கர்நாடகத்தில் பெங்களூர், மங்களூர், பெல்காம் உள்ளிட்ட 12 நகரங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்கள், சாலைகளின் பெயர்கள் அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் சித்தராமையா நேற்று அறிவித்தார்.
இந்த பெயர் மாற்றத்துக்கு கன்னட மொழியியல் அறிஞர்களும், வரலாற்று ஆசிரியர்களும், பொது மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களும், கல்வி நிலையங்களும், சிறும்பான்மையின அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, ‘ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட பெங்களூர், மைசூர், மங்களூர், பெல்காம் உள்ளிட்ட பல நகரங்களின் பெயர்களை கன்னடத்தில் மாற்ற வேண்டும்’ என கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்து 12 நகரங்களின் பெயர்களை, கன்னடப் பெயர்களாக மாற்ற வேண்டும் என 2006-ல் அப்போதைய கர்நாடக முதல்வர் குமாரசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடகத்தில் உள்ள 12 நகரங்களின் பெயர்களை கன்னடத்தில் மாற்ற ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் நேற்று கர்நாடகத்தில் 59-வது உதய தினவிழா (ராஜ்யோத்சவா) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெங்களூருவில் உள்ள ரவீந்திர கலாக்ஷேத்ரா வில் நடைபெற்ற விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, இன்று 6 கோடி கன்னடர்களின் நீண்ட கால கனவு நிறைவேறி இருக் கிறது. நம்முடைய தலைநகரமான பெங்களூர் இனிமேல் 'பெங்களூரு' என அழைக்கப்படும்” எனக்கூறி அதற்கான அரசாணையை வெளியிட்டார்.
கன்னட மொழியில் பெயர் மாற்றப்பட்ட நகரங்கள் பற்றிய விவரம்: பெங்களூரு (பெங்களூர்), பல்லாரி (பெல்லாரி), விஜாபுரா (பிஜாப்பூர்), சிக்மகளூரு (சிக்மகளூர்), கலபுர்கி (குல்பர்கா), மைசூரு (மைசூர்), ஹொசபேட்டே (ஹொஸ்பேட்), சிவமொக்கா (ஷிமோகா), ஹுப்பள்ளி (ஹூப்ளி), துமகூரு (தும்கூர்), பெலகாவி (பெல்காம்), மங்களூரு (மங்களூர்).
சிறுபான்மையினர் போராட்டம்
கர்நாடக மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு திரைப்பட பின்னணி பாடகி எஸ். ஜானகி, விஞ்ஞானி கஸ்தூரி ரங்கள் உள்ளிட்ட 59 பேருக்கு கர்நாடக ராஜ்யோத்சவா விருதுகள் வழங்கப்பட்டன.
மாநிலத்தின் பல பகுதிகளில் கர்நாடகத்தின் கொடியாக அந்த மாநிலத்தினரால் கருதப்படும் மஞ்சள் சிவப்பு கொடி ஏற்றப்பட்டது. திரையரங்குகளில் பிற மொழிப் படங்கள் மாற்றப்பட்டு, கன்னட மொழிப் படங்கள் திரையிடப்பட்டன. பெல்காமின் பெயரை 'பெலகாவி' என மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கருப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தன. பீஜாப்பூர், குடகு ஆகிய இடங்களில் உள்ள மொழி சிறுபான்மையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்கள் அதிகமாக வாழும் பெங்க ளூரு, கோலார் தங்கவயல், தெலுங்கர்கள் அதிகமாக வாழும் பீஜாப்பூர், துளு, கொங்கனி மொழி பேசுபவர்கள் வாழும் மங்களூரு, குடவா மொழி பேசுவோர் வாழும் குடகு ஆகிய பகுதிகளில் போராட்டம் நடந்தது.
காஞ்சிபுரத்தை பூர்விகமாக கொண்ட கெம்பேகவுடா என்ற சிற்றரசனால் பெங்களூர் மாநகரம், கிபி 1537-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது இதன் பெயர் 'பெந்தகாலூரு' என இருந்ததாக கன்னட வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், இதே பெங்களூரு சோழர்களின் ஆட்சிக் காலத்தில் ‘வெங்காலூர்’ என அழைக்கப்பட்ட தாக தமிழ் அறிஞர்களான குணா போன்றவர்கள் குறிப்பிடுகின்றனர்.
No comments:
Post a Comment