35 ஆண்டுகளுக்குப் பிறகு முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் 136 அடியைத் தாண்டியுள்ளதால் விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணை தண்ணீரால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த அணையின் முழுக் கொள்ளளவு 152 அடி. இதில், 136 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக்கிவைக்க கேரளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, அதிகளவில் மழை பெய்தாலும் வேறு வழியின்றி கடந்த 35 ஆண்டுகளாக அணையில் 136 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, அணையில் 142 அடிக்கு தண்ணீரைத் தேக்கிவைக்க உச்ச நீதிமன்றம் 2006-ல் அனுமதி அளித்தது. ஆனால், அதைத் தடுக்கும் வகையில் கேரள அரசு சட்டப்பேரவையில், அணையின் நீர்த்தேக்க அளவை 136 அடியாக குறைத்து தீர்மானம் நிறைவேற்றியது.
கேரளத்தின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அணையில் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ள தமிழக அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும், ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து கேரளம் இடையூறு செய்து வந்தது. ஆனால், தமிழக அரசும் இந்த விவகாரத்தில் விடாப்பிடியாக இருந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கை முறையாக நடத்தியது.
அதன் விளைவாக, வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து கடந்த மே 7-ல் தீர்ப்பளித்தது. மேலும், அணையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக தமிழக- கேரளப் பிரதிநிதிகள் அடங்கிய மூவர் குழுவும், துணைக் குழுவும் அமைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், பெரியாறு அணையில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் 136 அடியைத் தாண்டி தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 136.70 அடியாக உள்ள அணையின் நீர்மட்டம், தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணையில் நீர்மட்டம் 136 அடியைத் தாண்டியுள்ளதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ள கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சிலர், ‘தி இந்து’-விடம் கூறியது:
கடந்த 1979-ம் ஆண்டு வரை அணையில் 136 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டது. அணையில் நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு கேரளம் தொடர்ந்து இடையூறு செய்து வந்தது.
ஆனால், தமிழக அரசின் தொடர் நடவடிக்கை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் இயற்கை அன்னையின் கருணை ஆகியவற்றால் பல ஆண்டுகளுக்குப் பிறகு நீர்மட்டம் 136 அடியைத் தாண்டியுள்ளது. இது 5 மாவட்ட விவசாயிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது’ என்றனர்.
பென்னி குவிக்-குக்கு மரியாதை
அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ள கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள், அணையைக் கட்டிய பென்னி குவிக் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டிய வரலாறு…
முல்லை பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. ஆனால், கொள்ளளவு 152 அடி மட்டுமே. அதிகபட்சமாக கடந்த 04.01.1943 அன்று 154.80 அடி வரை நீர்மட்டம் உயர்ந்து, அணையின் மொத்த உயரத்தையும் தாண்டி வழியும் நிலையை எட்டியது.
1970 முதல் 1979 வரை பெரியாறு அணை நீர்மட்டம் ஆறு முறை 136 அடிக்கும் மேலே உயர்ந்தது.
மத்திய நிர்வள ஆணைய உத்தரவின் பேரில் பெரியாறு அணையில் மராமத்து பணிகள் செய்ய இரு மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டு 25.11.1979 அன்று கையெழுத்திட்டன. 1980-ல் மராமத்து பணிகள் தொடங்கப்பட்டதால், பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.
அதன்பின்னர் 28.10.81, 30.07.91, 19.11.93, 05.08.94, 07.09.95, 13.11.97, 13.12.98, 06.09.2000, 03.08.05, 19.11.06, 06.11.07, 02.12.11 ஆகிய நாட்களில் 12 முறை நீர்மட்டம் 136 அடியைத் தாண்டியது.
ஆனால், 136 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை இருந்ததால், ஷட்டர் பகுதி வழியாக தண்ணீர் வெளியேறி இடுக்கி அணைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.
அணைகளில் நீர்மட்டம் (முழுக் கொள்ளளவு அடைப்புக்குறிக்குள்):
பெரியாறு (152 அடி)- நீர்மட்டம் 136.7 அடி, நீர்வரத்து விநாடிக்கு 1916 கன அடி, நீர் வெளியேற்றம் 456 கன அடி.
வைகை அணை (71 அடி)- நீர்மட்டம் 53.41 அடி, நீர்வரத்து 1630 கன அடி, நீர் வெளியேற்றம் 1660 கன அடி.