தமிழ் இலக்கியத்தில் முன்னும் பின்னும் உதாரணமற்ற அபூர்வ ராகம் லா.ச.ரா.
லா.ச.ராமாமிர்தம்: பிறந்த நாள்-அக். 29, 1916 நினைவு நாள் - அக். 29, 2007
யார் இந்த லா.ச.ராமாமிர்தம்? நவீன தமிழ் எழுத்தின் தீவிரமான பகுதி பெரும்பாலும் வெகுமக்களின் ரசனை எல்லைக்கு வெளியில்தான் இருந்துவருகிறது. இதில் பல அம்சங்கள் புரிவதில்லை என்பது பெருவாரியான மக்களின் புகார். அத்தகைய புரியாத எழுத்தின் முதன்மையான உதாரணங்களில் ஒருவராக லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் அடையாளம் காணப்படுகிறார்.
சொற்கள் புரியவில்லை என்றால் அகராதியைப் பார்த்துத் தெரிந்துகொண்டுவிடலாம். வாக்கியங்களே புரியவில்லை என்றால்? ‘கண்ணின் இமையுள், விழிப்பின் முதல் உணர்வாய்க் கவிந்த இருள் முழுவே உனக்கு அஞ்சலி’ என்று ஒரு கதை (த்வனி) தொடங்கினால் எப்படி இருக்கும்? ‘கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக் கேட்கிறது’ என்று சொன்னால் அதை எப்படிப் புரிந்துகொள்வது? ஆனால், இதுபோன்ற வாக்கியங்களில் இருக்கும் வசீகரமே லா.ச.ரா-வைப் புரியாமலும் பலரைப் படிக்க வைக்கக்கூடியதாகவும் இருக்கிறது. அச்சத்தை மீறிப் பாம்பின் அழகு நம்மைக் கவர்வதுபோல.
மயக்கும் மாயம்
இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் விரியும் லா.ச.ரா-வின் எழுத்தில் சரி பாதிக்கு மேல் அடிப் படைத் தமிழ் அறிவுகொண்ட எவரும் படித்துப் புரிந்து கொள்ளக்கூடியதுதான். மீதிப் பகுதியில் பெரும் பாலானவை புரியாத நிலையிலும் வசீகரிக்கக் கூடியவை; ரசித்துப் படிக்கக்கூடியவை. ‘இது இருளின் நரம்பு, எண்ணத்தின் மணிக்கயிறு, வானத்தின் நீளத்தினின்று உரித்த பொற்சரடு’ என்பன போன்ற மயக்கும் படிமங்கள் புரியாதவை என்று சொல்வதை விடவும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பொருள் தரக்கூடியவை என்று சொல்வதே பொருத்தம்.
புரியாத நிலையிலும் மந்திரம்போல மனதில் ஒட்டிக் கொள்ளும் மாயமே லா.ச.ரா-வின் சிறப்பு. புரிவதும் புரியாததும் தற்காலிக நிலைகள். ஒரு விஷயத்தை இன்று புரிந்துகொள்ளும் விதம் நாளை மாறலாம். ஆனால், லா.ச.ரா-வின் மந்திரச் சொற்கள் தரும் மயக்கம் நீடித்து நிற்கும்.
மலை உச்சியில் பிறக்கும் நதி பல வடிவங்களையும் பெயர்களையும் எடுத்தபடி கடலை நோக்கிப் பாயும். அதன் மொத்த விகாசத்தையும் குறிப்பிட்ட வகைக்குள் அடக்க முடியாது. லா.ச.ரா-வின் எழுத்தும் அத்தகையதுதான். நனவோடை உத்தி என்று சிலர் சொல்வார்கள். ஆனால், புற உலகில் வேர் கொண்டு சம்பவங்களால் நகர்ந்து செல்லும் வலுவான யதார்த்தக் கதைகளையும் அவர் எழுதியுள்ளார். புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களைக் கதையாக்குபவர் என்று சொல்லலாம் என்று பார்த்தால், வலுவான தர்க்கம் பல படைப்புகளில் அடிச்சரடாக ஓடிக்கொண்டிருப்பதையும் உணர முடிகிறது. கூட்டுக் குடும்பத்தின் ஆராதகர் என்று சொல்லச் சிலர் முனைந்தால், குடும்பத்திலிருந்து முரண்படும் தனிநபர் உணர்வை முன்னிறுத்தும் கதைகள் நம்மைப் பார்த்துச் சிரிக்கும். சவுந்தர்ய உபாசகர் என்று சொல்லலாம். ஆனால், வேதனைகளின் கதையையும் இவர் எழுதிவைத்திருக்கிறார். அன்பின் உன்னதமும் பேசுவார். சுயநலத்தின் தவிர்க்கவியலாத தன்மையையும் காட்டுவார். பெண்களை சக்தியின் வடிவமாகப் பார்ப்பவர், அவர்களது சுயநலத்தையும் வன்மத்தையும் கண்டு பாராமுகமாக இருப்பதில்லை.
அழகின் கோலங்கள்
லா.ச.ரா-வுக்குக் கதை என்பது அவரது தேடலின் கருவிதான். தேடல் என்பது அன்றாட வாழ்வில் மறைந்திருக்கும் தெய்விகத் தருணங்களின் மகிமையைக் கண்டுணர்தல். கதையம்சம் என்பதைவிடவும் கதையின் வாழ்வம்சத்துக்கும் அதனுள் ஒளிரும் சத்தியத்தின் தரிசனத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் லா.ச.ரா. மனித உணர்வுகள் அவருக்கு மிகமிக முக்கியம். மதிப்பீடுகளின் தராசில் வைத்து உணர்வுகளை அளப்பவர் அல்ல அவர். லா.ச.ரா-வின் பாத்திரங்கள், கருவறை, சுடுகாடு, பூஜையறை, படுக்கையறை, தோட்டம், சந்தை என எல்லா இடங்களிலும் உண்மையின் தரிசனத்தைக் கண்டு நெக்குருகுகிறார்கள். புலன்களைத் தாண்டிய அனுபவங் களையும் அந்த அனுபவங்கள் வெளிப்படும் தருணங் களையும் கண்டு நமக்கும் காட்டுகிறார் லா.ச.ரா.
பச்சைக்கனவு, கஸ்தூரி, சுமங்கல்யன், பாற்கடல் போன்ற கச்சிதமான யதார்த்தக் கதைகளைப் படைக்கும் திறன் கொண்ட இவர், படைப்பின் கட்டற்ற போக்குக்கு வழி விட்டுக் கதையின் கட்டமைப்பைத் தியாகம் செய்யவும் தயங்குவதில்லை. ஒவ்வொரு படைப்பும் எதைக் கோருகிறதோ அதைத் தருவதே ஒரு படைப்பாளியின் வேலை என்று நம்புபவர் லா.ச.ரா. அதனால்தான் அவரது பல கதைகளின் குவிமையம் சிதறுகிறது. சிறுகதைகளின் ஆதார பலமான குவிமையம் சிதறும்போது அதைப் பின் தொடர்ந்து செல்வது வாசகருக்குச் சிரமமாக இருக்கும். ஆனால், கிளை பிரியும் பாதைகளில் வெளிப்படும் தரிசனங்கள் படைப்பின் ஒவ்வொரு வரியையும் மதிப்பு வாய்ந்ததாக ஆக்குவதையும் உணரலாம். ஒளிக் குவியத்தின் அழகைப் பல படைப்புகளில் தரும் இவர், ஒளிச் சிதறலின் எண்ணற்ற அழகுக் கோலங்களையும் காட்சிப்படுத்துகிறார். இத்தகைய எழுத்தைப் படிக்கும்போது கதையம்சத்தின் எல்லை களைத் தாண்டி வாசக மனம் பயணிக்கிறது. அந்தப் பயணம் படைப்பாளியின் பயணத்துக்கு இணை யான பயணமாகி, படைப்பின் தரிசனத்தை விரிவு படுத்துகிறது.
‘உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்’ என்று ஒருமுறை எழுதிய லா.ச.ரா. ஒவ்வொரு சொல்லுக்கும் முக்கியத்துவம் அளிப்பதை உணர முடியும். ‘வாசனாதி திரவியங்களின் மணத்தைத் தமிழாக்கிக் கொண்டுவந்தவர் லா.ச.ரா.’ என்று சுந்தர ராமசாமி எழுதியிருப்பது இவரது சொல்லழகு தரும் மயக்கத்தைக் கச்சிதமாக உணர்த்துகிறது.
லா.ச.ரா-வின் அபூர்வ ராகம்
சொல்லழகும் மெய்ப்பொருள் தேடலும் தரும் தரிசனங்களின் படைப்பனுபவம் என்று லா.ச.ரா-வின் கதைகளை ஒருவாறாக வரையறுக்கலாம். பாற்கடல், கஸ்தூரி போன்ற யதார்த்த வாழ்க்கைச் சித்திரங்கள்; புரிந்துகொள்ள முடியாத ஆளுமை விசேஷங்களை மையப்படுத்தும் அபூர்வ ராகம், தாட்சாயணி போன்ற சொல்லோவியங்கள்; யோகம், புற்று போன்ற கால, இட எல்லைகளை மீறி வெளிப்படும் தரிசனங்கள் எனப் பல தளங்களில் இயங்குபவை லா.ச.ரா-வின் கதைகள். உறவுகளின் மேன்மையையும், அவற்றின் சிக்கல்களையும், இணைந்து வாழும் விழைவையும், பிரிந்து செல்லும் வேட்கையையும், தனிமையின் சுமையையும் அதன் மகத்துவத்தையும் பேசுபவை இவரது கதைகள்.
கதைகளைச் சொல்வதைவிடவும், கதைகளை முன்வைத்து வாழ்க்கையின் மாயத் தருணங்களைக் கண்டுணர்ந்து வியப்பதும் வியக்கவைப்பதும்தான் ராமாமிர்தத்தின் எழுத்து. அந்தத் தருணங்களில் தோய்ந்து மாறுபட்ட அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது ராமாமிர்தத்தின் எழுத்து. படைப்புகளில் அனுபவிக்கக் கிடைக்கும் மாயத் தருணங்களுக்காகவும் அவை முன்வைக்கப்படும் கவித்துவச் சொல்லழகின் வசீகரத்துக்காகவுமே இவரது கதைகள் என்றென்றும் படிக்கப்படும். சம கால யதார்த்த வாழ்வில் வேரூன்றிய கதைகள் பல சமயம் கால வெள்ளத்தில் நிற்காமல் போய்விடலாம். ஆனால், காலம், இடம் ஆகியவற்றைத் தாண்டிய தருணங் களைப் படைப்பாக்கும் எழுத்து காலம் தாண்டியும் வாழும். லா.ச.ரா-வின் எழுத்து காலம், இடம் ஆகிய வற்றை மட்டுமல்லாமல், புலன்களை மீறிய அனுபவங் களையும் சாத்தியப்படுத்துபவை. அதனாலேயே அவர் தரும் மந்திரத் தருணங்கள் நித்தியத்தன்மை பெற்றிருக்கின்றன.
அபூர்வ ராகம் கதையை இப்படித் தொடங்குகிறார்: ‘வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வரஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பதுபோல் அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாது முளைத்தாள்.’ லா.ச.ரா-வும் இந்தப் பெண்ணைப் போலத்தான். இலக்கிய உலகில் முன்னும் பின்னும் யாருமற்ற அபூர்வ ராகம்.
No comments:
Post a Comment