1) துளி வெளிச்சம், பேரொளி!
வங்கதேசத் தலைநகர் டாக்காவின் மொகம்மத்பூர் பகுதியில், சூரிய வெளிச்சம் படாத அளவுக்கு நெருக்கமாக அமைந்த குடிசைகளில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியில் மின்னுகிறார்கள். வருடத்தின் பாதி நாட்கள் மின்சாரம் இருக்காது என்பதால், பகலிலும் இருட்டுதான் அங்கே. இதற்கான எளிய தீர்வுதான் ‘பாட்டில் விளக்கு’. வீட்டின் மேற்கூரையில் பொருத்தப்பட்ட பாட்டிலில் குளோரின் கலந்த நீர் ஊற்றப்பட்டிருக்கிறது. கூரையின் மீது படும் சூரிய வெளிச்சம், இந்த பாட்டிலில் நிரவி, அந்த அறைக்கு வெளிச்சம் தருகிறது. அற்புதமான இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், பிரேசிலைச் சேர்ந்த ஆல்ப்ரெடோ மோஸர். தனது கண்டுபிடிப்பை, வங்கதேசத்தின் ‘சேஞ்ச்’ என்ற தொண்டு நிறுவனத்திடம் பகிர்ந்திருக்கிறார் மோஸர். பகலில் சூரிய ஒளியைக் கொண்டு இது சாத்தியம். இரவில்? அதற்கான முயற்சியில் சேஞ்ச் அமைப்பு இறங்கியிருக்கிறது. முடிவுசெய்துவிட்டால் எதைத்தான் மாற்ற முடியாது?
2) மண்ணைக் காக்க மக்கள் குரல்
கனடாவின் ஆல்பெர்ட்டா பகுதியிலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிக்கு நிலத்தடிக் குழாய்கள் மூலம், தார் கலவை எண்ணெயை அனுப்பும் திட்டத்தை, அமெரிக்காவின் கிண்டர்மோர்கன் நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் பொருள் இது. இதற்கு கனடா மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகிறார்கள். “எங்கள் மண்ணையும் நீரையும் மாசுபடுத்தும் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்” என்று கனடா மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். எந்த அமைப்புகளும் தலைமை தாங்காமல், மக்களே கூட்டம் கூட்டமாகப் போராடிவருகிறார்கள். “எனது 30 ஆண்டுகால சுற்றுச்சூழல் காக்கும் போராட்டத்தில், மக்களிடம் இத்தனை எழுச்சியைப் பார்த்ததில்லை” என்கிறார் சூழலியலாளர் ஜான் பென்னட். மக்கள் சக்திக்கு முன், பெருநிறுவனங்கள் எம்மாத்திரம்?
3) போரும் சித்தரவதையும்
வடஆப்பிரிக்க நாடான லிபியாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மனநல பாதிப்பு அடைந்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியிருக்கிறது. அந்நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த கடாபி, கிளர்ச்சிப் படைகளால் கொல்லப்பட்ட பின்னர், அந்நாட்டில் நிலவும் நிச்சயமற்றதன்மையும், வன்முறைச் சம்பவங்களும் அந்நாட்டு மக்களைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. சுமார் 20% குடும்பங்களில் ஒருவர் காணாமல் போயிருக்கிறார்; 11% குடும்பங்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கைதுசெய்யப்பட்டவர்களில், 46% பேர் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 3 முதல் 5% பேர் பாலியல்ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்திருக்கிறார்கள். துப்பாக்கி முனையில் கிடைக்கும் அமைதிக்கு இதுதான் விலைபோலும்!
No comments:
Post a Comment