Monday, 25 August 2014

கொள்ளிடம் ஆற்றங்கரை வடரெங்கத்தில் தனித்து வளர்ந்த நாகரிகம்: பெருங்கற்காலச் சான்றுகள் கண்டெடுப்பு

நதிக்கரைகள்தான் நாகரிகத்தின் தொட்டில்கள் என்பது வரலாறு கூறும் உண்மை. அப்படி சோழ தேசத்தில் காவிரிக் கரையில் நாகரிகம் தோன்றி, வளர்ந்ததற்கான சான்றுகள் ஏராளமாக காணப்படுகின்றன.
ஆனால், காவிரியில் ஏற்படும் வெள்ளத்தை கடலில் கொண்டு சேர்க்கும் வடிகாலாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றங்கரையிலும் தனித்து வளர்ந்த நாகரிகம் இருந்திருக்கிறது என்பதை அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையினர் தற்போது கண்டறிந்துள்ளனர்.
வடரெங்கத்தில் ஆய்வு
கொள்ளிடம் ஆறு கடலில் கலப்பதற்கு 15 கி.மீட்டருக்கு முன்பாக மேற்கிலிருந்து வரும் ஆறு நாகப்பட்டினம் மாவட்டம் வடரெங்கம் என்னும் ஊரில் தெற்காக திரும்பிச் செல்லும். அந்த வடரெங்கத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு சோழர்கள் காலத்துக்கு முன்பிருந்து அவர் களது காலம் வரையிலும் தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை போராசிரியர்கள் சிவராம கிருஷ்ணன், கலைச்செல்வன், ஆய்வு மாணவர்கள் சுசீந்திரன், சிவசாமி ஆகியோர் கொண்ட குழு சுமார் 3 ஆண்டுகளாக வடரெங்கம் பகுதியில் கள ஆய்வுகளை மேற் கொண்டு கண்டெடுத்துள்ள பொருட்களும், கண்டறிந் துள்ள உண்மைகளும் பிரமிக்க வைப்பதாக இருக்கின்றன.
பெருங்கற்கால மண்பாண்டங்கள்
பெருங்கற்காலத்தில் மனிதர் கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக அக்காலத்தைச் சேர்ந்த கருப்பு, சிவப்பு மட்பாண்ட ஓடுகள் அதிக அளவில் இங்கு கிடைத்துள்ளன. இடைக்காலத்தைச் சேர்ந்த, வேறு எங்கும் காணாத வகையில் கலைநயத்தோடு அழகுப்படுத் தப்பட்டுள்ள மட்பாண்ட ஓடுகளும் இங்கு கண்டெடுக் கப்பட்டுள்ளன.
உலோகத்தால் ஊசி செய்து அதன்மூலம் களிமண் பானைகளைச் சுடுவதற்கு முன் கழுத்துப் பகுதியில் நுண்ணிய பூ வேலைப்பாடுகளைச் செய்திருக்கிறார்கள் இங்கு வாழ்ந்த இடைக்கால மக்கள். அந்த பானை ஓடுகளின் காலத்தை துல்லியமாக கணிக்க அவை கார்பன் 14 என்ற சோதனைக்காக ஜெர்மன் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
12-ம் நூற்றாண்டு சுடுமண் உறை கிணறுகள்
அதேபோல சுடுமண் உறை கிணறுகள் பல இப்பகுதியில் இருந்துள்ளதும் கண்டறியப் பட்டுள்ளன. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 3 சுடுமண் உறைகள் இப்பகுதியில் கிடைத்துள்ளன. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய செங்கற் களால் ஆன கிணறு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. கிணற்றில் மக்கள் இறங்கி தண்ணீர் எடுக்க வசதியாக படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இது எல்லாவற்றையும்விட, இங்கு கிடைத்திருக்கும் இன்னும் ஒரு சான்று இங்கு வாழ்ந்த மக்களின் நாகரிக வளர்ச்சிக்கு மிகப்பெரிய சான்றாக இருக்கிறது என்கிறார் பேராசிரியர் சிவராம கிருஷ்ணன்.
“இங்கு கண்டெடுக்கப்பட்ட ஓர் அச்சு இதுவரையில் தமிழ கத்தில் கிடைத்த பழங்கால பொருட்களில் மிகவும் முக்கிய மானதாகக் கருதப்படுகிறது. சிறு சிறு பள்ளங்களைக் கொண்ட அந்த கருங்கல் அச்சு துணிகளின் மீது வண்ணம் தீட்டவும், வேலைப்பாடுகள் செய்யவும் பயன்படுத் தப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது’’ என்றார்.
ராஜராஜன் எழுப்பிய பெருமாள் கோயில்
தொடர்ந்து அடர்த்தியாக மக்கள் இங்கு வாழ்ந்திருப்பதை 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவாலயம் மற்றும் பெருமாள் கோயிலின் மூலமாக உணர முடிகிறது. பெருமாள் கோயில் ஸ்ரீரங்கத்துக்கு இணையாக இங்குள்ள மக்களால் வணங்கப் பட்டிருக்கிறது.
அதனால்தான் இவ்வூருக்கு வடரெங்கம் என்றும் இங்குள்ள பெருமாளுக்கு ஸ்ரீரெங்க நாதர் என்றும் பெயர் சூட்டப் பட்டிருக்கிறது. தஞ்சையில் சிவனுக்கு மிகப்பெரிய சிவாலயம் எழுப்பிய ராஜராஜ சோழன், இந்த பெருமாள் கோயிலையும் கட்டித் தந்திருக்கிறார் என்பது அக் கோயிலின் கருவறையில் உள்ள கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.

No comments:

Post a Comment