குற்றப் பின்னணி கொண்டவர்களை அமைச்சர்களாக்குவதை பிரதமர், மாநில முதல்வர்கள் தவிர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குற்றப் பின்னணி உள்ளவர்களை மத்திய அமைச்சர்கள் ஆக்குவதற்கு எதிராக தொடரப்பட்ட பொது நல மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர்களை தகுதிநீக்கம் செய்ய உத்தரவை நேரடியாக பிறப்பிக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்திற்கு இல்லை என கூறியதோடு, குற்றப் பின்னணி உடையவர்களை அமைச்சர்களாக்குவதை பிரதமர், மாநில முதல்வர்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறியது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 5 நபர்கள் கொண்ட அமர்வு: "அரசியல் சாசனத்தின் பாதுகாவலராக பிரதமர் குற்றப் பின்னணி கொண்டவர்களை அமைச்சர்களாக நியமிப்பதை தவிர்க்க வேண்டும்" என கூறியுள்ளது.
தீர்ப்பை எழுதிய நீதிபதி தீபக் மிஸ்ரா அரசியல் சட்டப்பிரிவு 75, மத்திய, மாநில அமைச்சரவையில் எத்தகைய நபர்களை சேர்க்கலாம் என்றோ இல்லை சேர்க்கக் கூடாது என்றோ தெரிவிக்கவில்லை. எனவே, தகுதிநீக்கம் தொடர்பாக புதிய சட்டத்தை ஏதும் புகுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அரசியலில் குற்றப்பின்னணி உடையவர்கள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை சிதைத்துவிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜனநாயகத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை மீட்கும் வகையில், பிரதமர் அறிவுப்பூர்மாக செயல்பட வேண்டும். அமைச்சரவையில் யாரை சேர்பது, வேண்டாம் என்பதில் அவரே கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் எல்லாவற்றையும் அரசியல் சாசனத்தில் எழுதிவைக்க முடியாது என்றனர்.
No comments:
Post a Comment