Monday, 25 August 2014

நடனமாக மாறிய நாடகம்

நிருத்தம், நிருத்யம் மற்றும் நடனம் ஆகியவை குச்சிப்பிடி நடனத்தின் அங்கங்கள் ஆகும். நிருத்தம் தீர்மானங்களையும், ஜதிகளையும் கொண்டது. நிருத்யம் என்பது பாடல் பகுதி. நடனம் என்பது முக பாவனைகள் மற்றும் கை முத்திரைகளை அடக்கியது ஆகும். நடனத்தில் ஒரு பகுதியாக வெண்கலத் தாம்பாளத்தின் விளிம்பின்மீது நின்றுகொண்டு ஆடுவதுண்டு. இந்தப் பகுதிக்குப் பெயர் 'தரங்கம்' ஆகும். சில சமயம் தண்ணீர்ப் பானையுடனும் ஆடுவதுண்டு.
இதிகாச நடனம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள குச்சிலாபுரம் என்ற குக்கிராமத்தில் இந்த நடனம் பிறந்து வளர்ந்ததால் நடனத்துக்குக் குச்சிப்புடி என்ற பெயர் வந்ததாகக் கூறுவர்.
பெரும்பாலும் புராண, இதிகாக் கதைகள்தான் பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக இந்த வகை நடனத்தில் ஆடப்படும். கதாபாத்திரங்களில் பெண் வேடத்தையும் ஆண்களே ஏற்றுக்கொண்டு ஆடுவர். அதுவும் தனி நபரே அனைத்துக் கதாபாத்திரங்களையும் அபிநயம் பிடிப்பது என்பது வழக்கத்தில் வந்துவிட்டது.
மன்னருக்குச் செய்தி
இந்த நாட்டிய நாடகம் மூலம் எந்த ஒரு கருத்தினையும் தெளிவாக எடுத்துக் கூற முடியும். ஆந்திர மாநிலத்தின் மன்னரான நரச நாயக்கர் விதித்த வரியினால் மக்கள் அவதியுற்றனர். இதனை மன்னனிடம் எடுத்துச் சொல்ல ஆஸ்தான கலைஞர்கள் குச்சிப்புடி நடனத்தைப் பயன்படுத்தி உள்ளனர். அந்த நாட்டியத்தின் மூலம் மக்கள் குறைகளை மன்னர் உணர்ந்தார். வரியில் மாற்றங்களைச் செய்து மக்களை மகிழ்வித்தார் என்று ஒரு செய்தி உள்ளது.
இந்த நாட்டியத்துக்குப் பக்க வாத்தியக் கருவிகளாக ஹார்மோனியம், புல்லாங்குழல், வீணை, வயலின், மிருதங்கம், கஞ்சிரா ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. வாய்ப்பாட்டும், நட்டுவனார் ஜதியும் பிரதானமாகப் பயன்படுத்தப்படும். பாடலில் உள்ள சொற்களுக்கும், பொருட்களுக்கும் ஏற்ற விதத்தில் அபிநயம் பிடிக்கப்படும்.
இன்று இந்தியா முழுவதும் இந்த நடனம் மக்களால் ரசிக்கப்படுகிறது

No comments:

Post a Comment