Wednesday, 20 August 2014

மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரம் பேருக்கு மீண்டும் வேலை: தமிழக அரசுக்கு அக்டோபர் 31 வரை உயர் நீதிமன்றம் கெடு

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட 13 ஆயிரம் மக்கள்நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கி அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்குமாறு கெடு விதித்து உத்தரவிட்டது.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றிய சுமார் 13 ஆயிரம் மக்கள்நலப் பணியாளர்கள் 2011-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து மக்கள்நலப் பணியாளர் சங்கங்கள் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நீண்ட சட்டப் போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் முன்பு இதுதொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மக்கள்நலப் பணியாளர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
வேலையற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் 1989-ம் ஆண்டு தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தது. அதன் அடிப்படையில் மக்கள்நலப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். எனினும் திமுக ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை 1991-ம் ஆண்டு அடுத்து வந்த அரசு பணி நீக்கம் செய்தது. மீண்டும் 1997-ல் அவர்களுக்கு பணி வழங்கப்பட்டது. 2001-ம் ஆண்டில் மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2006-ல் பணியில் சேர்க்கப்பட்டனர். 2011-ம் ஆண்டு திரும்பவும் நீக்கப்பட்டுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை சரியல்ல.
இவ்வாறு வில்சன் கூறினார். அவர் மட்டுமின்றி, பல மூத்த வழக்கறிஞர்களும் மக்கள்நலப் பணியாளர்கள் சார்பில் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, ‘‘மக்கள்நலப் பணியாளர்கள் பணியிடம் என்பது குறிப்பிட்ட காலம் மட்டும் சில பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. அந்தப் பணியிடங்களை ரத்து செய்வது என அரசு முடிவெடுத்த பிறகு, அந்த பணியாளர்களை வேறு அரசுப் பணிகளில் நியமிக்குமாறு கோர முடியாது’’ என்று வாதிட்டார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:
மக்கள்நலப் பணியாளர்கள் நியமனம் பற்றி பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. உரிய தேர்வுக் குழு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, காலமுறை ஊதியமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மக்கள்நலப் பணியாளர்கள் என்ற பெயரிலோ அல்லது மதுவின் தீமைகள் பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்காக வேறு ஏதேனும் பெயரிலோ பணியிடங்களை உருவாக்கி அந்த பணியாளர்களை நியமிக்கவேண்டும். இல்லாவிட்டால், அரசுப் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகள், ஊராட்சி, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள இடங்களில் மக்கள்நலப் பணியாளர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அவர்களை பணி அமர்த்த வேண்டும். இந்த நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கி அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
அவ்வாறு பணியில் அமர்த்தப்படாத மக்கள்நலப் பணியாளர்களுக்கு, புதிய பணி நியமனம் வழங்கும் வரை அவர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தை வரும் நவம்பர் 1-ம் தேதியில் இருந்து வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மக்கள் நலப் பணியாளர்களின் 25 ஆண்டுப் பயணம்
வி.தேவதாசன்
* மக்கள்நலப் பணியாளர்களை நியமிப் பதற்கான அரசாணை முதன்முதலில் 2-9-1989ல் திமுக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப் படையில் அவர்கள் பணியமர்த்தப் பட்டனர்.
* அடுத்து வந்த அதிமுக ஆட்சியில், அவர்களைப் பணி நீக்கம் செய் வதற்கான அரசாணை 1991-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
* மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அவர்களை மீண்டும் நியமிப் பதற்கான அரசாணை 24-2-1997 அன்று பிறப்பிக்கப்பட்டது.
* அடுத்து வந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 1-6-2001 அன்று மக்கள்நலப் பணியாளர் பணியிடங்களை ரத்து செய்வதற்கான அரசாணை வெளி யானது.
* 2006-ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள்நலப் பணியாளர் பணியிடங்களை மீண்டும் உருவாக்கி 12-6-2006 அன்று அரசாணை வெளியானது.
* கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களைப் பணி நீக்கம் செய்து 8-11-2011 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
* 2011-ம் ஆண்டின் இந்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி கே.சுகுணா, ‘மக்கள்நலப் பணியாளர்களை பணியில் இருந்து நீக்கியது செல்லாது. அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்’ என்று 23-1-2012 அன்று தீர்ப்பளித்தார்.
* இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் எலிபி தர்மாராவ், எம்.வேணுகோபால் விசாரித்தனர். அப்போது மக்கள்நலப் பணியாளர்கள் சங்கங்களுக்கும் அரசுக்கும் சமரசம் ஏற்பட்டது. இதன்படி மக்கள்நலப் பணியாளர்களுக்கு 5 மாத ஊதியம் வழங்க அரசு ஒப்புக்கொண்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் 26-4-2012 அன்று உத்தரவிட்டனர்.
* ‘இந்த வழக்கை நடத்திய சங்கத் தின் முன்னாள் பொதுச் செய லாளர், சங்கத்தின் ஒப்புதல் இல்லாம லேயே வழக்கில் சமரசம் செய்து கொண்டுவிட்டார். இதை ஏற்க இயலாது. மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரி தமிழ்நாடு மக்கள்நலப் பணியாளர்கள் முன் னேற்ற சங்கத்தின் தலைவர் டி.மதி வாணன் உள்ளிட்டோர் உயர் நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
* நீதிமன்றத்தில் ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில் முடித்துவைக்கப்பட்ட இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க இயலாது என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.
* இதை எதிர்த்து பணியாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ‘இந்த வழக்கு சமரசத் தின் அடிப்படையில் அல்லாமல், சட்ட ரீதியான தகுதியின் அடிப்படையில் முடித்துவைக்கப்பட வேண்டும். அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து உரிய தீர்ப்பு அளிக்கவேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி உத்தரவிட்டது.
* இதையடுத்து மறு விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று செவ்வாய்க் கிழமை தீர்ப்பளித்துள்ளது.

No comments:

Post a Comment