Saturday, 30 August 2014

கடலில் ஓர் அபாய வளையம்!

நாளைக்கு நீங்க கொண்டார்ற எந்தத் திட்டத்தால எந்தத் தீங்குன்னாலும் மொத பறிபோகுற உசுரு, எங்க உசுரு, எங்க புள்ளைங்க உசுருதானய்யா? அப்போம் எங்க கொரலுக்கு என்ன மதிப்பு கொடுக்குதீங்க?
தமிழகக் கடலையும் கடற்கரையையும் சூழும், சுற்றுச்சூழலுக்குச் சவாலான தொழிலகங்களைப் பற்றி எழுத ஆரம்பித்த இந்த ஒரு வாரத்தில், வாசகர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் ஏராளமான கடிதங்கள், மின்னஞ்சல்கள். ஒவ்வொரு கடிதமும், மின்னஞ்சலும் அவர்கள் படும் பாட்டை விவரிக்கிறது. அவர்கள் ஊரை நோக்கி அழைக்கிறது. அத்தனை சீக்கிரம் விடுபட முடியாத, துக்கம் மேலிடும் அந்தக் குரல்கள் அத்தனையையும் இந்தத் தொடரில் பதிவுசெய்துவிட முடியுமா?
ஒரு சின்ன முயற்சி. தமிழகக் கடற்கரையின் வரைபடத்தை எடுத்துக்கொண்டு புள்ளிவைக்கும் முயற்சி. தமிழகக் கடல் எல்லை தொடங்கும் திருவள்ளூர் மாவட்டம் முதல் முடியும் குமரி மாவட்டம் வரை. கடலோடிகளும் வாசகர்களும் தங்களை அதிகம் பாதிக்கும் என்று குறிப்பிட்ட தொழிலகங்களின் பட்டியல் வரிசையாக நீள்கிறது. சுற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிக்கும், மாசை உருவாக்கும், அபாயகரமான பின்விளைவுகளையும் ஆபத்துகளையும் உண்டாக்கும் வாய்ப்புள்ள அணு மின்உலைகள், கனிம மணல் ஆலைகள், அனல் மின்நிலையங்கள், பெரிய அளவிலான ரசாயன ஆலைகள். எங்கெல்லாம் செயல்படுகின்றனவோ / செயல்படவிருக்கின்றனவோ அங்கெல்லாம் ஒரு புள்ளி. வேலை முடிந்தபோது பெரும் அதிர்ச்சி. தமிழகக் கடற்கரையைச் சுற்றிலும் புள்ளிகள்.
கதிர்வீச்சர்கள்
இந்தப் பக்கம் கல்பாக்கம். அந்தப் பக்கம் கூடங்குளம். தமிழகத்தில் இந்த இரு இடங்கள்தான் அணுசக்தி மையங்கள் என்றாலும், வீரியத்தில் தேசிய அளவில் முக்கியமானவை இவை இரண்டும். கூடங்குளத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவின் முதல் 1,000 மெகா வாட் அணு உலை என்பதைத் தவிர தொழில்நுட்பரீதியாக முதல் பிடபிள்யூஆர் அணு உலை, வி412 அணு உலை. மேலும், 5 அணு உலைகள் கூடங்குளத்திலேயே திட்டமிடப்பட்டிருக்கின்றன. கல்பாக்கத்தை எடுத்துக்கொண்டால், இரு அணு உலைகள், அணுக்கழிவு மேலாண்மை மையம், அணுக் கழிவு மறுசுழற்சி ஆலை ஏற்கெனவே செயல்படுகின்றன. தவிர, மூன்று ஈனுலைகள், அணுக் கழிவு மேலாண்மை மையம், அணுக் கழிவு மறுசுழற்சி ஆலைக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த அணுசக்தி மையங்களைத் தவிர, குமரி, நெல்லை, தூத்துக்குடி மூன்று மாவட்டங்களிலும் இருக்கும் கனிம மணல் ஆலைகள் ஒவ்வொன்றும் குட்டி கதிரியக்க வெளியீட்டு ஆலைகள்.
அனல்கக்கர்கள்
இந்தப் பக்கம் எண்ணூர். அந்தப் பக்கம் தூத்துக்குடி. வரிசை யாக அமைந்திருக்கும் அனல் மின்நிலையங்களைக் காட்டிலும் கட்டுமானத்தில் இருக்கும் அனல் மின்நிலையங்களின் எண்ணிக்கை அதிகம். அவற்றைக் காட்டிலும் அதிகம் திட்டமிடப்பட்டிருக்கும் அனல் மின்நிலையங்களின் எண்ணிக்கை. செய்யூர், பரங்கிப் பேட்டை, பெரியபட்டு, புதுப்பட்டினம், திருக்குவளை, கீழப்பெரும் பள்ளம், வாணகிரி, மருதம்பள்ளம், தலைச்சங்காடு, ஒக்கூர், வெங்கிடங்கால், வேலங்குடி, பெரிய கண்ணமங்கலம், மாணிக்கப் பங்கு, காளியப்பநல்லூர், எடுக்காட்டாஞ்சேரி, சாத்தங்குடி, உப்பூர், வேம்பார், உடன்குடி... நீண்டுகொண்டே போகிறது பட்டியல்.
நச்சுப்புகையர்கள்
அனல் மின்நிலையக் கட்டுமானங்கள் எங்கெல்லாம் விடுபட்டிருக்கின்றனவோ அங்கெல்லாம் இடைவெளியை அடைக்கின்றன ரசாயன ஆலைகள். கடலூர், தூத்துக்குடி ரசாயன ஆலைகளுக்கெல்லாம் சவால் விடக்கூடும், எதிர்காலத்தில் சீர்காழியையொட்டி 256 ச.கி.மீ-ல் அமைக்கப்படவிருக்கும் பெட்ரோலிய மண்டலத்தில் அமையவுள்ள பெட்ரோலிய, ரசாயன ஆலைகள்.
பாதிப்புகள் - எச்சரிக்கைகள்
“தொழில் வளர்ச்சியை நாங்க எதிர்க்கலை. ஆனா, எந்தத் தொழிலும், ஆலையும் அறத்துக்குக் கட்டுப்பட்டு இயங்குணுமா, இல்லையா? அதைத்தான் கேக்குறோம். கல்பாக்கத்துக்கு நான் வந்து 24 வருஷம் ஆகுது. இந்த 24 வருஷங்கள்ல இந்தப் பக்கக் கடலோரக் கிராமங்களோட சிதைவை என் கண் முன்னே அணுஅணுவா பார்த்துக்கிட்டிருக்கேன். முதல்ல மீன் வளம் கொறைஞ்சுச்சு. தொழிலைவிட்டு, வேலை தேடி வெளியே போக வேண்டிய நெலைமை கடலோடிகளுக்கு ஏற்பட்டுச்சு. அடுத்து, புற்றுநோய்ல ஆரம்பிச்சு பிறவிக்குறைபாடு, மூளை வளர்ச்சிக் குறைபாடு வரைக்கும் எப்படி வாழ்க்கையைச் சீரழிக்குதுன்னு ஒரு மருத்துவனா என்கிட்ட வர்ற மக்களைப் பார்த்துத் துடிச்சுக்கிட்டிருக்கேன். அணு சக்தித் துறை சார்புல நியமிக்கப்பட்ட மஞ்சுளா தத்தாவோட ஆய்வறிக்கையே கல்பாக்கம் அணு உலை பக்கத்துல இருக்குற கிராமங்கள்ல இருக்குற மக்களுக்குப் புற்றுநோய் வாய்ப்பு 700% அதிகம்னு சொல்லுது. ஆனா, அந்த மக்களோட பாதுகாப்புக்கு நாம செஞ்சிருக்கிறது என்ன? அமெரிக்கா, ஜப்பான் மாதிரி நாடுகள்ல, இப்படிப் பாதிக்கப்படுற மக்களுக்குக் குறைந்தபட்சம் இழப்பீடாவது கிடைக்கும். சட்டம் இருக்கு. இங்கே அதுக்கும் வழி இல்ல.
அணு உலை கதிரியக்கத்தால ஏற்படுற பாதிப்புகள் ஒருபக்கம் இருக்கட்டும், இப்படி ஒரு ஆலையைச் சுத்தி இருக்குறவங்களுக்கு அபாய காலத்துலேர்ந்து எப்படிச் செயல்படணும்கிற முன்னேற்பாடு கள், எச்சரிக்கை நடவடிக்கைகளெல்லாம் சொல்லிக் கொடுக்கப்படணும் இல்லையா? நம்ம ஊர்ல அதெல்லாம் எந்த அளவுல இருக்கு? மனசாட்சி உள்ள ஒரு மனுஷன், இதோட முழு அபாயங்கள் அத்தனையையும் புரிஞ்ச மருத்துவன் எப்படிங்க வாய் மூடிப் பார்த்துக்கிட்டு இருக்க முடியும்?” என்று கேட்கும் மருத்துவர் புகழேந்தி, கல்பாக்கத்தைச் சேர்ந்தவர். இந்தப் பகுதி கடலோர மக்கள் மத்தியில் எளிமையான மருத்துவ சேவைக்கான நன்மதிப்பைப் பெற்றவர்.
“தமிழகக் கடற்கரையோரத்துல, கடல்ல நதிகள் கலக்குற இடங்களுக்குப் பக்கத்துலன்னு வரிசையா நாம ஆலைகளை நிறுவிக்கிட்டுருக்கோம். தமிழகக் கடற்கரை ஒரு அபாய வளைவு மாதிரி ஆயிக்கிட்டுருக்கு. நம்மளோட கடல் சூழலை மட்டும் இல்லை; நிலத்தடி நீர்மட்டத்தை, விவசாயத்தை, நம்மளோட உடல் நலம்னு எல்லாத்தையும் பாதிக்கக் கூடியது இந்த அபாய விளைவு. இன்னைக்குப் பாதிக்கப்படுற மக்கள் எழுப்புற குரல் நாளைக்கு நமக்கான எச்சரிக்கைக் குரல்” என்கிறார் நித்யானந்த் ஜெயராமன். தமிழகக் கடலோரப் பகுதிகள் நெடுக ஆய்வுகள் நடத்தி, தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகப் பேசிவரும் செயல்பாட்டாளர்.
“கூடிப் பேசும்போது எல்லாரும் சமம்; நம்ம எல்லாரோடய வளர்ச்சிக்காகவும்தான் இதெல்லாம் நடக்குதுன்னு கேக்கும்போது சந்தோஷமாதான் இருக்கு. ஆனா, இதோட ஆதாயம் காஷ்மீர் வரைக்கும் போவும். பாதிப்பு, தமிழ்நாட்டுக்கு மட்டும்தானே? பெரிய அளவுல யோசிச்சா இப்பிடி. சின்ன அளவுல யோசிங்க. லாபம் யாருக்கோ, நஷ்டம் கடக்கரை மக்களுக்கு. சுனாமி வந்தப்போ யாரு உசுரு மொதல்ல போச்சு? நாளைக்கு நீங்க கொண்டார்ற எந்தத் திட்டத்தால எந்தத் தீங்குன்னாலும் மொத பறிபோகுற உசுரு, எங்க உசுரு, எங்க புள்ளைங்க உசுருதானய்யா? அப்போம் எங்க கொரலுக்கு என்ன மதிப்பு கொடுக்குதீங்க?” என்கிறார் பரமசிவம். கடலோடி.
குரல்கள் அபயக் குரல்கள் மட்டும் அல்ல; எச்சரிக்கைகள்!

No comments:

Post a Comment