Wednesday, 13 August 2014

காஸாவில் மனித உரிமை மீறல்?- 3 நபர் விசாரணைக் குழு அமைத்தது ஐ.நா; ஆதரவு தெரிவித்து வாக்களித்தது இந்தியா

இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பு இடையே போர் நடைபெற்று வரும் காஸா பகுதியில் மனித உரிமைகள் மீறப்பட்டதா, போர் குற்றங்கள் நிகழ்ந்ததா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள 3 நபர்கள் அடங்கிய குழுவை ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ளது.
லண்டனில் வசிக்கும் பிரிட்டிஷ் லெபனான் மனித உரிமை கவுன்சில் வழக்கறிஞர் அமல் அமாலுதின், சர்வதேச குற்றச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் சாபாஸ், இனவெறிக்கு எதிரான கூட்டமைப்பின் தலைவர் டோக்டஸ் டைன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதில் அமல் அமாலுதின் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளுனியை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.
29 நாடுகளின் ஆதரவுடன் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் இக்குழுவை அமைக்க ஆதரவு தெரிவித்து வாக்களித்தது. இக்குழு தனது அறிக்கையை 2015 மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் அளிக்கும்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஜூன் 13-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதி, கிழக்கு ஜெருசலேம், காஸாவின் ஒரு பகுதி ஆகியன இந்த போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பெண்கள், குழந்தைகள் என்று கூட பாராமல் அனைவரையும் இஸ்ரேல் குண்டு வீசி கொன்று குவிப்பதாக பாலஸ்தீன தரப் பினர் குற்றம்சாட்டியுள்ளன. அதே நேரத்தில் தங்களை பாது காத்துக் கொள்ள ஹமாஸை அமைப்பினரை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்துகிறோம் என்றும், பெண்களையும், குழந்தைகளையும் ஹமாஸ் மனித கேடயங்களாக பயன்படுத்துகிறது என்றும் இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.
போரில் இதுவரை சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர் களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள். இஸ்ரேல் தரப்பில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். காஸா பகுதியில் சுமார் 12 ஆயிரம் வீடுகள் குண்டு வீச்சால் தரை மட்டமாகியுள்ளன.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு சாத்தியமா?
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பு இடையே எகிப்து தலைநகர் கெய்ரோவில் தூதர்கள் மூலம் நடைபெற்ற பேச்சுவார்த்தையால் அவ்வப்போது சில நாள்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டு வந்தது.
போர் நிறுத்தத்தை மீறி ஹமாஸ் தாக்குதலை தொடங்கி யதை அடுத்து மீண்டும் காஸா வில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே மீண்டும் பேச்சு வார்த்தை மூலம் போர் நிறுத்தம் சாத்தியமாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த இஸ்ரேல் அதிகாரி ஒருவர், எதிர்தரப்பினர் போர் நிறுத்தத்தை மீறி மோசமாக நடந்து கொண்டதால் இடைவெளி அதிகரித்து விட்டது. எனவே இனிமேல் பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்றார்.
ரமல்லாவை தலைமையிட மாகக் கொண்ட பாலஸ்தீனத்தின் அதிபரான மெஹ்மூத் அப்பாஸ், காஸா விவகாரத்தில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி தான் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அமைப்பினர்தான் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.

No comments:

Post a Comment