தமிழ்நாட்டு மாணவர்களின் வாழ்க்கை வாய்ப்புகளுக்கு ஆங்கிலமே போதும் என்ற நோக்கத்தையும் இருமொழிக் கொள்கை உள்ளடக்கியது. மத்திய அரசு தான் நடத்திய கேந்திரிய வித்தியாலயங் களில் இருமொழிக் கொள்கையைப் பின்பற்றியது. தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின் கீழ் வரும் பள்ளிகளில் தமிழும் ஆங்கிலமும் கற்பதுபோல், மத்தியக் கல்வி வாரியத்தின்கீழ் உள்ள கேந்திரிய வித்தியாசாலைகளில் மாணவர்கள் இந்தியும் ஆங்கிலமும் கற்றனர். இந்திய அரசில் பணிபுரியவும், இந்தியப் பொருளாதாரத்தில் பங்குகொள்ளவும் இந்த இரண்டு மொழிகளே போதும் என்ற நோக்கத்தில் இந்த இருமொழிக் கொள்கை அமைந்தது. மாநிலம் விட்டு மாநிலம் வேலை, வணிகம் நிமித்தமாகப் போகின்றவர்களை மனதில் வைத்து இந்த இருமொழிக் கொள்கை வரையறுக்கப்பட்டது.
மும்மொழிக் கொள்கையில் குறிக்கப்பட்ட மூன்று மொழிகள்: தாய்மொழி அல்லது வட்டார மொழி (அதாவது, மாநில மொழி), ஆங்கிலம் அல்லது வேறொரு அயல்மொழி, இன்னொரு இந்திய மொழி. இந்தக் கொள்கையின் அடிப்படைத் தத்துவம் இதுதான்: மாணவர்கள் ஜனநாயக அரசில் பங்காற்றவும், பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக் கவும் மாநிலங்களின் ஆட்சிமொழியையும் மத்திய அரசின் இரண்டு ஆட்சி மொழிகளையும் பயில வேண்டும்; அதோடு, நாட்டின் பன்மொழிப் பாரம்பரியத்தைத் தொடரவும், மொழியறிவின் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்கவும் இன்னொரு மொழி படிக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இந்தக் கொள்கை பலவீனப்படுத்தப்பட்டது.
மூன்றாவது மொழி
இந்தியைத் தாய்மொழியாகப் பேசாத மாநில மாணவர் களுக்கு மூன்றாவது மொழியாக இந்தி இருக்கும். இந்தியைத் தாய்மொழியாகவும் ஆட்சிமொழியாகவும் கொண்ட மாநில மாணவர்கள் வேறொரு நவீன இந்திய மொழியைப் பயில வேண்டும்; அந்த மொழி தென்னிந்திய மொழிகளில் ஒன்றாக இருப்பது விரும்பத் தக்கது. இரண்டாவது வகை மாணவர்களுக்கு வேறொரு இந்திய மொழியைப் படிப்பதில் பொருளாதார ஊக்கம் இல்லை. இந்தியாவின் இன்னொரு பகுதியின் மொழியையும் கலாச்சாரத்தையும் புரிந்துகொண்டு ஏற்பதில் மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் பெரிய நன்மை எதையும் பார்க்கவில்லை. அதனால், இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதம் படிப்பது பெருவழக்கு ஆயிற்று. மும் மொழிக் கொள்கைக்கு இது முரண்பட்டாலும், அந்த மாநில அரசுகள் ஆதரவு அளித்தன. சம்ஸ்கிருதம் படிப்பது அதிக மதிப்பெண்கள் பெற உதவும்; அது உயர் கல்வியில் இடம்பெற உதவும் என்பது இந்த ஆதரவுக்கு ஒரு காரணம். சம்ஸ்கிருதத்துக்கு உள்ள மதச்சார்பும் இந்தியப் பாரம்பரியக் கலாச்சார அடை யாளமும் இன்னொரு காரணம். இந்த இரண்டு காரணங்களும் மேல்தட்டு மாணவர்களின் தேவைகளை நிறைவுசெய்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவர்களுடைய நன்மைக்காக இந்தி மாநிலங்களில் கீழ்த்தட்டு மாணவர்களும் சம்ஸ்கிருதம் படிக்கும் நிலை ஏற்படுகிறது. செம்மொழியான அரபு மொழிக்கு இந்தத் தகுதி தரப்படவில்லை.
சிறுபான்மையினரின் தாய்மொழி
மூன்று மொழிகளில் முதல் மொழியாகத் தாய்மொழி அல்லது மாநில மொழியை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம். மாநிலத்தின் பெரும்பான்மை யோருக்குத் தாய்மொழியே மாநில மொழி; மொழிச் சிறுபான்மையோருடைய மொழிதான் இங்கு தாய்மொழி. சிறுபான்மை மாணவர்கள் தங்கள் தாய்மொழியைமட்டும் பள்ளியில் படித்தால், அவர்களுக்கு மாநில மொழியில் எழுத்தறிவும் உயர் திறனும் இல்லாமல் போகலாம். இது மும்மொழிக் கொள்கையின் இரு நோக்கங்களான ஜனநாயக அரசில் பங்கேற்பதையும் பொருளாதார வாய்ப்பை அதிகரிப்பதையும் நிறைவேற்றாது. சிறுபான்மையினர் இரண்டாவது காரணத்துக்காக ஆங்கிலமே போதும் என்று நினைத்து, ஆங்கிலவழிக் கல்வியை நாடு கிறார்கள். மாநில மொழி பயில்வதை அரசு கட்டாயப் படுத்தினால் நீதிமன்றங்களின் பார்வையில் அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.
மும்மொழிக் கொள்கையில் சிறுபான்மை மொழிக்கும் பெரும்பான்மை மொழிக்கும் மோதல் ஏற்படுகிறது. இரண்டையும் கற்பது சிறுபான்மையினருக்கு மொழிச் சுமையாகிக் கல்வியில் சமத்துவக் கொள்கைக்கு முரணாகிறது என்பது ஒரு வாதம். செம்மொழியை எந்தக் காரணத்துக்காகவோ படிக்க விரும்பினால், மும்மொழிக் கொள்கையில் இடம் இல்லை. பாடத்திட்டத்தில் இன்றைய தமிழுக்கு முதல் மொழியாக இடம் தந்து, செம்மொழித் தமிழை விரும்புகிறவர்கள் அதைத் தனியாகப் படிக்கும் ஒரு கொள்கையை இதன் மூலம் அமல்படுத்த முடியாது.
செம்மொழி
கேந்திரிய வித்தியாலயங்களில் படிக்கும் மாண வர்கள், நாட்டின் அதிகார வர்க்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் வாய்ப்பு அதிகம். இந்த வாய்ப்பை மத்திய வர்க்கத்தினருக்கு அளிப்பது இந்தப் பள்ளிகளின் ஒரு நோக்கம். பல மாநிலங்களைச் சேர்ந்த இவர்கள் தங்கள் தாய்மொழி கற்காத பட்டதாரிகளாகப் பதவிகளில் அமர்வது நாட்டின் மேலாண்மைக்கு நல்லதல்ல என்ற விமரிசனத்தை எதிர்கொள்ளும் வகையில், இந்தப் பள்ளிகள் மூன்றாவது மொழியை 80-களிலிருந்து கற்பிக்கத் தொடங்கின. ஆனால், நடைமுறையில் பெரும்பாலானவர்கள் கற்கும் மொழி சம்ஸ்கிருதம் ஆயிற்று.
ஒரு மொழி எண்ணம்
நாட்டில் சந்தைப் பொருளாதாரம் மேலோங்க ஆரம்பித்தபோது, மாணவர்களைச் சந்தைக்குத் தயார்ப் படுத்துவதே கல்வியின் நோக்கம் என்னும் கருத்து வலுப்பெற ஆரம்பித்தபோது, இதற்கு ஆங்கிலம் ஒன்றே போதும் என்ற எண்ணம் முளைவிடத் தொடங் கியது. நாட்டின் மொழிக் கொள்கைக்கு ஏற்பக் கூடுதல் மொழிகள் படிக்க வேண்டுமென்றால், அவை பிரெஞ்சு, ஜெர்மன், சீனம் போன்ற மொழிகளாக இருக்கலாம் என்ற எண்ணம் வளர்ந்தது. இந்த மொழிகள் பேசும் நாடுகள் தங்கள் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளப் பண வசதியும் ஆசிரியப் பயிற்சி வசதியும் செய்துதந்தன. இந்த மொழிகள் மேல்தட்டு மாணவர்கள் உலக அளவில் கல்வி, வேலைவாய்ப்புப் பெற உதவும். அவர்களுக்கு உதவுவதற்காக எல்லா மாணவர்களுக்கும் உகந்ததாகக் கல்விக் கொள்கையில் அயல்மொழிப் படிப்பு இடம்பெற்றது. மும்மொழிக் கொள்கையின் நோக்கம் மறக்கப்பட்டது; அந்தக் கொள்கை உருமாறியது.
பல மொழிகளின் தனிப்பட்ட தேவை
மாணவர்கள் எத்தனை மொழிகளும் படிக்கலாம். அது செம்மொழியாகவோ, பிற நாட்டு மொழியாகவோ, பக்கத்து மாநில மொழியாகவோ இருக்கலாம். பள்ளிகள் அதற்கு வசதி செய்துகொடுக்க வேண்டும். அவற்றைப் படிப்பது நாட்டின் கல்விக் கொள்கைக்கு மேலதிகமாக, மாணவர்கள் தங்கள் நலனுக்காக அதிகப்படியாக, தங்கள் நேரத்தைச் செலவிடுவதாக இருக்க வேண்டும். சிலருடைய தேவை எல்லாருடைய தேவையாகவும் இருக்க முடியாது. அது ஜெர்மன் மொழிக்கும் பொருந்தும்; சம்ஸ்கிருத மொழிக்கும் பொருந்தும். அப்படி ஆக்குவது அதிகார வர்க்கத்தின் நலனுக்கு முன்னுரிமை கொடுப்பதாகும்; ஆதிக்கச் சாதி யினரின் கலாச்சார அடையாளத்துக்கு முன்னுரிமை கொடுப்பதாகும். நாட்டின் ஒட்டுமொத்த நலனை மனத்தில் கொண்டு உருவான மொழிக் கொள்கைக்குக் குழி தோண்டுவதாகும்.
- இ. அண்ணாமலை,
சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசியத் துறையில் வருகைதரு பேராசிரியர்.
No comments:
Post a Comment