Saturday, 30 August 2014

10 ஆண்டுகளில் இதுவே சிறப்பான பட்ஜெட் கூட்டத் தொடர்: புள்ளி விவரங்களுடன் சமூக ஆர்வலர் தகவல்

புதிதாக தேர்தெடுக்கப்பட்ட 16-வது மக்களவையின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த 10 வருடங்களில் இல்லாத வகையில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் ‘பிரைம் பாயிண்ட்’ கே.சீனிவாசன் புள்ளி விவரங்களுடன் கூறியுள்ளார்.
இது குறித்து சீனிவாசன் தொகுத்துள்ள தகவல்களின்படி, இந்த கூட்டத்தொடர், உறுப்பினர் கள் அமளியால் மிகக்குறைந்த அளவில் 14 மணி ஒரு நிமிடத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டது. உறுப்பினர்கள் 30 மணி 45 நிமிடங்களுக்கும் அதிகமாக அவை நடவடிக்கைகளில் ஈடுபட்டி ருந்தனர்.
இதில், பட்ஜெட்டின் 94 சதவீத மானியக் கோரிக்கைகள் விவாதங்கள் இன்றியே நிறை வேற்றப்பட்டுள்ளன.
61 தனிநபர் மசோதா
மசோதாக்களில் 20 அறிமுகப் படுத்தப்பட்டு, 13 நிறைவேற்றப் பட்டுள்ளன. விதி 377-ன் கீழ் 388 பிரச்சினைகள் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டுள்ளன. அதேபோல், பூஜ்ஜிய நேரத்திலும் 607 பொதுநல பிரச்சினைகள் அவசரமாக எழுப்பி விவாதிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் 61 தனிநபர் மசோதாக்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
4 முக்கிய பிரிவுகள்
கடந்த ஜூன் 4-ல் தொடங்கி ஆகஸ்ட் 14-ல் முடிவடைந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மொத்தம் 33 வேலை நாட்களில் நடைபெற்றுள்ளது. இதில் உறுப்பினர்களின் அவை செயல் பாடுகளை, அவர்கள் வருகை, அறிமுகப்படுத்தும் தனிநபர் மசோதா, கலந்துகொள்ளும் விவாதங்கள், எழுப்பும் கேள்வி கள் ஆகிய 4 முக்கிய பிரிவு களை வைத்தும் சீனிவாசன் ஆராய்ந்திருக்கிறார்.
விவாதப் பங்கெடுப்பில் பாஜக முதலிடம்
இதன்படி, கடந்த இரு கூட்டத்தொடர்களில் தனி உறுப்பினராக பாரதிய ஜனதாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பி.பி.சௌத்ரி 39 விவாதங்களிலும், இவரை அடுத்து கேரளத்தின் ஆர்.எஸ்.பி.யை சேர்ந்த என்.கே.பிரேமசந்திரன் 30 விவாதங்களிலும் கலந்துகொண்டு சிறப்பு பெற்றுள்ளனர்.
கேள்வி எழுப்பியதிலும் பாஜக முதலிடம்
கேள்வி நேரத்தின்போது சராசரியாக ஓர் உறுப்பினருக்கு 18 என்ற அளவில் மொத்தம் 8,854 கேள்விகள் எழுப்பப்பட் டுள்ளன. இதில் கேரள உறுப்பினர்கள் சராசரியாக 44 கேள்விகள் எழுப்பி முதலிடம் பெற்றுள்ளனர். கடைசி இடமாக உத்தராகண்ட் மாநில உறுப்பினர்கள் சராசரியாக 4 கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
தனி உறுப்பினர் எழுப்பிய கேள்விகளை கணக்கில் எடுத்தால், இதிலும் பாஜக முதலிடம் பெற்றுள்ளது. இக்கட்சி யின் மகாராஷ்டிர உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் ஜி.அஹிர் 115 கேள்விகள் கேட்டிருக்கிறார். ஹைதராபாத்தின் அகில இந்திய மஜ்லீஸ்-ஏ-இத்தாதுல் முஸ்லிமின் கட்சியின் அசாசுதீன் ஒவைஸி 108 கேள்விகளும் கர்நாடக காங்கிரஸ் உறுப்பினர் பி.வி.நாயக் 105 கேள்விகளும் எழுப்பியுள்ளனர்.
அதிமுக உறுப்பினர்களின் சாதனை
மொத்தம் 33 வேலைநாட்களில் 152 உறுப்பினர்கள் மட்டுமே நூறு சதவிகிதம் வருகை புரிந்துள்ளனர். இதில், முதலிடம் பெற்ற மாநிலமாக தமிழகத்தின் அதிமுக உறுப்பினர்கள் 98 சதவிகிதம் வருகை புரிந்து சாதனை புரிந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கடைசி நிலையில் 62 சதவிகிதம் மட்டுமே வருகை புரிந்துள்ளது.
சிறப்பான இரு பெண் உறுப்பினர்கள்
தற்போதைய மக்களவையில் மொத்தமுள்ள 62 பெண் உறுப்பினர்களில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, கர்நாடக பாஜக உறுப்பினர் ஷோபா கரந்த்லேஜே ஆகிய இருவரின் செயல்பாடுகள் நூறு சதவிகித வருகையுடன் சிறப்பு பெற்றுள்ளது.
இவர்களில் சுப்ரியா 104 கேள்விகளும் ஷோபா 98 கேள்விகளும் எழுப்பியுள்ளனர். பாஜக உறுப்பினரான நடிகை ஹேமமாலினி வெறும் 11 சதவீத வருகையுடன், எந்த நடவடிக்கை யிலும் பங்கெடுக்காதவராக இருந்திருக்கிறார்.
எந்த நடவடிக்கையிலும் பங்கேற்காதவர்கள்
இந்த முறை எந்த நடவடிக்கையிலும் பங்கேற்காத உறுப்பினர்களாக 61 பேர் உள்ளனர். முதல் முறையாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அதிகம் இருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர்களின் நடவடிக்கைகள் பதிவு செய்யப் படவில்லை. இதற்கு அவர்கள் வருகைப் பதிவேட்டில் கையெப்பம் இடுவதும், விவாதங்களில் பங்கெடுப்பதும் வழக்கம் இல்லை என்பது முக்கியக் காரணம் ஆகும்.
இந்தமுறை சிறப்பின் பின்னணி
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மக்களவை உறுப்பினர்களின் நடவடிக்கை களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத் துக்கு பிரதமர் நரேந்திர மோடியும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அவர் தொடக்கம் முதலே தங்கள் கட்சி உறுப்பினர்கள் அவைக்கு தவறாமல் வருகை புரிவதுடன், அவையின் அனைத்து நடவடிக்கைகளிலும் தீவிரமாக பங்கேற்கவேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
பாஜக உறுப்பினர்களுக்கு பயிற்சி
இத்துடன், அவை நடைபெற்ற நாட்களில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் பாஜக உறுப்பினர்க ளின் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மோடி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களும் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார்கள்.
அம்மா புகழால் வீணாகும் நேரம்
இந்த பயிற்சி குறிப்பாக அதிமுக உறுப்பினர்களுக்கு கிடைக்காத தன் விளைவை பட்ஜெட் கூட்டத்தில் பார்க்க முடிந்தது. இக்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் புகழ் பாடியே, தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் பெரும்பாலான நேரத்தை வீணாக்கியதாக கூறப் படுகிறது.
அதிமுக உறுப்பினர்களின் கருத்து
இதுகுறித்து ‘தி இந்து’விடம் மக்களவை அதிமுக உறுப்பினர் கள் கூறும்போது, “சபாநாயகர் சார்பில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் பயிற்சி, வெறும் ஒரு சடங்குக்காக நடைபெறுகிறது. பாஜகவின் நுணுக்கமான பயிற்சியில் பாதி கிடைத்தாலும் நாங்கள் அனைத்தி லும் முன்னணி வகிப்போம். மாநிலங்களவை திமுக உறுப்பினர் களுக்கு கிடைப்பதுபோல், அவையில் நாங்கள் பேசுவதை தொகுத்து பத்திரிகைகளுக்கு அளிக்கவும் முறையான ஒருங்கிணைப்பு அதிமுகவில் இல்லை” என வருத்தப்பட்டனர்.
பல சிக்கல்களுக்கு இடையே வெற்றி பெற்று வந்தாலும் பயிற்சிக் குறைவினால் மக்களவை நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட முடியாமல் இருப்பது தமிழக மக்களுக்கு ஏற்படும் இழப்பு எனவும் அக்கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment