கோவாவில் அடர்ந்த காட்டுக்குள் தூத் சாகர் அருவிக்கு அருகே, தண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்த ஒரு பெரிய பாறையின் மீது ஒரு நண்டைக் கண்டேன். தன் மீது தண்ணீர் விழும்படியாக, கெட்டியாகப் பாறையைப் பற்றிக்கொண்டு அது அமர்ந்திருந்தது, அந்தப் பெரிய சிவப்பு நண்டு. கண் இமைக்காமல் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, படமும் எடுத்துக்கொண்டேன்.
நான் நடந்து செல்லச் செல்ல இன்னும் நிறைய நன்னீர் நண்டுகள், பாறையைப் பற்றிக்கொண்டு இருந்ததைக் கண்டேன். அதன் பெரிய உருவமும், வசீகரிக்கும் சிவப்பு நிறமும் வியப்பைத் தந்தன. இந்த மாதிரி தனித்துவமான நன்னீர் நண்டு இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் தனித்துவமான சில பகுதிகளில் மட்டுமே உள்ளன.
கூட்டம் கூட்டமாக
அந்த வாரத்தில் போண்ட்லா காட்டுயிர் சரணாலயத்தில் சுமார் ஆயிரம் நண்டுகள் சாலையைக் கடந்து, சாலை ஓரமாய்த் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த ஓடையில் குதிப்பதைக் கண்டபோது ஏற்பட்ட ஆச்சரியம் இன்னும் அகலவில்லை.
இப்படியாகப் பெரிதும் சிறியதுமாய், ஒன்றன் மேல் ஒன்றாக விழுந்து, நண்டுகள் கூட்டமாகக் காட்டுச் சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் எண்ணற்ற நண்டுகள் அடிபட்டும், காயம்பட்டும், இறந்து போய்க் காய்ந்து ஒட்டிக்கொண்டிருப்பதை வெகு தொலைவுவரை பார்த்தபோது வருத்தமாக இருந்தது.
இந்தியாவில் ஒரே ஒரு நண்டு இனம் மட்டுமே இந்தியக் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. அது தென்னை நண்டுகள் (Bigrus latro) - அந்த இனம் தப்பிப் பிழைக்கும் என்று நம்புவோம்.
நண்டு ஆராய்ச்சி
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள நன்னீர் இறால்கள், நண்டுகளின் (Decapod crustaceans) பாதுகாப்பு நிலை குறித்து முதல்முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. போதுமான ஆராய்ச்சிகள் இல்லாத முதுகெலும்பில்லாத இந்த நன்னீர் உயிரினம், நன்னீர் உணவுச் சங்கிலியிலும், சூழல் தொகுதியிலும் மிகப் பெரிய பங்காற்றிவருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் நன்னீர் இறால் (Shrimps), நண்டுகள் (Crabs) உள்ளிட்ட நன்னீர் உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. சுமார் 49 நன்னீர் இறால்கள், 39 நன்னீர் நண்டு இனங்கள் வகைப்படுத்தப்படாமலும், விரிவான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படாமலும் இருப்பதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த நண்டு, இறால் வகைகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழும் ஓரிட வாழ்விகள் அதிகம்.
அழிவும் பாதுகாப்பும்
இந்த ஆராய்ச்சியின் முடிவில் மூன்று இனங்கள் அழியும் தறுவாயில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் அழிவுக்கான முக்கியக் காரணங்கள்: காப்பி, தேயிலை, ரப்பர், மிளகு போன்றவற்றைப் பயிரிடக் காடுகளை அழித்ததும், பூச்சிக்கொல்லிகள் மூலமாக வரும் கழிவு, மாசுபாடுகளும். அத்துடன் வாழிட அழிப்பும் முக்கியக் காரணம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அறிக்கையின் தயாரிப்பில் பங்களித்தவர்களில் ஒருவரான கோவை ஜூ அவுட்ரீச் அமைப்பைச் சேர்ந்த சஞ்சய் மொலூர் “சூழலியலின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான இந்த நன்னீர் இனங்களைப் பாதுகாக்க, உடனடி ஆராய்ச்சிகள், பாதுகாப்பு மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது" என்று கூறினார். முதுகெலும்பில்லாத இந்தச் சிறிய உயிரினத்தையும், அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க மேற்குத் தொடர்ச்சி மலையில் ஐந்து பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
எதிர்காலம்
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்தான் என்றில்லை. நம் ஊரில் வயல் பக்கம், ஓடைக் கரைகளில் குழிக்குள் பதுங்கியிருந்த நண்டுகள் அதிவேகமாக அழிந்து வருகின்றன. பூச்சிக்கொல்லிகளும், வேதி உரங்களுமே இதற்கு முக்கியக் காரணம். மேலும் வாழிட அழிப்பும், முறையற்ற சுற்றுலாவும் தடுத்து நிறுத்தப்படாதவரை, இவற்றின் அழிவைத் தடுத்து நிறுத்த முடியாது.
மழைக் காலத்தில் புது விருந்தாளியாய், நம் வீட்டுப் பக்கமும், வயலிலும் எட்டிப் பார்க்கும் சின்ன நண்டுகளைப் பார்த்துப் பரவசமடைந்த, ரசித்த தருணங்கள் நமது வாரிசுகளுக்குக் கிடைக்குமா?
கட்டுரையாளர்,
ஆராய்ச்சி மாணவர்,
தொடர்புக்கு: brawinkumar@zooreach.org
ஆராய்ச்சி மாணவர்,
தொடர்புக்கு: brawinkumar@zooreach.org
No comments:
Post a Comment