Monday, 4 August 2014

ஐ.ஏ.எஸ். வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்


பல்லாயிரக்கணக்கான மாதிரி வினா-விடைகளைச் சேகரித்து இரவு பகலாக மாதிரித் தேர்வு எழுதி எழுதிப் பயிற்சி பெற்ற மாணவர்கள்கூட ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற முடியவில்லை. இதற்குத் தீர்வு முழுமையான தயாரிப்பு இல்லாததுதான்.

அடிப்படைத் தேவை

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களில் உள்ள இந்திய வரலாறு, இந்திய மற்றும் உலகப் புவியியல், இந்திய அரசியல் மற்றும் ஆட்சிமுறை, இந்தியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, இந்தியச் சுற்றுச் சூழல், பல்லுயிர்ப் பெருக்கம், பருவநிலை மாற்றம் குறித்த அடிப்படையான பொது விஷயங்கள் எல்லாம் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதுவே அடிப்படையானது.

பற்றி எரியும் பிரச்சினைகள்

தேர்வுக்குத் தயாராகும் காலகட்டத்தில் நிகழுகிற தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் பற்றிய தெளிவான அறிவும் அவசியம்.

நல்ல தரமான ஆங்கில, தமிழ்ச் செய்தித் தாள்களைத் தொடர்ந்து படித்துக் குறிப்புகள் எடுத்துக்கொள்வது நல்லது.

பற்றி எரியும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது பெரிதும் உதவும்.தேசியப் பிரச்சினைகள், சர்வதேசப் பிரச்சினைகள், இந்தியாவோடு தொடர்புடைய சர்வதேச செய்திகள், பொருளாதாரம் சார்ந்தவை, வரலாறு சார்ந்தவை, மசோதாக்கள் சார்ந்தவை, உச்சிமாநாடுகள், தேசிய - சர்வதேச அமைப்புகளின் மாநாடுகள் - ஒப்பந்தங்கள், தேசிய - சர்வதேச விருதுகளும் பரிசுகளும், செய்திகளில் முக்கியத்துவம் பெறுபவர்கள், செய்திகளில் முக்கியத்துவம் பெறும் இடங்கள், விளையாட்டுச் செய்திகள், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த செய்திகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தவை, இயற்கைப் பேரழிவுகள் என வகைப்படுத்த வேண்டும்.

முக்கியத் தேர்வில் நாட்டு நடப்பு குறித்த நமது எண்ணங்களையும் விமர்சனங்களையும் தீர்வுகளையும் கட்டுரைகளாகவும் விளக்க விடைகளாகவும் எழுத வேண்டியதிருக்கும். எனவே, ஆரம்பத்திலிருந்தே நாட்டு நடப்புகள் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் படித்து வருவது இத்தேர்வில் வெற்றி பெறப் பெரிதும் துணைநிற்கும்.

முந்தைய கேள்வித்தாள்கள்

முந்தைய ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான கேள்வித்தாள்கள் எவ்வாறு, எந்தெந்த வகைகளில் அமைந்துள்ளன என்பதை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து புரிந்துகொள்வது அவசியம்.

ஒரு பழைய முதல்நிலைத் தேர்வு முதல் தாளில் நேரடியாக விடைகளைத் தேர்ந்தெடுக்கிற வகையில் 15சதவீதத்துக்கும் குறைவான கேள்விகளே அமைந்துள்ளன. 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட 4 கூற்றுகளில் எது சரி, எது தவறு என்று கண்டறியும் வகையில் அமைந்துள்ளன. இந்த வகைக் கேள்வி அமைப்பு குறிப்பிட்ட அந்த விஷயத்தைப்பற்றி நமக்குத் தெளிவு இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பதாய் அமைந்துள்ளது.

முந்தைய ஆண்டு கேள்வித் தாள்களில், பாடத்திட்டத்தின் எந்தெந்தப் பகுதிகளுக்கு எந்தெந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நுட்பமாகப் புரிந்துகொண்டால், எதிர்வரும் தேர்வில் கேள்விகள் எப்படி அமைய முடியும் என்பதை ஓரளவுக்குச் சரியாக ஊகிக்க முடியும். அது மட்டுமல்ல முந்தைய ஆண்டுக் கேள்வித்தாள்களில் உள்ள கேள்விகள், எந்தெந்தப் பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளனவோ அந்தப் பகுதிகள் எல்லாம் மிக முக்கியமாகப் படிக்க வேண்டிய பகுதிகள். அந்தப் பகுதிகளை முழுமையாக, நுட்பமான விவரங்கள் உட்படப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த ஆண்டுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்கள் முந்தைய ஆண்டு கேள்வித் தாள்களை வைத்துத் தேர்வு எழுதிப் பழகலாம். இந்தப் பயிற்சியில் எந்த அளவுக்கு விடையளிக்க முடிகிறதோ அதுதான் அவர்களது தயாரிப்பின் தரம்.கேள்வித்தாளைப் புரிந்துகொண்டாலே பாதி வெற்றி. கேள்வித்தாளை அவற்றின் வகைகளை, கேட்கப்படும் முறையை நன்கு தெரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

நேர்மறை எண்ணங்கள்

முதல்நிலைத் தேர்வின் இரண்டாவது தாள், போட்டியாளரின் தனி இயல்பையும் பல்வகைத் திறனையும் மனவளத்தையும் எழுத்துத் தேர்வு மூலம் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இத்தாளைச் சிறப்பாக எழுத நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்தாளுக்கு விடையளிக்கும்போது நீங்கள் சூழலுக்கு ஏற்ற சிறந்த, நியாயமான முடிவை எடுக்கும் திறன், பிறரோடு இயல்பாக, சுமூகமாகப் பழகும் திறன் - நட்புணர்வோடு கலந்துரையாடும் திறன், கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறன், பிறர் கருத்துக்கு மதிப்பளித்துக் கவனிக்கும் இயல்பு, மக்கள் சேவைக்கு அர்ப்பணிப்பு, அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தும் நேர்மை, மனித நேயம், உடன் பணியாற்றுபவர்களும் மன மகிழ்ச்சியோடு ஒத்துழைப்பு நல்க வைக்கும் அணுகுமுறை உடையவர் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள விடைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி மேற்கண்ட சிறந்த திறமைகளையும் பண்புகளையும் உடையவராக உங்களை மாற்றிக் கொள்ளவும் வேண்டும்.

ஆங்கிலப் புரிதல் திறனைப் பயிற்சி மூலம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஐ. ஏ. எஸ். ஆக வேண்டும் என்ற ஆசை, ஆர்வமாக மாறி ஆக்கப்பூர்வமான லட்சிய வெறியாக உயர வேண்டும். கடுமையான உழைப்பைவிட விவேகமான உழைப்பே இத்தேர்வின் வெற்றிக்கு வித்திடுகிறது என்பதை மறக்க வேண்டாம்.

(கட்டுரையாளர், ஒரு பேராசிரியர் )

No comments:

Post a Comment