Tuesday, 5 August 2014

காமன்வெல்த் போட்டியில் இந்தியா - ஒரு பார்வை

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவில் இருந்து 215 பேர் பங்கேற்றனர். நெட்பால், ரக்பி செவன்ஸ், டிரையத்லான் ஆகிய பிரிவுகளில் மட்டும் இந்தியா பங்கேற்கவில்லை.
தடகள பிரிவில் வட்டு எறிதலில் இந்தியாவின் விகாஸ் கவுடா இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்தார். இதன் மூலம் 52 ஆண்டுகளுக்குப் பின் காமன்வெல்த் தடகளத்தில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. அதேபோல காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காஷ்யப் தங்கம் வென்றார். இதன் மூலம் 32 ஆண்டுகளுக்குப் ஆடவர் ஒற்றையர் பிரிவு பாட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. இவை இந்த காமன்வெல்த் போட்டியில் குறிப்பிடத்தக்க சாதனைகள்.
தமிழகத்தின் தீபிகா – ஜோஷ்னா ஜோடி குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது. இப்பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை. இதன் மூலம் நாட்டுக்கும் தமிழகத்துக்கும் அவர்கள் பெருமை சேர்த்தனர். இந்த காமன்வெல்த்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையாக தமிழகத்தின் சதீஷ் சிவலிங்கம் பளு தூக்குதலில் தங்கம் வென்று நமது மாநிலத்துக்கு பெருமை சேர்த்தார்.
2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியுடன் ஒப்பிடும்போது இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த முறை இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்றது. இந்த முறை 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த முறை இந்தியாவில் போட்டி நடைபெற்றது நமது வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தது.
இம்முறை இந்தியாவுக்கு மல்யுத்தப் போட்டியில் அதிகபட்சமாக 5 தங்கம் கிடைத்தது. இதற்கு அடுத்தபடியாக துப்பாக்கி சுடுதலில் 4 தங்கத்தை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றனர். பளு தூக்குதலில் 3 தங்கம் கிடைத்தது. வட்டு எறிதல், பாட்மிண்டன், ஸ்குவாஷ் ஆகியவற்றில் தலா 1 தங்கம் கிடைத்தது.
30 வெள்ளிப் பதக்கங்களில் ஒன்பதை துப்பாக்கி சுடும் போட்டியில் நமது வீரர்கள் வென்றனர். இதற்கு அடுத்தபடியாக பளு தூக்குதலில் 5 வெள்ளி கிடைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாக்கியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து தங்கத்தை கோட்டை விட்ட இந்திய அணி வெள்ளியுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
தங்கம் வென்ற வீரர்கள் விவரம்
சதீஷ் சிவலிங்கம்
வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த சதீஷ் ஆடவர் 77 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார். மொத்தம் 328 கிலோ (ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 179 கிலோ) எடையைத் தூக்கினார். 22 வயதாகும் சதீஷ், ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ எடையைத் தூக்கியதன் மூலம் புதிய காமன்வெல்த் சாதனையையும் படைத்தார்.
சஞ்ஜிதா சானு
மணிப்பூரை சேர்ந்த சஞ்ஜிதா மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார். இந்த காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்தவரும் சஞ்ஜிதா தான்.
சுகன் தேவ்
மேற்கு வங்கத்தின் ஹவுராவைச் சேர்ந்த சுகன் தேவ் ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் பளு தூக்குதலில் தங்கம் வென்றார். 2010-ல் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இதே பிரிவில் சுகன் தேவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அபிநவ் பிந்த்ரா
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த அபிநவ் பிந்த்ராவுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்த காமன்வெல்த் போட்டியில் அவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார்.
அபூர்வி சந்தேலா
21 வயது இளம் வீராங்கனையான அபூர்வி ஜெய்ப்பூரை சேர்ந்தவர். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இவர் தங்கம் வென்றார். 2012-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இப்போது சர்வதேச போட்டியில் தங்கம் வென்று துப்பாக்கி சுடுதலில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
ராகி சர்னோபட்
மகாராஷ்டிரத்தை சேர்ந்த வீராங்கனை ராகி சர்னோபட் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார். 2008-ல் இளையோர் காமன்வெல்த் போட்டியிலும் ராகி தங்கம் வென்றுள்ளார். 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பாரீஸ் பிரிவிலும் தங்கத்தை கைப்பற்றினார். உலக சாம்பியனான தேஜஸ்வினியையும் இவர் வீழ்த்தியுள்ளார்.
ஜீது ராய்
10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் சர்வதேச அளவில் முதல் இடத்தில் இருப்பவர் ஜீது ராய். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரு பதக்கங்களை வென்ற சாதனை படைத்தவர். காமன்வெல்த்தில் 50 மீ்ட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.
அமீத் குமார்
2013-ல் உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் பிரபலமானவர் அமீத் குமார். 20 வயதே ஆகும் அமீத் குமார், 2012-ல் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்றார். இதன் மூலம் இந்தியாவில் இருந்து மிக இளம் வயதில் (18) ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையை பெற்றார். காமன்வெல்த் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.
வினேஷ் போகத்
காமன்வெல்த் மல்யுத்தத்தில் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றவர் வினேஷ் போகத். 19 வயதாகும் இவர் ஹரியாணாவைச் சேர்ந்தவர், முன்னாள் மல்யுத்த வீராங்கனை கீதா போகத்தின் உறவினர்.
சுஷில் குமார்
2010-ம் ஆண்டில் மல்யுத்தத்தில் உலக சாம்பியன் ஆனவர் சுஷில் குமார். 2012-ல் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 4 தங்கம் வென்றுள்ள சுஷில் குமார், இந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் இப்போட்டியில் தொடர்ந்து இரு தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இம்முறை முதல்முறையாக 74 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார்.
பபிதா குமாரி
ஹரியாணாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனையான பபிதா குமாரி மகளிர் 55 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் தங்கம் வென்றார். சர்வதேச அளவில் அவர் வென்ற முதல் தங்கப்பதக்கம் இது. இதற்கு முன்பு 2010 காமன்வெல்த்தில் வெள்ளியும், 2012 உலக சாம்பியன் ஷிப் போட்டியில் வெண்கலமும் வென்றுள்ளார்.
யோகேஷ்வர் தத்
ஏற்கெனவே ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் யோகேஷ்வர் தத். கடந்த முறை காமன்வெல்த் போட்டியில் 60 கிலோ ப்ரி ஸ்டைல் பிரிவில் தங்கம் வென்ற யோகேஷ்வர், இந்தமுறை 65 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.
விகாஷ் கவுடா
கர்நாடகத்தின் மைசூரில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர் விகாஷ் கவுடா. இந்த காமன்வெல்த் போட்டியில் 63.64 மீட்டர் தூரம் வட்டு எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். கடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை இவர் கைப்பற்றினார். இப்போது தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1959 காமன்வெல்த்தில் மில்கா சிங் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றதே இந்தியா தடகள போட்டியில் வென்ற ஒரே தங்கமாக இருந்தது.
காஷ்யப்
ஹைதராபாதைச் சேர்ந்த காஷ்யப் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் வென்று பெருமை சேர்த்தார். கடந்த காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற இவர், இப்போது முழுமூச்சுடன் போராடி தங்கத்தை கைப்பற்றியுள்ளார். 2012-ல் மத்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்துள்ளது.
தீபிகா பலிக்கல் - ஜோஷ்னா
ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற இந்த ஜோடிகளுக்கும் பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லைதான். சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் முதல்முறையாக 10 இடத்துக்குள் வந்த இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் தீபிகா. 2003-ல் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பிரிட்டிஷ் குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் ஜோஷ்னா. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் 7 பட்டங்களை வென்றுள்ளார்.

No comments:

Post a Comment