Friday, 21 November 2014

வால்டேர் 10

சமூக சீர்திருத்தக் கருத்துக்களை துணிச்சலாகவும், வெளிப்படையாகவும் பேசிய பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் வால்டேரின் பிறந்தநாள் இன்று. அவரைப்பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
 இவரது இயற்பெயர், பிரான்சுவா-மாரீ அரூவே. தந்தை, செல்வந்தர். இவரது குடும்பம் பிரான்ஸ் நாட்டின் உயர்குடி சமூகத்தின் பிரதிநிதியான 17-ஆம் லூயி ஆட்சியில் செல்வாக்கு பெற்றிருந்ததால், முதல்தர கல்வி பெற்றார். சிறு வயது முதலே எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அப்பா இவருடைய இலக்கிய ஆர்வத்தை விரும்பினாலும் தன் மகன் ஒரு எழுத்தாளனாக வருவதை விரும்பவில்லை.
 இளம் வயதிலேயே இவருக்கு நையாண்டியும் நகைச்சுவையும் கைவந்த கலை. இலக்கிய வட்டாரத்தில் மிக எளிதாக பிரபலமடைந்தார். ஆங்கில மேட்டுக்குடியைச் சேர்ந்த ஃப்ரீரி திங்க்கர், ஜாகோபைட், லார்ட் போலிங்புரோக் ஆகியோருடைய நட்பு இவருக்கு இயற்கை தத்துவத்தை அறிமுகம் செய்து வைத்தது.
 அவதூறுகளைப் பரப்புகிறார் என்று இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கடுமையான தண்டனையிலிருந்து தப்ப பாரீசிலிருந்து இங்கிலாந்து சென்றார்.  1729ல் இவர் மீண்டும் பிரான்சுக்கு திரும்ப அனுமதி வழங்கப்பட்டது. தாயகம் திரும்பியதும் தனது பொருளா தார நிலையை மேம்படுத்திக் கொள்ளவும் அரசியல் ஆதரவைத் திரும்பப் பெறவும் கடுமையாக உழைத்தார்.
 சுதந்திரத்தைப் பற்றிய இவரது கோட்பாடு தனித்துவம் வாய்ந்தது. மத போதனைக்காக பிரம்மச்சர்யம் மேற்கொள்ளுதல், பாலியல் கட்டுப்பாடு மற்றும் உடல் தேவைகளைத் தியாகம் செய்தல் போன்றவை மனித இயல்புக்கு எதிரான விஷயங்கள் என்றார்.
 ஐயுறவு வாதம், இயற்கை விஞ்ஞானம் ஆகிய மேலும் இரண்டு தத்துவங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். எந்தவித அதிகாரமும், அது எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க கூடாது என்று வாதிட்டார்.
 மதத்தை பற்றிய இவரது கண்ணோட்டம் மிகவும் சிக்கலானது. இவற்றின் அடிப்படையில் பார்த்தால், இவரை ஒரு நாத்திகர் அல்லது கிறிஸ்தவ எதிர்ப்பாளர் என்று கருதுவது தவறாகிவிடலாம். ஆனால், ஆட்சியில் மதகுருமார்கள் மற்றும் தேவாலயங்களின் அதிகாரம் செலுத்துவதை எதிர்த்தவர்.
 இறுக்கமான தணிக்கை விதிகளும் அவற்றை மீறுபவர் களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டு வந்தபோதும், இவர் வெளிப்படையாக பேசும் துணிச்சலான சமூக சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். கன்ஃபூசியஸ், ஜான் லாக், ஐஸக் நியூட்டன், பிளேட்டோ, பாஸ்கல் ஆகியோரின் தாக்கம் இவரிடம் காணப்பட்டது. இவர் பிரெஞ்ச் அறிவொளி இயக்க எழுத்தாளர், கட்டுரையாளர், மெய்யியலாளர்.
 நாடகம், கவிதை, நாவல், கட்டுரை, வரலாறு, அறிவியல் என இலக்கியத்தின் அத்தனை விஷயங்களைக் குறித்தும் எழுதியுள்ளார். 20,000க்கும் மேற்பட்ட கடிதங்கள், 200க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் வெளியீடுகளை எழுதியதாகக் கூறப்படுகிறது. தலைசிறந்த எழுத்தாளரான இவர் 83-ஆம் வயதில் காலமானார்.

No comments:

Post a Comment