Saturday, 29 November 2014

பிறவிப் பகைவர்கள் - பாலஸ்தீனம், இஸ்ரேல் 3

முஸ்லிம்களுக்கான முதல் வழிபாட்டு திசையாக விளங்கியது ஜெருசலேம் தான். மெக்காவில் இருக்கும்போது முஸ்லிம்கள் ஜெருசலேம் உள்ள திசையை நோக்கிதான் வணங்குவார்கள். தொடக்கத்தில் மெதினாவிலுள்ள மசூதிகள்கூட ஜெருசலேம் உள்ள திசையை நோக்கியே கட்டப்பட்டன. (பின்னர் இவை மெக்காவை நோக்கி கட்டப்பட்டன). நபிகள் நாயகத்துக்குப் பிறகு அவரு டைய பல தோழர்களும், சீடர் களும் ஜெருசலேம் நகரில் வாழ்ந்து மறைந்தனர். அவர்கள் புதைக்கப்பட்டது இந்த நகரில்தான்.
ஆக வெறும் ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பு கூட இல்லாத ஜெருசலேம் நகரில் யூத ஆலயம், மசூதி, மாதாகோவில் என்று பெரும் சரித்திரச் சிறப்பு பெற்ற பல மதச் சின்னங்கள் அமைந்துவிட்டன. பிரச்னைகள் கிளம்பாமல் இருந்தால்தானே அதிசயம்?
இப்போது அந்தப் பிரபல ஆலயத்தில் வழிபாடு செய்பவர்கள் யார்? ஒரு காலத்தில் பிரம்மாண்ட யூத ஆலயமாக இருந்து பின்னர் தரைமட்டமான அதன் கீழ்த் தளத்தில் யூதர்கள் இப்போதும் பிரார்த்தனை செய்கிறார்கள். அங்கு இதற்காக ஒரு பெரிய அரங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு மேல் தளத்தில் இருக்கிறது ஹரம் அல் ஷாரிஃப் (இதற்குப் பொருள் ‘புனிதமான சரணாலயம்’). மெக்காவுக்கும், மெதினாவுக்கும் அடுத்ததாக இஸ்லாமிய மார்க்கத்தினரின் மூன்றாவது புனிதத் தலம் இதுதான். அதாவது இங்குள்ள தங்கத்தால் மூடப்பட்ட மேற்கூரை.
யூதர்கள் கட்டடத்தின் மேல் பகுதிக்குச் சென்று தங்கள் பிரார்த்தனைகளை நடத்த வேண்டுமென்று கோரி வருகிறார்கள். பழைய ஆலயத்தில் அப்படித்தானே அவர்கள் வழிபாடு இருந்தது! ஆனால் முஸ்லிம்கள் மறுக்கிறார்கள்.
2014 அக்டோபர் 29 அன்று யூத மதத்தின் தீவிர ஆதரவாளர் ஒருவர் பாலஸ்தீனியர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட, கலவரம் பெரிதானது. இதற்குப் பிறகு கடுமையான சோதனைக்குப் பிறகே, குறைந்த எண்ணிக்கையில் முஸ்லிம்கள் அந்த ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பகைமை அதிகமாகிவிட்டது. ஜெருசலேம் நகரம் பலத்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது..
ஜெருசலேம் நகரை யூதமயமாக்குகிறார்கள் என்பதைக் கிண்டலாக ‘Re-jew-venating’ என்று குறிப்பிடுகிறார்கள் பாலஸ்தீனியர்கள். இஸ்ரேலின் இந்தப் போக்குக்குக் காரணம் பயம் என்றுகூடச் சொல்லலாம். படமெடுக்கும் பாம்பின் பின்னணி!
1947ல் ஐ.நா. ஒரு திட்டத்தை அறிவித்ததைக் குறிப்பிட்டோம் ‘’பாலஸ்தீனம் இரண்டாக்கப்பட வேண்டும். ஒரு பகுதி அரபு மக்களுக்கு. மற்றொன்று யூத இனத்தவருக்கு’’. கூடவே அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் பிரிட்டன் தன் ராணுவம் உள்ளிட்ட நிர்வாகத்தை வாபஸ் பெறவேண்டும் என்றும் அதற்கடுத்த இரு மாதங்களில் புதிய நாடுகள் உருவாகிவிட வேண்டும் என்றும் கூறியிருந்தது.
யூதர்கள் உடனடியாக மேற்படி ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண்டுவிட்டனர். ஆனால் அரபுத் தலைவர்கள் ஐ.நா.வின் முடிவை ஏற்க மறுத்தனர். பாலஸ்தீனப் பகுதியைத் துண்டாக்கினால் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றனர்.
ஐ.நா.வின் கெடு முடிவதற்கு முன்பாகவே இஸ்ரேல் தன்னை தனிச்சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. அரபு நாடுகள் போர்க் கொடி உயர்த்தின. எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து பாலஸ்தீனப் பகுதிக்குள் நுழைந்தன. அங்கிருந்தபடியே யூதர்கள் குடியிருப்புகளின்மீது தாக்குதல்களைத் தொடங்கின.
கர்ப்பம் அடைந்திருந்தால் பிரசவம் நடந்திருக்கும். ஆனால் பத்து மாதங்கள் போர் நடந்த பிறகும் எந்த அமைதியும் பிரசவித்துவிடவில்லை. பாலஸ்தீனப் பகுதியில் மட்டுமல்லாது (எகிப்தின் ஒரு பகுதியான) சினாய் தீபகற்பத்திலும், தெற்கு லெபனானிலும்கூட போர் நடைபெற்றது. விளைவு பொதுவான தர்க்கத்துக்கு எதிரானதாக இருந்தது. குட்டியூண்டு இஸ்ரேல் தன்னைவிட மிகப் பெரும் அரபு நாடுகளின் தாக்குதலை தாக்குப்பிடித்தது மட்டுமல்ல, அதைத் தாண்டியும் சென்றது.
தனது முழுப் பகுதியையும் பாதுகாத்துக் கொண்டதோடு பாலஸ்தீனத்துக்காக ஐ.நா. ஒதுக்கிய பகுதியில் சுமார் 60 சதவிகிதத்தை தன் வசம் எடுத்துக் கொண்டது. இதில் யூதர்கள் அதிகம் வாழும் பகுதிகளாகக் கருதப்பட்ட (ஆனால் ஐ.நா.வால் அவர்களுக்கு அளிக்கப்படாத) ஜஃப்பா, லிட்டா போன்ற பகுதிகளும், மேற்குக் கரையும் அடக்கம்.
ஆக அதிகாரபூர்வமாக பாலஸ்தீனம் என்ற நாடு பிறக்கவில்லை. ஆனால் இஸ்ரேல் என்ற நாடு பிறந்து ஐ.நாவின் அங்கீகாரத்தையும் பெற்றுவிட்டது.
1949-ல் அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இஸ்ரேலையும், பாலஸ்தீனப் பகுதியையும் பிரிக்கும் ‘பச்சைக் கோடு’ ஒன்றை போரிட்ட அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டன. இந்தப் புதிய கோட்டின் படி ஐ.நா. அறிவித்த பகுதியைவிட இஸ்ரேலுக்கு மிக அதிகமான பகுதிகள் வசமாயின. புதிய எல்லைகளை அதிகாரபூர்வமாக அரபுநாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றா லும் அந்த எல்லைக்குள் ஆக்ரமிக்க மாட்டோம் என்று அமைதிக் கோணத்தில் கையெழுத்திட்டன.
இதன் விளைவு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இஸ்ரேலின் வசப்பட்ட புதிய பகுதிகளில் வாழ்ந்த ஏழு லட்சம் பாலஸ்தீன அரபு மக்கள் அங்கிருந்து வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர். ‘பாலஸ்தீன அகதிகள்’ என்ற புதியதொரு பரிதாபக் கூட்டம் உருவாகத் தொடங்கியது.
இதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் யூதர்கள் அங்கிருந்து வெளியேறு மாறு கட்டாயப்படத்தப்பட்டனர். இருதரப்பையும் சேர்ந்த அமைதி விரும்பிகளான அப்பாவி மக்களும் இதனால் மிகப் பெரும் துன்பத்துக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளானார்கள்.
(இன்னும் வரும்..)

No comments:

Post a Comment