Wednesday, 15 October 2014

செவ்வாயை சுற்றும் 2 நிலா படம் அனுப்பியது மங்கள்யான்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான‌ இஸ்ரோ அனுப் பிய மங்கள்யான் விண்கலம், செவ்வாயைச் சுற்றும் 2 நிலாக்களைப் படம்பிடித்து அனுப்பியுள்ளது.
அதில், ஒரு படத்தை இஸ்ரோ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்து 20 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், மங்கள்யான் விண்கலம் இந்த இரு நிலாக்களை அடையாளம் கண்டுள்ளது.
இஸ்ரோ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நிலாக்களின் சிறிய படங்களைப் பகிர்ந்துள்ளது. மேலும், 'செவ்வாயைச் சுற்றும் நிலவுகளில் பெரிதான இந்த போபோஸ் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி வருகிறது' என்ற விளக்கத்தையும் பகிர்ந்துள்ளது.
ஒரு நாளைக்கு 3 முறை செவ்வாயைச் சுற்றி வருவதாகக் கூறப்படும் போபோஸ் நிலவின் சுற்றளவு 27x22x18 கி.மீ. ஆகும்.
செவ்வாய் கிரகத்தில் இருந்து சுமார் 66,275 கிமீ உயரத்தில் நின்று இவற்றை மங்கள்யான் படம்பிடித்துள்ளது. போபோஸ் மற்றும் டெய்மோஸ் என்ற இந்த 2 நிலவுகள் 1877-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன.
போபோஸ் நிலவு செவ்வாய் கிரகத்தை ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு 1.8மீ என்ற வேக‌த்தில் நெருங்கி வருகிறது. இந்த வேக‌த்தில் சென்றால் அடுத்த 5 கோடி ஆண்டுகளில் போபோஸ் நிலவு செவ்வாய் கிரகத்தின் மீது மோதும் அல்லது அதன் வெளிவட்டத்தை ஊடுருவிச்செல்லும் என்று நாசா கணித்துள்ளது.

No comments:

Post a Comment