பல்வேறு தேர்வுகளுக்குத் தேவையான ஆதாரபூர்வமான தகவல்களைத் தேடி அலைகிறீர்களா நீங்கள்?
ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளியியல் பிரிவு, 6 கோடி ஆவணங்களோடு முற்றிலும் தகவலுக்காகவே ஒரு தனியான இணையதளத்தை நடத்துகிறது.
இந்த இணையதளத்தில், தரவுகள் (Data), சொல்லடைவு (Glossary), மேனிலைத்தரவுகள் (Metadata), எனும் தலைப்புகள் உள்ளன. இதன் தேடுதல் பெட்டியிலும் நமக்குத் தேவைப்படும் தகவல்களைத் தேடலாம்.
இந்த இணையதளத்தில் தரவுத்தளங்கள் (Databases) எனும் தலைப்பின் கீழ் தரவு தொகுப்புகள் (Datasets), ஆதாரங்கள் (Sources), தலைப்புகள் (Topics) எனும் மூன்று துணைத் தலைப்புகள் தரப்பட்டிருக்கின்றன. இதில் தரவுத் தொகுப்புகள் எனுமிடத்தில் சொடுக்கினால், சில தரவுத் தொகுப்புகள் அகர வரிசைப்படி தரப்பட்டிருக் கின்றன. ஆதாரங்கள் எனுமிடத்தில் சொடுக்கினால், தரவுத் தொகுப்புகளுக்கு ஆதாரமான அமைப்புகள், நிறுவனங்கள் பெயர்ப் பட்டியல் அகர வரிசைப்படி தரப்பட்டிருக்கின்றன.
தலைப்புகள் எனுமிடத்தில் சொடுக்கினால் குற்றம் (Crime), கல்வி (Education), சக்தி (Energy), சுற்றுச்சூழல் (Environment), நிதி (Finance), உணவு மற்றும் விவசாயம் (Food and Agriculture), போன்ற ஏராளமான உள் தலைப்புகள் தரப்பட்டுள்ளன. இந்தத் தலைப்புகளின் கீழ் சில துணைத் தலைப்புகளும் உள்ளன. இவற்றில் நமக்குத் தேவையான தலைப்பில் வைத்துச் சொடுக்கினால் அது குறித்த முழுத் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.
இற்றைப்படுத்தல் (Updates) எனும் தலைப்பின் கீழ் புதிதாகச் சேர்க்கப்பட்ட புதிய தகவல்களின் குறிப்புகள் பட்டியலாக இடம் பெற்றிருக்கிறது. இதில் தேவையான குறிப்பில் சொடுக்கிப் புதிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். நாடுகளுக்கான தரவுத் தகவல்கள் (Country Data Services) எனும் தலைப்பின் கீழ் நாடுகளின் பெயர்ப் பட்டியல் இடம் பெற்றிருக்கிறது.
ஆதாரப்பூர்வமான பல்வேறு தகவல்களைக் கொண்டிருக்கும் இந்தத் தளத்தைப் பயன்படுத்தித் தகவல்களைத் திரட்டிக் கொள்ள விரும்புபவர்கள் http://data.un.org/ எனும் இணைய முகவரிக்குப் பயணிக்கலாம்.
- தேனி. மு. சுப்பிரமணி
No comments:
Post a Comment