தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக இருக்கும் கே.ராமானுஜம் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், தமிழக அரசின் ஆலோசகராக (காவல்துறை) அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், புதிய டிஜிபியாக அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அசோக்குமார், 1982-ம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்வு செய்யப்பட்டு, அதே ஆண்டில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதி கூடுதல் கண் காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், திருச்சி மாவட்ட கண் காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். மேலும் தென் சென்னை யில் துணை ஆணையராக நியமிக் கப்பட்டார். பின்னர் இங்கிருந்து டெல்லி சிபிஐ டிஐஜியாக சென்றார். மொத்தம் 15 வருடங்கள் சிபிஐ யில் பணிபுரிந்துள்ளார். ஐஜியாக பதவி உயர்வு பெற்று மீண்டும் தமிழகத்துக்கு வந்த இவர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றார்.
இதைத் தொடர்ந்து உளவுத்துறையில் ஏடிஜிபியாக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, டிஜிபியாக பதவி உயர்வு பெற்று உளவுத் துறையிலேயே பணியாற்றினார். கடந்த 2001-ல் இவர், லஞ்ச ஒழிப்புத் துறையில் ஐஜியாக இருந்த போது தான், திமுக அமைச்சர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப் பட்டன.
புதியதாக நியமிக்கப்பட்டுள்ள டிஜிபியின் பதவிக் காலம் 2015ம் ஆண்டு மே மாதத்துடன் முடிகிறது. ஆனால், இந்த பதவியில் அமர்த்தப்படுபவர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என்பதால், இவருடைய பதவிக் காலத்தை தமிழக அரசு மேலும் நீட்டிக்கும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment