Thursday, 6 November 2014

ஜோஹன் அலாய்ஸ் செனஃபெல்டர் 10

நவீன லித்தோகிராஃபி முறையைக் கண்டுபிடித்த ஜோஹன் அலாய்ஸ் செனஃபெல்டர் பிறந்த நாள் இன்று. அவரைப்பற்றிய அரிய முத்துக்கள் பத்து..
 ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை ஒரு நாடக நடிகர். மூனிச் நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார். கல்வி உதவித் தொகை பெற்று சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். 1791ல் அப்பா காலமானதால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, நடிகரானார். நாடகங்களையும் எழுதினார்.
 இவர் எழுதிய பல நாடகங்கள் பரவலான பாராட்டுகளைப் பெற்றன. தான் எழுதிய இரு நாடகங்களின் கையெழுத் துப் பிரதியை எடுத்துக்கொண்டுபோய் ஒரு அச்சகத்தில் கொடுத்தார். அவர்கள் சொன்ன தேதியில் அச்சடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்தனர்.
 ஒரு அச்சகத்தில் சேர்ந்து அச்சுக்கலையைக் கற்றார். ஒரு சிறிய அச்சகத்தை விலைக்கு வாங்கினார். தான் எழுதிய நாடகங்களை தானே பிரின்ட் செய்து வெளியிடலாம் என்று விரும்பினார். பிரின்டிங் ப்ளேட்டுகளில் பிரின்ட் செய்வது மிகவும் செலவு பிடிப்பதாக இருந்தது. அதைத் தானாகவே செய்ய முயற்சி செய்தார்.
 ஒருநாள் சுண்ணாம்பு பலகை ஒன்றை பாலீஷ் செய்து கொண்டிருந்தார். அப்போது வெளுப்பவருக்கு கொடுக்க வேண்டிய துணிகளின் பட்டியலை அம்மா எழுதச் சொன்னார். கையில் காகிதம் கிடைக்கவில்லை என்பதால், ஒரு கிரீஸ் பென்சிலால் பலகையில் எழுதி னார். பிறகு அதில் ஆசிட் ஊற்றியபோது எழுதாத பகுதி கரைந்து, எழுதிய பகுதிகள் சற்றே மேடாக எழும்பி நின்றன. அதில் மையை ஊற்றி திருப்திகரமாக பிரின்ட் செய்ய முடிந்தது.
 சுண்ணாம்புக்கல் பலகை, மையை இயந்திரம் மூலம் எடுத்துக்கொள்ளாமல், ரசாயன ரீதியில் எடுத்துக் கொள்ளும்படி வடிவமைக்க விரும்பினார். பின் மெல்ல மெல்ல சம தளத்தில் பிரின்டிங் செய்யும் நவீன லித்தோகிராஃபி முறையைக் கண்டுபிடித்தார்.ஆரம்பத்தில் ஐரோப்பா முழுவதும் உள்ள நில அளவை அலுவலகங்களில் லித்தோகிராபி அறிமுகப்படுத்தப்பட்டு, பிரபலமடைந்தது.
 இசையமைப்பாளர் ஒருவருடன் சேர்ந்து 1796ல் லித்தோ கிராபி முறையில் அச்சிடும் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இவரது மேற்பார்வையில் மூனிச், பெர் லின், பாரிஸ், லண்டன், வியன்னா ஆகிய இடங்களில் லித்தோகிராபி பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
 அலோய்ஸ் ‘தி இன்வென்ஷன் ஆஃப் லித்தோகிராஃபி’ என்ற புத்தகத்தில் தனது வாழ்க்கை, இந்த கண்டுபிடிப்பு எவ்வாறு நிகழ்த்தப்பட்டது, இதைத் திறனுள்ள வகையில் எப்படி பயன்படுத்துவது என்பன பற்றி எல்லாம் விரிவாக, விளக்கியுள்ளார்.
 இவரது கண்டுபிடிப்பைப் பாராட்டி, அந்த நாட்டு மன்னர், ஸோல்ஹோஃபென் என்ற இடத்தில் இவரது உருவச்சிலையை நிறுவி கவுரவித்தார். இவருக்கு பென்ஷன் தொகையையும் அவர் வழங்கினார்.
 கிரேக்க மொழியில் லித்தோகிராஃபி என்றால் கல் அச்சு என்று பொருள். 1834ல் இவர் இறப்பதற்கு முன்பாகவே, படங்கள், இசை வடிவங்கள் ஆகியவற்றைப் புத்தகங் களில் அச்சிடுவதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும் முறையாக இந்த லித்தோகிரஃபி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது.
 அச்சுத் துறைக்கு இவரது பங்களிப்பு மகத்தானது. இந்த அச்சுக்கலை புரட்சி நாயகன், 63-ஆவது வயதில் காலமானார்.

No comments:

Post a Comment