Thursday, 21 August 2014

கத்த முடியாத நெட்டை விலங்கு

# உலகின் உயரமான பாலூட்டி விலங்கு ஒட்டகச் சிவிங்கி.
# ஆப்பிரிக்கப் புல்வெளிகள், காடுகளில் அதிகம் காணப்படுகின்றன.
# ஆண் ஒட்டகச் சிவிங்கியின் எடை சராசரியாக 1,400 கிலோ வரை இருக்கும். ஒரு ட்ரக் வண்டியின் எடையளவு அது.
# ஒட்டகச் சிவிங்கியின் சிறப்பம்சமே அதன் கழுத்துதான். இது ஒன்றரை மீட்டர் முதல் 1.8 மீட்டர் வரை நீண்டு இருக்கும்.
# ஒட்டகச் சிவிங்கியின் வாலில் உள்ள ரோமம் மனிதர்களின் தலைமுடியைவிட 10 மடங்கு அடர்த்தியானது.
# ஒட்டகச் சிவிங்கியின் தோலில் உள்ள திட்டுகள் நமது கைரேகைகளைப் போலவே இருக்கும். ஒரு ஒட்டகச் சிவிங்கியின் திட்டுகளும் இன்னொரு சிவிங்கியின் திட்டுகளும் ஒருபோதும் ஒன்றாக இருப்பதில்லை.
# வேட்டையாட வரும் விலங்குகளிடமிருந்து மறைவாகத் தப்பித்துக் கொள்ள இந்த உடல் புள்ளிகள் உதவுகின்றன. மரங்களிடையே மறைவில் இருக்கும்போது இதன் உடலை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இவற்றின் தோலும் புள்ளிகளும் மரத்தின் நிழலோடு ஒன்றாகிவிடும்.
# ஒட்டகச் சிவிங்களில் ஆண், பெண் இரண்டுக்கும் கொம்புகள் உண்டு. ஆனால் பெண் ஒட்டகச் சிவிங்கிகளின் கொம்புகள் சிறியது. இவற்றின் கொம்புகள் ரோமத்தால் போர்த்தப்பட்டிருக்கும்.
# ஒட்டகச் சிவிங்கிகளுக்கு நான்கு வயிற்று அறைகள் உண்டு. உணவைச் செரிமானம் செய்ய இந்தக் கூடுதல் வயிற்று அறைகள் உதவுகின்றன.
# ஒட்டகச் சிவிங்கிகள் தண்ணீர் பருகும் நேரம்தான் அபாயகரமானது. முன்கால்களை அகலப் பரப்பினால்தான் அவற்றால் கழுத்தைக் குனிய முடியும். கழுத்தைச் சாய்த்து நீரைப் பருகும்போது அவற்றால் தங்களைத் தாக்கவரும் விலங்குகளைப் பார்க்க முடியாது.
# ஆண் ஒட்டகச் சிவிங்கியும், பெண் ஒட்டகச் சிவிங்கியும் ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் நின்றுகொண்டு கழுத்தைக் கட்டிச் சண்டையிடும். சில நேரம் மற்றொரு ஒட்டகச் சிவிங்கியை கீழே தள்ளிவிடும்.
# ஒட்டகச் சிவிங்கியின் கர்ப்பக் காலம் 14 முதல் 15 மாதங்கள். ஒரு குட்டியைத்தான் ஒரு நேரத்தில் பிரசவிக்கும்.
# பெண் ஒட்டகச் சிவிங்கி குட்டிபோடும்போது நின்றுகொண்டேதான் குட்டியைப் பிரசவிக்கும். குட்டி ஆறு அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்தாலும் எந்தக் காயமும் ஏற்படாது.
# பிறந்து சில மணி நேரங்களில் குட்டிகள் ஓடக்கூடியவை. குட்டிகள் 1.8 மீட்டர் உயரம் இருக்கும். வளர்ந்த ஒட்டகச் சிவிங்களைவிட வேட்டை விலங்குகளால் அதிகம் பாதிக்கப்படுபவை குட்டிகள்தான்.
# ஒட்டகச் சிவிங்கியின் நாக்கு நீளமாகவும் உறுதியாகவும் இருக்கும். நாக்கின் நிறம் நீல வண்ணத்தில் இருக்கும். உறுதியான நாக்கு முள்மர இலைகளையும் சாப்பிட உதவியாக உள்ளது.
# ஒரு மணி நேரத்துக்குப் பத்து மைல் தூரத்தை ஒட்டகச் சிவிங்கிகளால் கடக்க முடியும்.
# ஒட்டகச் சிவிங்கிக்கு அதிக தண்ணீர் தேவையில்லை. ஒரு சில நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் குடிக்கும். அதற்கு தேவையான நீர்ச்சத்தைத் தாவரங்கள் மூலமே பெற்றுக்கொள்கிறது.
# ஒரு சிங்கத்தையே காலால் தாக்கி கொல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது ஒட்டகச் சிவிங்கி.
# ஒட்டகச் சிவிங்கியின் வயதை அதன் திட்டுகளை வைத்துக் கணக்கிட முடியும். அதன் திட்டுகள் அடர்த்தியாக இருந்தால் வயதான ஒட்டகச்சிவிங்கி என்று பொருள்.
# ஒட்டகச் சிவிங்குக்கு குரல் நாண் இருந்தாலும் அதனால் சத்தம் போட்டு கத்த முடியாது.

No comments:

Post a Comment