Wednesday, 13 August 2014

தமிழக பொதுப்பணித் துறையின் அப்டேட் செய்யப்படாத தினசரி நீர் அறிக்கை

தமிழக அரசு பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதார அமைப்பின் இணையதளத்தில் தினசரி நீர் அறிக்கை மற்றும் தினசரி மழை அளவு விவரங்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக புதுப்பிக்கப்படாததால் (அப்டேட்) அணைகளின் நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ள முடியவில்லை என்கின்றனர் விவசாயிகள்.
தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதார அமைப்பின் மூலம் தமிழகத்தில் உள்ள மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பெரியாறு, வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத்தூர், சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய அணைகள் மற்றும் குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகியவற்றின் நீர் இருப்பு, நீர்வரத்து, நீர் விடுவிப்பு மற்றும் மழை அளவு உள்ளிட்ட விவரங்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் www.wrd.tn.gov.in என்ற இணையதளத்தில் தினந்தோறும் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், இந்த இணையதளத்தில் அணைகளின் நீர் இருப்பு விவரங்கள், நீர் வரத்து, நீர் விடுவிப்பு, மழை அளவு ஆகியவை கடைசியாக ஜூன் 26-ம் தேதிக்கு பிறகு புதுப்பிக்கப்படவில்லை.
தற்போது கர்நாடகத்தில் அதிக மழை பெய்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் டெல்டா பாசனத்துக்கும் சம்பா சாகுபடிக்கும் அணை ஆக.10-ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு எவ்வளவு இருக்கிறது. அணையின் நீர் வரத்து எவ்வளவு, எவ்வளவு நீர் வெளியேற்றப்படுகிறது என்ற விவரங்களை அறிந்துகொள்ள பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பின் இணையதளத்துக்குச் சென்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது என்கின்றனர் விவசாயிகள்.
இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஆறுபாதி கல்யாணம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
‘’சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை ஆக.10-ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுகுறித்த விவரங்கள் எதுவும் பொதுப்பணித் துறையின் இணையதளத்தில் இல்லை. விவசாயத்தின் மீதும், விவசாயிகள் மீதும் அக்கறை உள்ள துறையாக பொதுப்பணித் துறை செயல்பட வேண்டும். ஆனால், கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் இணையதளத்தில் (www.ksndmc.org/RL) அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டம், நீர் வரத்து, நீர் வெளியேற்றம் மற்றும் வட்டங்கள் வாரியாக பெய்யும் மழை அளவுகள் ஆகியவை தினந்தோறும் புதுப்பிக்கப்படுவதைப் பார்த் தாவது தமிழக பொதுப்பணித் துறை இதில் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார் அவர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறையின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “தினசரி நீர் அறிக்கை தொடர்பான செய்திகளை இணையதளத்தில் வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளதால் அப்டேட் செய்யப்படவில்லை’’ என்றார்.

No comments:

Post a Comment