கதை சொல்லுவதற்கு எந்த இலக்கண வரம்பும் கிடையாது. அதனால் கேட்கும் சுவாரசியம் நீடிக்கும்வரை, கதையும் நீள்கிறது. நல்ல கதைசொல்லியின் கதைக்கு மயங்காதவர்களே இல்லை. இதுவரை குழந்தைகளுக்குச் சொல்லப்பட்ட மொத்தக் கதைகளுக்குள் ஒரு விதத்தில் மனித வரலாறே அடங்கி இருக்கிறது என்று சொல்லலாம்.
இக்கதைகளுக்கு மூல ஆதாரம் - 1001 இரவுகள் அரபுக் கதைகள், ஈசாப் கதைகள், பைபிள் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், புத்த ஜாதகக் கதைகள், மகாபாரதம், இராமாயணம் ஆகியவற்றிலிருந்து பொங்கி வழிகின்றன. இவற்றில் 1001 இரவுகள் அரபுக் கதைகளுக்கு இருக்கும் கவர்ச்சியும் ஈர்ப்பும் வியப்பும் இன்னமும் இளமையுடன் நீடிக்கிறது.
1001 இரவுகள் அரபுக் கதைகளின் மூலம், தெற்கும் மேற்கும் என்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில் உருவான புத்த ஜாதகக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் வழங்கப்பட்ட கதைகளின் செல்வாக்கும், தழுவலுமாக இக்கதைகள் உருவாகியதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் பாரசீகத்தில் காலிஃப்கள் அரசாண்ட காலத்தில் வாழ்ந்த கவிஞர் இபின் அல் முகாஃபா இக்கதைகளை அரபு மொழியில் மொழிபெயர்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தொடக்கத்தில் இவை ‘ஆலிப் லைலா கதைகள்’ என அழைக்கப்பட்டன. அதில் 1001 கதைகள் இல்லை, சில நூறு கதைகள்தான் இருந்தன. பின்னர் ஆயிரம் கதைகளாகப் பொங்கிப் பிரவாகமெடுத்தது என ராபர்ட் இர்வின் என்ற ஆய்வாளர் கூறுகிறார். ஆயிரத்து ஒன்றாவது கதை எப்போது இணைந்தது என்பது தெரியாவிட்டாலும் அதுவே இறுதியாகிவிட்டது. இவற்றில் பண்டைய சுமேரிய, மெசபடோமிய சொல்கதைகளும் அடங்கும்.
கதை, கதைக்குள் கதை, பல முடிச்சுகள், முடிச்சுகளை அவிழ்க்கும் பல உப-கதைகள் என முடிவுறாத பயணமாக 1001 இரவுகள் மீள்வதே அரபுக் கதைகளின் உத்தி. இந்த உத்தி இந்தியாவிலிருந்து வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையாக அமைவது ஒரு சட்டகக் கதை ஆகும். இது ஒரு கதைசொல்லி, தான் அக்கதையைச் சொல்வதற்கான அடிப்படையைக் கட்டமைக்கும் உத்தி ஆகும். இதில் கையாளப்படும் ஒரு விதமான சூட்சுமமே கதை முடியாமல் நீளச் செய்கிறது.
ஷார்யார் என்ற அரசன், பெண்கள் அனைவருமே கற்பு நெறி காக்காதவர்கள் என்று துணிந்து தன் மனைவியைக் கொல்கிறான். பிறகு தினம் ஒரு கன்னிப் பெண்ணாக மணம் முடித்து மறுநாள் காலையில் கொலைசெய்கிறான். நாட்டிலுள்ள கன்னிப் பெண்கள் அனைவரும் உயிரிழக்கிறார்கள், அவனுடைய புது மனைவி ஷாஹராஜத் தவிர. அன்று ஷாஹராஜத் நாள். அவள் தைரியமாக மன்னனை மணம் முடிக்கிறாள். அன்றிரவு, தனது தங்கை தன்னிடம் கதை கேட்டால்தான் தூங்குவாள்; ஆகவே தனது வாழ்வின் இந்தக் கடைசி நாளிலும் அவளுக்குக் கதை சொல்ல அனுமதிக்குமாறு மன்னனிடம் முறையிடுகிறாள். மன்னன் அனுமதிக்க அவள் கதை சொல்லத் தொடங்குகிறாள். விடியும்வரை கதையின் சுவாரசியம் நீடிக்கிறது. கதை முடியும் நேரம். கதையின் முடிச்சு அவிழும் கணம். இன்னும் சில மணித்துளிகள் பாக்கி. இதோ சூரியன் உதிக்கிறது. கதையின் விடையை இன்னொரு கதையுடன் முடிச்சிடுகிறாள் ஷாஹராஜத்.
அதற்கு இரவுவரை காத்திருக்க வேண்டும். கதையின் விடை அறிவதன் பொருட்டு அன்று அவளது மரண தண்டனையை மன்னன் தள்ளிப் போடுகிறான். மறுநாள் இன்னொரு கதை. அக்கதையின் விடை மற்றொரு கதையில். இப்படிக் கதையின் சுவாரசியத்தால் 1001 இரவுகள் தனது தலையைக் காப்பாற்றிக்கொள்கிறாள். இது தான் 1001 இரவுகள் கதையின் சட்டகக் கதை. இது தவிர ஷாஹராஜத் கூறும் பல கதைகள் சட்டகக் கதைக்குள் சட்டகக் கதை யாகச் செயல்பட்டுள்ளன. உதாரணமாக, சிந்துபாத் குறித்த கதைகளுக்கான சட்டகக் கதையாகக் கடலோடி சிந்துபாத் மற்றும் விவசாயி சிந்துபாத் ஆகியோரின் கதையைக் கூறலாம்.
இக்கதைகளில் இடம்பெறும் விலங்குகள் குறித்தான கதையாடல்கள் இந்திய நாட்டார் வழக்காற்றுக் கதைகளை நினைவூட்டுவதாகவும், புத்த ஜாதகக் கதைகளில் இடம்பெறும் வாழ்வியல் அறம் குறித்த கதைகளின் பாதிப்பை நேரடியாகக் காண முடிவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாகச் சட்டகக் கதையில் வரும் காளையும் கழுதையும் குறித்த கதையாடல் புத்த ஜாதகக் கதையில் அப்படியே இடம்பெறுகிறது. பஞ்சதந்திரக் கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு அல்லது தழுவல் சுவடிகள் எகிப்து மற்றும் சிரிய வணிகர்களுக்கு அறிமுகமாகி அதன் செல்வாக்கைச் செலுத்த வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.
இந்த அரபுக் கதைகள் பிரெஞ்சு மொழியில்தான் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. இதில் அரபு மூலத்தில் இடம்பெறாத ‘அலாவுதீனின் அற்புத விளக்கு’ மற்றும் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ ஆகிய கதைகளும் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டன என்று கூறப்படுகிறது. இது மூலப் பிரதியில் இல்லாதபோதும் அலெப்போவில் வாழ்ந்த ஒரு சிரியன் கிறித்துவக் கதைசொல்லி இதைத் தம்மிடம் கூறியதாக பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் ஆண்டனி காலந்த் கூறியுள்ளார். ஆங்கிலத்தில் 1706-ல் மொழிபெயர்க்கப்பட்டது. கடலோடி சிந்துபாத்தின் ஏழு பயணங்கள் கதையும் இடைச்செருகல் எனக் கூறப்படுகிறது.
கற்பனை, புனைவு, மாயம் போன்றவை கலந்திருந்தாலும் கதைப்போக்கு எப்போதும் யதார்த்தங்களைச் சுட்டிக்காட்டுவதாக அமைவதே இதன் வெற்றியாகும். கொலைகள், மர்மங்கள், மாயங்கள், விநோதங்கள், விந்தைகள், வண்ண வண்ண மீன்கள், கொடிய நாகங்கள், பேசும் மலைகள், நல்ல எண்ணம் கொண்ட விலங்குகள், கெட்ட எண்ணம் கொண்ட விலங்குகள் என மனிதக் கற்பனையின் சாத்தியங்கள் அனைத்தும் கொட்டிக் கிடக்கும் அற்புத உலகம் இது.
ஜெர்மானிய மகாகவி கதே, லியோ டால்ஸ்டாய், புஷ்கின், சல்மான் ருஷ்டி, ஓரான் பாமுக், டூமாஸ், சார்லஸ் டிக்கன்சன், டி.எச். லாரன்ஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ் உள்ளிட்ட ரஷ்ய, பிரெஞ்சு, ஜெர்மானிய, ஸ்பானிய, ஆங்கிலேய, ஆசிய, அமெரிக்க நிலப்பரப்புகளை உள்ளடக்கிய ஏராளமான நவீன இலக்கியவாதிகள் 1001 இரவுகள் கதை உலகால் பாதிக்கப்பட்டவர்கள். இதுபோல அரபுக்கதைகள் உலக சினிமா, ஓவியம், இசைப் புலங்களில் செலுத்திய செல்வாக்கும் அபரிமிதம்!
- கட்டுரையாளர், ஒரு எழுத்தாளர்.
No comments:
Post a Comment