உலகில் இதுவரை 22 வகை யானை இனங்கள் அழிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஆதிகாலத்தில் 24 வகை யானைகள் வாழ்ந்துள்ளன. தற்போது, உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. ஆசிய யானைகள் 55,000 வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதில் இந்தியாவில் மட்டும் 32,000 யானைகளும், தமிழகத்தில் 3,750 யானைகள் உள்ளதாக கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. தற்போது யானைகள், அரியவகை விலங்குகள் பட்டியலில் உள்ளன. பிற்கால சந்ததிகள், யானைகளைப் பார்க்க, அவற் றைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
இதுகுறித்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் வெங்க டேஷ் ‘தி இந்து' செய்தியாளரிடம் கூறியது:
தரைவாழ் விலங்குகளில் யானைதான் மிகப்பெரியது. தும்பிக்கை வடிவில் மூக்கை பெற் றுள்ள ஒரே விலங்கும் யானைதான். யானைகள் சமூக வாழ்க்கை முறை கொண்ட விலங்கு ஆகும். யானைக் கூட்டத்துக்கு தலைவர் கிடையாது. தலைவி மட்டும்தான் உண்டு. பெண் யானைதான் தலை வியாக இருந்து, யானைகள் கூட்டத்தை வழிநடத்திச் செல்லும். யானைகள் அதிகளவு தண்ணீர், உணவை உட்கொள்ளும். ஆகவே, தண்ணீர், உணவு அதிகமுள்ள காடுகளில் மட்டுமே யானைகள் வசிக்கும். யானைகளுக்கு காடு நல்ல வாழ்விடமாக அமைந்தால், அந்தக் காடு ஆரோக்கியமானதாக காணப்படும். அதனால், யானைகள் சுற்றுச்சூழலின் ஆரோக்கி யத்தைக் காட்டும் அடையாளமாகக் கருதப்படுகிறது.
மக்னா யானை
தும்பிக்கையே யானையின் பலம். தும்பிக்கை மூலமே யானை சுவாசிக்கிறது. தண்ணீ ரையும், உணவையும் அதன் மூலம்தான் சாப்பிடுகிறது. தும்பிக்கையாலேயே அதிக எடை கொண்ட பொருளை யானையால் எளிதாகத் தூக்க முடியும்.
தந்தம் என்பது யானையின் பல்தான்
தந்தத்தை யானையின் கொம்பு என நடைமுறையில் அழைக் கின்றனர். ஆனால், யானையின் மேல்வரிசை பற்களின் நீட்சிதான் தந்தம். ஒரு டன் எடையுள்ள பொருளையும், தந்தத்தால் தூக்க முடியும். அதனால், சண்டை யின்போது யானை தந்தத்தைத் தான் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தும். தந்தம் இல்லாத ஆண் யானை, மக்னா யானை என அழைக்கப்படுகிறது. தும்பிக்கை மூலம் யானை வாசனை உணர்வு களை அறிந்து கொள்கிறது. 1.5 கி.மீக்கு அப்பால் உள்ள மனிதனின் நடமாட்டத்தைகூட யானையால் அறிந்துகொள்ள முடியும்.
யானைக்கு கேட்கும் சக்தி அதிகம். ஆனால், கண் பார்வை குறைவு. மூளையின் அளவு பெரியது என்பதால் யானைக்கு நினைவாற்றல் அதிகம் உண்டு. இந்த நினைவாற்றல் மூலமே யானைகள், பரந்த காட் டில் வழித்தடம் மாறாமல் சென்று திரும்புகின்றன. ஒரு யானை சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது. யானைக்கு தினசரி 200 முதல் 250 கிலோ உணவு தேவைப்படுகிறது. எனவே, ஒரு நாளில் மூன்றில் இரண்டு பங்கு நேரத்தை உணவைத் தேடுவதிலேயே செலவிடுகிறது. ஒரு நாளைக்கு 100, 150 முதல் 200 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கிறது. மனிதனைப்போல, யானை தினசரி தண்ணீரில் குளிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலின் அடையாளம் யானை
காட்டில், யானைகள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகிறது. இதன்மூலம் மரங்கள், செடி, கொடிகள் அதிக அளவு வளர்ந்து, சோலைக் காடுகள் உருவாகக் காரணமாகிறது. காட்டில் பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் யானை வழிவகுக்கிறது. யானை கள் பல கி.மீ. தூரம் காட்டில் நடந்து செல்வதால், புதிய வழிப்பாதை கள் காட்டில் உருவாகின்றன. நம் நாட்டில், காடுகளில் யானைகளே சாலைகள் உருவாகக் காரணம். யானை தும்பிக்கை மூலம் பூமிக்கடியில் இருக்கும் ஊற்றுத் தண்ணீரை எளிதில் கண்டுபிடிக்கும்.
யானை மண்ணை கிளறி கண்டுபிடிக்கும் ஊற்று தண்ணீ ரால் மற்ற விலங்குகளும் பயன்பெறு கின்றன.
யானைகளின் வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சிப் பணிகள், காடுகளில் வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு. தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுதல். காட்டில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுதல், விறகு பொறுக்குதல் ஆகியவை யானைகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப் படுகின்றன.
No comments:
Post a Comment