Wednesday, 5 November 2014

கள்ளச் சந்தைக்குப் பலியாகும் சேட்டைக்காரர்கள்

சலசலத்து ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் நடுவில், பாறைகள் ஆங்காங்கே துருத்திக் கொண்டிருந்தன. அதைச் சுற்றி நீர் அல்லிச் செடிகள் வளர்ந்திருந்தன. வரிசையாக வளர்ந்திருந்த நீர் மத்தி (நீர் மருது) மரங்கள் ஆற்றின் கரையை அலங்கரித்திருந்தன.
எனக்கு விருப்பமான மரங்களில் நீர் மத்தியும் ஒன்று. வழவழப்பான, வெண்ணிற மரத் தண்டு, ஆங்காங்கே உரியும் மரப்பட்டை, சிலவேளைகளில் ஓடும் நீரின் மத்தியில் வளர்வதாலேயே நீர்மத்தி எனப் பெயர் பெற்றது. இம்மரத்தை எங்குக் கண்டாலும் அருகில் சென்று உள்ளங்கையால் மரத் தண்டில் உள்ளங்கை பதியத் தடவிக் கொடுத்துவிட்டு வருவது வழக்கம். முடியாதபோது கண்ணாலாவது தடவிச் செல்வதுண்டு.
மாலை வேளை, ஓடிக் கொண்டிருந்த நீரில் சூரிய ஒளி பட்டுத் தங்க நிறத்தில் தகதகவெனக் கண்ணைப் பறித்தது. மீன் திண்ணிக் கழுகு ஒன்று தனது குழந்தைக் குரலில் கத்திக் கொண்டிருந்தது. இருநோக்கியில் ஆற்றின் ஓட்டத்தைக் கண்களால் துழாவிக் கொண்டிருந்தபோது, ஆற்று ஆலா ஒன்று வெண்ணிற கத்தி போன்ற இறக்கைகளை மேலும் கீழும் அசைத்துப் பறந்து வந்தது தெரிந்தது. பறந்துகொண்டே தலையை அங்குமிங்கும் திருப்பி நீரின் மேற்பரப்பை நோட்டமிட்ட அந்த ஆலா, சட்டென நீரில் மூழ்கி ஒரு மீனை அலகால் பிடித்து வெளி வந்து, வசீகரமான சிறகடிப்பைத் தொடர்ந்தது. இதுபோன்ற சூழலில்தான் ஒரு நீர்நாய்க் கூட்டத்தை முதன்முதலில் கண்டேன்.
நீர்மூழ்கி கப்பல்கள்
கரையோர நீரிலிருந்து திடீரெனத் தலையை மேலே தூக்கி அங்கும் இங்கும் பார்த்தது ஒரு நீர்நாய். அதைத் தொடர்ந்து மற்றொரு நீர்நாயும் நீருக்கு வெளியே தலையைச் சட்டென நீட்டியது. நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள பெரிஸ்கோப்பைப் போல நீரிலிருந்து தலையைச் சட்டென வெளியே நீட்டி சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, மீண்டும் ‘டபக்' எனத் தலையை உள்ளே இழுத்துக் கொண்டது. இவற்றைக் கண்ட குதூகலத்தில் இருந்தபோதே, சற்றுத் தூரத்தில் இருந்த மணற்பாங்கான கரையில் ஏறி அவை அமர்ந்துகொண்டன. தொடர்ந்து மேலும் இரு நீர்நாய்கள் வெளிவந்து, அவற்றுடன் சேர்ந்துகொண்டன. ஒரு நிமிடம்கூடச் சும்மா இருக்காமல் துறுதுறுவென ஒன்றின் மேல் மற்றொன்று விழுந்து விளையாடிக் கொண்டிருந்தன.
நான் இருந்தது காவிரியாற்றின் கரையோரம். ஒகேனக்கல் பகுதியில் உள்ள பிலிகுண்டு எனும் சிறிய ஊருக்குக் காவிரி ஆற்றோரமாக நடந்து சென்றபோது, கண்ட காட்சி இது. இது நடந்து 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. அண்மையில் அங்கே மீண்டும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை நடந்து செல்ல நேரமில்லை. ஒகேனக்கல்லில் இருந்து பிலிகுண்டுவுக்குக் காட்டின் குறுக்கே தார் சாலை போடப்பட்டிருந்தது.
அன்றும் இன்றும்
சாலை போடப்பட்டுவிட்டால் போதும், ஓர் இடம் தலைகீழாக மாறிவிடும். பிலிகுண்டு பகுதிக்குச் செல்ல வனத்துறையிடம் அனுமதி பெற்று ஒரு குழுவாகச் சென்றிருந்தோம். ஆனால், அப்படி எதுவும் இல்லாமல் நான்கு, ஐந்து கார்களில் வந்த சுற்றுலாப் பயணிகள் கூட்டம் ஒன்று, ஆற்றோரத்தில் காரை நிறுத்தி குடித்துக் கொண்டிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் நான் நடந்து சென்ற ஆற்றோரப் பகுதி முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடந்தன. அந்த ‘குடிமக்களை'க் கடந்து ஆற்றோரமாக நடந்து சென்றோம்.
சுமார் 50 நிமிட ஆற்றோர நடைப்பயணத்தில் பல வகை பறவைகளையும் அழகிய மரங்களையும் கண்டோம். சட்டென எங்களில் ஒருவரது குரல் உயர்ந்தது, ‘நீர்நாய்' என. எதிர்க்கரையில் இரண்டு நீர்நாய்கள் துள்ளிக் குதித்து நீரில் நீந்திக் கொண்டிருந்தன. நீர்நாய்களை அங்கே மீண்டும் பார்க்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
சூழலியல் சீர்கேடு
அவை ஆற்று நீர்நாய்கள் (smooth-coated otter, Lutrogale perspicillata). இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. அவை ஒன்றொடு ஒன்று விளையாட்டாகச் சண்டையிட்டுக் கொண்டு நீரில் மூழ்குவதையும் பின்னர் எதிர்பாராதவிதமாக மூழ்கிய இடத்துக்குச் சற்றுத் தொலைவில் தலையைச் சட்டென நீட்டி நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
இந்தியாவில் மூன்று வகையான நீர்நாய்கள் உள்ளன. நீர்நாய்களின் முக்கிய உணவு மீன்களே. இதனால் ஆறு, ஏரி, நீர்த்தேக்கங்களில் மீன்பிடிப்போருக்குத் தொந்தரவு கொடுப்பவையாக இவை கருதப்படுகின்றன. இதனால் அவ்வப்போது கொல்லப்படுகின்றன. ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதாலும், ஆற்றின் இயற்கையான போக்கை மாற்றியமைப்பதாலும், ஆற்று மணலைச் சுரண்டுவதாலும், ரசாயனக் கழிவுகளையும் ஏனைய கழிவுகளையும் ஆற்றில் கலப்பதாலும், வேட்டு வைத்து மீன் பிடிப்பதாலும் (Dynamite fishing), வியாபார நோக்கத்தில் நம் நாட்டுக்குச் சொந்தமில்லாத மீன் வகைகளை (Invasive fishes) ஆற்றில் விட்டு வளர்ப்பதாலும், ஆற்றின் தன்மை சீர்குலைந்து போகிறது.
தோலுக்குக் கொலை
நிலப்பகுதிகளில் இருக்கும் காட்டை அழித்தால் அதன் எதிர்விளைவையும், ஏற்பட்டிருக்கும் பாதிப்பையும் கண்கூடாகக் காண முடியும். ஆனால், ஆற்றுக்கு நாம் இழைக்கும் பல கொடுமைகளை, ஆறு பல நேரம் வெளிப்படையாகக் காட்டுவதில்லை. ஆறு பல உயிரினங்களின் வாழிடம். அது சீரழிக்கப்பட்டால் நீர்நாய்கள், முதலைகள், ஆற்றைச் சார்ந்துள்ள இன்னும் பல உயிரினங்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன.
வாழிடச் சிதைவால் (Habitat destruction) நீர்நாய்கள் ஒரு பக்கம் பாதிக்கப்பட்டாலும், அவற்றை அழிவின் விளிம்புக்குத் தள்ளுவது கள்ளவேட்டையே (Poaching). அவற்றின் தோலுக்காக (pelt) பெருமளவில் கொல்லப்படுகின்றன. நவநாகரிக ஆடை வடிவமைப்போர், மேல்தட்டு மக்கள், ஜெனிபர் லோபஸ் போன்ற பாப் பாடகிகள் நீர்நாய், மின் (mink) முதலிய உயிரினங்களின் தோலால் ஆன உடைகளை விரும்பி அணிகின்றனர். இதனால் கள்ளச் சந்தையில் நீர்நாய்களின் தோலுக்கு ஏக கிராக்கி.
ஆற்று நீர்நாய்கள்
கள்ளச் சந்தை
இந்தியாவில் கொல்லப்படும் நீர்நாய்களின் தோல் கான்பூர், லக்னோ, கோட்டா, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி முதலிய நகரங்களில் உள்ள கள்ளச் சந்தையில் விலை போகின்றன. இங்கிருந்து நேபாளம், வங்கதேசம் முதலிய நாடுகளுக்குக் கடத்திச் செல்லப்பட்டு, அங்கிருந்து உலகின் பல மூலைகளுக்குக் கள்ளத்தனமாகக் கொண்டு செல்லப்படுகின்றன.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் சந்திப்பில் அமைந்துள்ள சம்பல் நதி தேசியச் சரணாலயத்தில் ஒரு காலத்தில் ஆற்று நீர்நாய்களைக் காணமுடிந்தது. அவற்றைப் பற்றி அங்கே ஆராய்ச்சியும் நடைபெற்றது. ஆனால் இன்று அங்கு ஒரு நீர்நாய்கூட இல்லை.
ஆறு, ஏரி முதலிய நீர்நிலைகளின் சீரழிவைச் சுட்டிக்காட்டும் தூதுவர்களாக (Ambassador of wetlands) நீர்நாய்கள் கருதப்படுகின்றன. ஏனெனில், நீர்நிலைகளின் முக்கிய இரைகொல்லி (predator) நீர்நாய்கள். அவற்றை ஓர் இடத்தில் பார்க்க முடிந்தால், அந்த நீர்ச் சூழல் ஓரளவுக்குச் சீர்கெடாமல் இருக்கிறது என அர்த்தம். நீர்நாய்களும், அவற்றுக்கான இரையும் ஆரோக்கியமாக வாழ்வதற்கான தகுதியுடன் அந்த நீர்நிலை இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒரே வரியில் சொன்னால், நீர்நாய்கள் இல்லாத ஒரு நீர்நிலை, புலிகள் இல்லாத காட்டுக்குச் சமம்.
மூன்று வகை நீர்நாய்கள்
காட்டு நீர்நாய்
நீர்நாய்கள் நீரிலும் நிலத்திலும் வாழ்வதற்கான தகவமைப்பைப் பெற்றுள்ளன. நீண்ட, மெல்லிய, நீந்தும்போது குறைந்த எதிர்ப்பையே தரும் உடலமைப்பையும், விரலிடைத் தோலுடன் கூடிய கால்களையும் பெற்றுள்ளன. அடர்த்தியான ரோமத்தால் உடல் போர்த்தப்பட்டிருக்கும். ஆஸ்திரேலியா, அண்டார்டிகாவைத் தவிர உலகெங்கும் பரவலாகக் காணப்படுகின்றன.
இந்தியாவில் மூன்று வகையான நீர்நாய்கள் தென்படுகின்றன. யூரேசிய நீர்நாய் (Common otter - Lutra lutra), ஆற்று நீர்நாய் (smooth-coated otter - Lutrogale perspicillata), காட்டு நீர்நாய் (Oriental small-clawed otter - Aonyx cinerea). ஆற்று நீர்நாய் சமவெளிகளிலும், வறண்ட பிரதேசங்களிலும் தென்படும். கழிமுகப் பகுதிகள், நீர்த்தேக்கங்கள், பெரிய ஏரிகள், ஆறுகள் போன்ற பகுதிகளில் கூட்டமாகக்கூடப் பார்க்க முடியும். பெரும்பாலும் பகலிலோ, அந்தி கருக்கலிலோ இவை வெளியே வரும். யூரேசிய மற்றும் ஆற்று நீர்நாய்களின் பிரதானமான உணவு மீன்களே.
காட்டு நீர்நாய் சிறியது. ஏனைய நீர்நாய்களின் அளவில் பாதியே இருக்கும். ஆற்று நீர்நாய் பரவியுள்ள பகுதிகளிலும் இந்த நீர்நாய் தென்படும். இது ஒரு இரவாடி. பொதுவாக மலைப்பாங்கான காட்டுப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் வசிக்கின்றன. ஏனைய நீர்நாய்களைப் போல் மீன்களை மட்டுமே உண்ணாமல் நீர்வாழ் பூச்சிகள், தவளைகள், நத்தைகள், இறால்கள், சிறிய மீன்கள் முதலியவற்றை உணவாகக் கொள்கின்றன.
கட்டுரையாளர், 
காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org

No comments:

Post a Comment