நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச வீடியோ மற்றும் படங்களை வெளியிடுவது, குழந்தைகளை வைத்து படமாக்கப்படும் பாலியல் வக்கிர காட்சிகளைப் பரப்புவது போன்ற போர்னோகிராபி சார்ந்த குற்ற வழக்குகள் கடந்த 2012-13 காலகட்டத்தில் மட்டும் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தேசிய குற்றப் பதிவுகள் அமைப்பின் புள்ளியல் விபரம் ஆகும்.
2012-ல் இத்தகைய வழக்குகள் மொத்தம் 589 பதிவாகின. ஆனால் கடந்த ஆண்டு இவற்றின் எண்ணிக்கை 1,203 ஆக அதிகரித்துள்ளது என்கிறது அந்தப் புள்ளி விபரம். ஆந்திர மாநிலத்தில் இருந்தே அதிகபட்சமாக 234 வழக்குகள் எழுந்துள்ளன. இரண்டாவது இடத்தில் கேரளா இருக்கிறது. இங்கு 177 வழக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் 159 வழக்குகளும் பதிவாகியுள்ளன. உ.பி.யில் 2012-ல் மட்டும் 26 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. 2012-ல் அசாம் மாநிலத்தில் ஒரு வழக்கு கூட பதிவாகாத நிலையில் 2013-ல் 111 புகார்கள் பதிவாகியுள்ளன. ராஜஸ்தானில் பதிவான வழக்குகள் 81. இது கடந்த 2012-ல் 48 ஆக இருந்தது.
இந்த புள்ளவிபரங்கள் அனைத்தையும், பாஜக எம்.பி. வருண் காந்தி மக்களவையில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 67, 67 ஏ, 67 பி-ன் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களின் எண்ணிக்கை 60% மேல் அதிகரித்திருக்கின்றன எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய வழக்குகளின் அடிப்படையில் கைதான 737 பேரில், 167 பேர் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், 130 பேர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்களாவர்.
விசாரணைக்கு முற்றுக்கட்டை போடும் தகவல் பற்றாக்குறை:
குழந்தைகளை பயன்படுத்தி செய்யப்படும் பாலியல் வக்கிர குற்றங்கள் குறித்த தகவல் பற்றாக்குறை காரணமாகவே இவை தொடர்பான விசாரணைகள் முடங்கிப்போகின்றன என கூறப்படுகிறது. போதிய தகவல் இல்லாததால், இத்தகைய விசாரணையை மேற்கொள்ளும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
இது குறித்து 'துளிர்' குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் வித்யா ரெட்டி கூறும்போது, "தேசிய குற்றப் பதிவுகள் அமைப்பானது குழந்தைகள் பாலியல் வக்கிரகாட்சிகள் தொடர்பான புள்ளி விபரங்களை அளிப்பதில்லை. இதனால் இந்தப் பிரச்சினையின் ஆழம் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, இத்தகைய குற்றங்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை சேகரிக்கும் முறை நெறிப்படுத்தப்பட வேண்டும்.
2007-ல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யக்கூடிய குற்றங்கள் குறித்த புள்ளிவிபரங்கள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. குழந்தைகளை அடித்து துன்புறுத்தி தண்டனை வழங்குவது, குழந்தைகளை ஆபாச படங்களில் பயன்படுத்துவது போன்ற குற்றங்களை தேசிய குற்றப் பதிவுகள் அமைப்பின் புள்ளி விபரத்தில் இடம்பெறவில்லை. ஏனெனில் இவை இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய கூடிய குற்றங்களாக இவை அங்கீகரிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
குற்றங்களின் முகம் மாறிவருகிறது என்பதை விசாரணை அமைப்புகள் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. பாலியல் குற்றங்களில் தொழில்நுட்ப பயன்பாடு அவற்றின் தன்மையை மாற்றிவிட்டன. அதற்கேற்ப காவல்துறையும், தொழில்நுட்பத்தை விசாரணையில் பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் இத்தகைய குற்றங்களை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் பதிவு செய்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும். இதற்கு காவல்துறையினருக்கு போதிய தொழில்நுட்ப பயிற்சியினை அரசே வழங்க வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் போர்னோகிராபி சார்ந்த வழக்குகள் பதிவாவது இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment