Saturday, 1 November 2014

1931-ம் ஆண்டில் இருந்து மரண தண்டனைக்கு எதிராக எழும் குரல்கள்

இந்திய சுதந்திரப் போர் மிகத் தீவிரத்தை எட்டியிருந்த காலம். 86 ஆண்டுகளுக்கு முன் அக்டோபர் 30-ம் தேதி, ‘சைமன் குழுவே திரும்பிப் போ’ என்ற கோஷத்துடன் பேரணி நடத்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது, பிரிட்டிஷாரின் குண்டாந்தடிகள் கடுமையாகப் பிரயோகிக்கப்பட்டன.
பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராயின் தலையை பிரிட்டிஷ் காவலாளியின் குண்டாந்தடி உடைத்தது. ரத்தம் சொட்ட மயங்கி விழுந்த அவர், ஒரு மாதத்துக்குப் பின் தன் இன்னுயிரை பாரதத் தாயின் விடுதலைக்காக நீத்தார்.
நாடே அவருக்காக அஞ்சலி செலுத்தியது. ஆனால் பகத் சிங் உள்ளிட்டோர் வெறும் அஞ்சலி செலுத்துவதோடு நின்று விடாமல், அவரின் இறப்புக்காக பழிவாங்க சபதமேற்றனர். பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் ஜான் சாண்டர்ஸ் என்ற ஆங்கில அதிகாரியைக் கொன்று பழிதீர்த்தனர்.இக் கொலைக்காகவும், வேறு சில தீவிரவாதச் செயல்களுக்காகவும் பகத் சிங் உள்ளிட்ட மூன்று தீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இது அன்றைய மெட்ராஸில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அந்த மரண தண்டனைக்கு, மெட்ரா ஸிலிருந்த பலரும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ‘தி இந்து’ நாளிதழ் வெளியிட்ட செய்திக் குறிப்பு களிலிருந்து:
1931-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி, மெட்ராஸ் மகாஜன சபா (எம்எம்எஸ்) சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில், பகத் சிங்கின் மரண தண்டனையை மாற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முத்தாய்ப்பாக, அக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த எஸ். முத்துலட்சுமி, மரண தண்டனையை முற்றாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். “ஒரு தவறு மற்றொரு தவறை சரி செய்யாது. ஒரு மனிதரின் உயிரைப் பறித்து விட்டார் என்பதற்காக அவரின் உயிரை சட்டத்தின் மூலம் பறிப்பது தவறான ஒன்று என நான் கருதுகிறேன்” என்றார் அவர்.
“மனித சமுதாயம் நாகரிகமும் மேம்பட்ட நிலையையும் அடைந்து கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள், சட்டப்புத்தகத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்” என எஸ். நாராயணசாமி ஐயர் தெரிவித்தார்.
மாநில மொழி பத்திரிகைகள், நேர்மையான விசாரணையை வலியுறுத்தின. பொதுமக்களின் கோரிக்கைகளில் நியாயமிருப்பதாக அவை தெரிவித்தன.
“அரசு தரப்பு குற்றச்சாட்டுகள், சாட்சிகளின் அடிப்படையில் மட்டுமே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறப்புத் நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். அரசு தரப்பு சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்யவோ, தங்களின் தரப்பை எடுத்துரைக்கவோ குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக் கப்படவில்லை” என சுதேசமித்திரன் தமிழ் இதழ் எழுதியது.
பகத் சிங்குக்கு பரவலான ஆதரவு இருந்த போதும், அவரும், அவரின் சகாக்களும் 1931 மார்ச் 23-ம் தேதி தூக்குமேடைக்கு அனுப்பப் பட்டார்கள். திருவல்லிக்கேணி கடற்கரையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மெட்ராஸ் மகாஜன சபாவின் கிருஷ்ணா பாய் பேசும்போது, “இந்த மரண தண்டனையை நிறைவேற்றியதன் மூலம், ஒரு கொடூர சட்டத்துக்கு பிரிட்டிஷ் அரசு உடந்தையாகி விட்டது. அது வன்முறையின் பக்கம் நின்று விட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் பிரிட்டன் அரசு சுய கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது” என்றார்.
1990-களில் ராஜீவ் படுகொ லைக்குப் பிறகு, தமிழகத்தில் மரண தண்டனைக்கு எதிரான பிரச்சா ரங்கள் வலுப்பெற்றன. ஆனால், சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ கத்தில் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கி விட்டன.

No comments:

Post a Comment