Monday, 11 August 2014

வரலாறு: வெள்ளையனே வெளியேறு: போராட்டமும் மொழி நுட்பமும்

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டம் ஒரு நூற்றாண்டுக்கு மேல் நடந்திருக்கிறது. பல வகைப்பட்ட முறைகளில் இந்தியர்கள் போராடினாலும் அவற்றுக் கெல்லாம் சிகரம் என ‘வெள்ளையனே வெளியேறு’ (Quit India Movement) போராட்டத்தைச் சொல்லலாம். இந்திய விடுதலைக்கான மிக முக்கியமான போராட்டங்களில் ஒன்றாக இது வரலாற்றாய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது.
ஜூலை 1942-ல் வார்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸின் செயற்குழு வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான வழியைத் தொடங்கியது. ஆகஸ்ட் 8, 1942-ல் பம்பாயில் கூட்டிய காங்கிரஸ் மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பேசிய காந்தி ‘செய் அல்லது செத்து மடி’ என்ற கோஷத்தை வலியுறுத்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்.
அடுத்த நாள் (ஆகஸ்ட் 9, 1942) காங்கிரஸ் தலைவர்கள் பலரையும் ஆங்கிலேய அரசு சிறைப்பிடித்தது. இந்தக் கைதுகள் போராட்டத்தை ஒடுக்குவதற்குப் பதிலாக மக்களின் உணர்ச்சிகளை உசுப்பிவிட்டது. தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டு ஆவேசமடைந்த மக்கள் பெரும் திரளாகப் போராட்டத்தில் குதித்தார்கள். இதற்குப் பின்னரே விடுதலைப் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக உருவெடுத்தது.
பிரிட்டிஷார் அரசை அசைத்துப் பார்த்த மாபெரும் போராட்டம் என இதைச் சொல்லலாம். போராட்டத்தை அடக்க அரசு பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. டில்லியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 76 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மக்கள் பெருமளவில் கைதுசெய்யப்பட்டு விசாரணை இல்லாமல் தண்டனை பெற்றார்கள்.
ஒத்துழையாமை இயக்கம் எனவும் அழைக்கப்பட்ட இந்த இயக்கம் ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. சுதந்திரத்தை நோக்கிய தீர்மானமான அடியை இந்தியா எடுத்துவைத்த இந்தத் திருப்புமுனைப் போராட்டத்தை ஒட்டிய சில நினைவுகளை ம.பொ. சிவஞானம் தனது ‘எனது போராட்டம்’ என்னும் நூலில் பதிவுசெய்துள்ளார். அதில் இந்தப் போராட்டத்திற்குத் தமிழில் சூட்டப்பட்ட பெயரைப் பற்றிய சிந்தனையை முன்வைத்துள்ளார். அன்னியருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்திலும் மொழி சார்ந்த நுட்பமும் மானுட சமத்துவ உணர்வும் எந்த அளவுக்குத் தேவை என்பதை உணர்த்தும் அந்தப் பதிவு இதுதான்:
“காந்தியடிகள் Quit India என்றுதான் ஆங்கிலத்தில் இதனை கோஷித்தார். இந்தியாவிலிருந்து வெளியேறு என்று மட்டுமே தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளும் காங்கிரஸ்காரர்களும் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று மொழிபெயர்த்துக் கோஷித்தனர். இது காந்திய நெறிக்கே எதிரான மொழி பெயர்ப்பாகும். காந்தியடிகள், “நான் பிரிட்டிஷ் ஆதிக்கத் தையே எதிர்க்கிறேன்; பிரிட்டிஷ் ஜாதியை வெறுக்க வில்லை” என்பதாக அடிக்கடி கூறிவந்தார். ஆனால் அடிகளின் இந்த விளக்கத் துக்கு விரோதமானது வெள்ளையனே என்று ஒரு நிறத்தவரை விளித்துத் தமிழில் கோஷித்தது. ஆனால் அன்று இருந்த விடுதலை ஆவே சத்திலே இந்த நுணுக்கமான ஆராய்ச்சிக்கு இடமேது?
நானும்தான் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று அப்போது கோஷித்தேன். இப்போது புரிகிறது இந்த மொழிபெயர்ப்பு காந்திய நெறிக்கும் மூல கோஷத்துக்கும் பொருந்தாது என்று.”
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 72-வது நினைவு ஆண்டு இது.

No comments:

Post a Comment