சுற்றுச்சூழல் மாசுபாடு, காடழிப்பு, புவி வெப்பமடைதல் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் நாம் வாழும் உலகம் பல முனை தாக்குதலைச் சந்தித்து வருகிறது. இந்தப் பிரச்சினைகள் இயற்கை- சுற்றுச்சூழல் சமநிலையைச் சீர்குலைக்கக்கூடியவை. இதனால் நமது உடல்நலம், பொருளாதாரம் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்படும். அப்படி அதிர்ச்சியளிக்கும் சில சுற்றுச்சூழல் தகவல்கள்:
# 2013-ல் இந்தியா சராசரியாக 85,000 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கிறது. இதில் 60 சதவிகிதம், அனல் மின் நிலையங்களில் நிலக்கரியை எரித்ததால் கிடைத்தது. ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 300 கிராம் நிலக்கரி தேவைப்படுகிறது.
அதன்படி பார்த்தால் டிவியை ஸ்டாண்ட் பையில் வைப்பதால் ஆண்டுக்கு 20 கிலோ கார்பன் வெளியாகிறது, கணினியை ஸ்டாண்ட் பையில் வைப்பதால் ஆண்டுக்கு 9 கிலோ கார்பன் வெளியாகிறது, தேவையற்ற விளக்குகளை எரிப்பதால் ஆண்டுக்கு 370 கிலோ கார்பன் வெளியாகிறது, மொபைல் சார்ஜரை பிளக்கில் இருந்து கழட்டாமல் இருப்பதால் ஆண்டுக்கு 10.5 கிலோ கார்பன் வெளியாகிறது. இவையெல்லாம் ஒரு வீட்டுக்கானவை.
# இந்தியாவில் ஒரு மனிதர் ஒரு நாளைக்குச் சராசரியாக ½ கிலோ கழிவை உருவாக்குகிறார்.
இந்தியாவின் நகர்ப் புறங்களில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் 5,500 கோடி கிலோ குப்பையும், 3,800 கோடி லிட்டர் கழிவு நீரும் உருவாகின்றன. குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பது நல்ல வழிமுறை. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இது முயற்சித்துப் பார்க்கப்பட்டாலும் வெற்றி கரமாகத் தொடரவில்லை.
# பூமியில் உள்ள ஒட்டு மொத்தத் தண்ணீரில், ஒரு சிறு பகுதி, அதாவது 3 சதவீதத் துக்கும் குறைவாகவே நன்னீர் இருக்கிறது. அந்த நன்னீரிலும் 1% குறைவாகவே பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் உலகெங்கும் 70 கோடி பேர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் ஒரு நபர் ஒரு நாளைக்குச் சராசரியாக 135 லிட்டர் தண்ணீரைப் பயன் படுத்துகிறார்.
இந்தியாவின் 80% நீர்நிலைகள் மாசுபட்டுள்ளன. இதற்கான முக்கியக் காரணங்கள்: அளவுக்கு அதிகமாக ஓரிடத்தில் குப்பை கொட்டுவது, நிலத்தடி நீரில் நச்சு ஊடுருவல், விவசாயத் துக்குப் பயன்படும் வேதி உரம், பூச்சிக்கொல்லிகள், குடியிருப்புகளில் உருவாகும் கழிவுநீர், தொழிற்சாலை கழிவுநீர், அமில மழை போன்றவையே.
தொகுப்பு: ஆதி
நன்றி: ஹேபிடட் அப்பல்லோ வழிகாட்டி
நன்றி: ஹேபிடட் அப்பல்லோ வழிகாட்டி
No comments:
Post a Comment