நியூசிலாந்தில் இருக்கிறது கோரேவேனியா நூலக அறக்கட்டளை. அது நூலக மேலாண்மைப் பயன்பாட்டுக்காக கோஹா (koha) எனும் இலவச மென்பொருளை 1999 –ல் உருவாக்கி உலகத்துக்குத் தந்துள்ளது.
இதைக் கொண்டு இலவசமாகத் தமிழகத்திலுள்ள பொது நூலகங்களை எளிதில் கணினிமயமாக்கி நூலகங்களை ஒரு வலைப்பின்னல் ஆக்க முடியும். ஒவ்வொரு மாவட்ட மைய நூலகத்தோடு அந்தந்த மாவட்டத்திலுள்ள கிளை நூலகங்களை இணைக்கலாம்.
அதன் மூலம் கிளை நூலகத்திலுள்ள புத்தகங்களின் பட்டியலை நாம் வீட்டிலிருந்தே இணையம் வழியாகத் தெரிந்துகொள்ள முடியும். தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்து கொள்ளலாம். நீங்கள் தேடும் புத்தகத்தை வேறு யாராவது இரவலாகப் பெற்றுச் சென்றுள்ளாரா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இணையம் இல்லாதவர்கள் நூலகத்திலுள்ள கணினி மூலமாக ஓரிரு நிமிடங்களில் தெரிந்துகொள்ள முடியும்.
அனைத்து மாவட்ட மற்றும் கிளை நூலகங்களை இணையத்தின் வழியாக இணைப்பதால், தங்களுக்குத் தேவையான புத்தகங்கள் தங்களுடைய கிளை நூலகத்தில் இல்லாதபட்சத்தில், வேறு நூலகங்களிலிருந்தும் தங்களுடைய நூலகர் மூலமாக வாசகர்கள் இரவலாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
எளிய நூலக மேலாண்மை
கோஹா மென்பொருளில் புதிதாக கொள்முதல் செய்த புத்தகங்களை மிக எளிதாகப் பட்டியலிடலாம். தற்போது பொது நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் மாநில அளவில் செய்யப்படுவதால் இந்தப் புத்தகங்கள் குறித்த விவரங்களை ஒரே இடத்திலிருந்து மிக எளிதாகப் பட்டியல் போட முடியும்.
இந்த மென்பொருள் கன்னிமாரா உள்ளிட்ட சில நூலகங்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வசதி தமிழகத்திலுள்ள அனைத்துப் பொது நூலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
தற்போது பெரும்பாலான மத்திய-மாநில அரசுகளின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் செலவு பிடிக்கக்கூடிய தனியார் மென்பொருளையே பயன்படுத்துகின்றன.
தனியுரிமை மென்பொருளைப் பயன்படுத்தும்போது அனைத்துச் செயல்பாட்டிற்கும் நாம் அந்நிறுவனத்தையே சார்ந்திருக்க வேண்டிய நிலையிருக்கும். ஆனால், கோஹா போன்ற கட்டற்ற மென்பொருளில் அதுபோன்ற பிரச்சினை வரும்போது அதை நாமே சரி செய்துகொள்ளலாம். தன்னார்வலர்களின் உதவியுடன் விரைவாகச் சரி செய்துகொள்ளவும் முடியும். இம்மென்பொருளைத் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழில் மொழியாக்கம் செய்துவருகிறது.
- கட்டுரையாளர், ஒரு நூலகர்
No comments:
Post a Comment