பழங்கால அறிவியலுக்கும் தற்கால அறிவியலுக்கும் பாலமாக இருந்தவர்கள் இஸ்லாமிய அறிவியலாளர்கள்.
சில மாதங்களுக்கு முன்னால் நான் உஸ்பெகிஸ்தானில் இருக்கும் கிவா நகரத்துக்குச் சென்றிருந்தேன். 19-ம் நூற்றாண்டில் அடிமை வியாபாரத்துக்குப் பெயர் போன கிவா நகரக் கோட்டைக்கு வெளியே ஒரு சிலை. பக்கத்தில் சென்று பார்த்தால், அல்-குவாரிஸ்மி. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தமிழகத்தில் அறிவியல் அறிஞர் ஒருவரது சிலையை அண்ணா சாலையில் பார்த்தால் ஆச்சரியமாக இருக்காதா? அதே போல.
அல்-குவாரிஸ்மி - யார் இவர்?
ஒன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வாழ்ந்த இந்த அறிஞர் அல்ஜிப்ராவின் தந்தை என அறியப் படுபவர். சந்திரனில் ஒரு பள்ளத்தாக்கு இவர் பெயரால் அழைக்கப்படுகிறது. அவர் எழுதிய பல புத்தகங்களில் மிகவும் புகழ்பெற்றவை இரண்டு. முதலாவது ‘இந்திய எண்களைக் கொண்டு கணக்கு’. இந்தப் புத்தகத்தின் மூலமாகத்தான் இப்போது அரேபிய எண்கள் என அழைக்கப்படும் இந்தியாவில் பிறந்த எண்கள் உலகம் முழுவதும் அறியப்பட்டன. இரண்டாவது, ‘ஸிஜ் அல் ஸிந்த் ஹிந்த்’ என்று அறியப்படும் வானவியல் அட்டவணை. சூரியன், சந்திரன் மற்றும் அவரது காலத்தில் அறியப்பட்டிருந்த ஐந்து கிரகங்களின் பாதைகளின் அட்டவணை. இவருக்கு முன்னாலேயே எட்டாவது நூற்றாண்டில் பிரம்மகுப்தரின் பிரம்ம சித்தாந்தம் என்ற வானவியல் நூல் அல்ஃபசாரி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. ஆனால் இவரது அட்டவணைதான் அரேபியர்கள் தாங்களாகத் தயாரித்த முதல் அட்டவணை.
குவாரிஸ்மி வானவியல், கணிதத்தோடு நின்றுவிட வில்லை. ‘உலகத்தின் வடிவம்’ என்ற பூகோளப் புத்தகத்தையும் எழுதினார். இரண்டாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்டிரியாவில் வாழ்ந்த தாலமி கிரேக்க மொழியில் எழுதிய ‘பூகோளம்’ என்ற புகழ்பெற்ற புத்தகத்தைத் தழுவி எழுதிய அந்தப் புத்தகம், உலகத்தின் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நகரங் களைப் பற்றிப் பேசுகிறது.
உலுக் பெக்
உஸ்பெகிஸ்தானின் மற்றொரு புகழ்பெற்ற நகரம் சாமர்கண்ட். இந்த நகரத்தில் மற்றொரு பெரிய விஞ்ஞானியான உலுக் பெக்கின் சிலை இருக்கிறது. இவர் தைமூரின் பேரன். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அரசரான அவருக்கு அறிவியலில் தீராத ஈடுபாடு. ‘மதங்கள் பனிபோல மறைந்துவிடும். பேரரசுகள் அழிந்துவிடும். ஆனால், அறிவியல் நூல்கள் காலம் உள்ள வரையில் நிற்கும்’ என்ற புகழ்பெற்ற மேற்கோளுக்குச் சொந்தமான உலுக் பேக் எழுதிய ‘ஸிஜ் சுல்தானி’என்ற நட்சத்திரங்களின் அட்டவணை, இரவில் பாலைவனங்களில் பயணம் செய்பவர்களுக்கு உறுதுணையாகக் கருதப்பட்டது. இந்தப் புத்தகத்துக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருக்கிறது. ஷாஜஹான் காலத்தில் இந்தப் புத்தகத்தைத் தழுவி ‘ஸிஜ்–இ-ஷாஜஹானி’ என்ற புத்தகம் எழுதப்பட்டது. இந்த புத்தகத்தைச் ‘சித்தாந்த சிந்து’ என்ற பெயரால் நித்யானந்தா என்பவர் வட மொழியில் மொழிபெயர்த்தார்.
உலுக் பெக், வானவியல் ஆய்வுக் கூடம் ஒன்றை சாமர்கண்ட் நகரத்தில் அமைத்தார். கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்துவிட்ட இந்த ஆய்வுக்கூடத்தின் பாணியில்தான் டெல்லி, ஜெய்ப்பூர் நகரங்களில் இருக்கும் ஜந்தர் மந்தர் (மந்திர யந்திரம்) என்று அழைக்கப்படும் வானவியல் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.
அறிவுக் கூடம்
அறிவைத் தேடுதல் மிகவும் அவசியம் என்று நபிகள் நாயகம் நினைத்தார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ‘இல்ம்’ என்று அழைக்கப்படும் அறிவைக் குறிக்கும் அரேபியச் சொல்லும், அதைச் சார்ந்த மற்ற சொற்களும் 700-க்கும் மேல் புனித குரானில் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட அரசர்கள் இதை நன்கு அறிந்திருந்தார்கள். காலிஃபா அல் மமுன் 830-ம் ஆண்டில் பாக்தாத் நகரில் பாய்த் அல் ஹிக்மா என்று அழைக்கப்படும் அறிவுக்கூடம் ஒன்றை அமைத்தார். இரண்டு லட்சம் தினார்கள் செலவில் அமைக்கப்பட்ட அந்தக் கூடம், அறிவியல் ஆய்வுமையமாகவும் மொழிபெயர்ப்பகமாகவும் இயங்கியது. கூடத்துக்குத் தலைமை தாங்கியவர் ஹுனைன் இபின் இஷக் (‘ஜான், ஐசக்கின் மகன்’ என்பது இந்தப் பெயரின் பொருள்) என்று அழைக்கப்பட்ட கிறிஸ்தவர். இவரது தலைமையில் கேலன், அரிஸ்டாட்டில், பிளாட்டோ, ஹிப்பாகிரிடஸ், தாலமி, டியஸ்காரிடிஸ் போன்ற அறிஞர்களின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. வடமொழியிலிருந்தும் பல நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. ஹுனைனுக்குப் புத்தகத்தின் எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்டதாம். கிரேக்க லத்தீன் நூல்களில் பல தப்பிப் பிழைத்துத் திரும்ப மேற்குலகுக்குக் கிடைத்ததென்றால், அதற்கு அவர்கள் இஸ்லாமியர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அல்-ராசியும் அவிசென்னாவும்
ட்ரக், ஆல்கஹால், ஆல்கலி, ஸிரப், ஷுகர், ஸ்பினாச் போன்ற சொற்கள் அரபிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குக் கிடைத்தவை. இவை எல்லாம் இஸ்லாமிய மருத்துவப் புத்தகங்களில் புழங்கியவை. இஸ்லாமிய மருத்துவர்களில் தலையாயவர்களாக இருவரைக் குறிப்பிடலாம். முதலாமவர் எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த அல்-ராசி. இவர் பத்து பாகங்களாக எழுதிய ‘மன்சூரின் மருத்துவப் புத்தகம்’ உடற்கூறு, அறுவைச் சிகிச்சை, மருந்துகள், நோயை அறிதல், நோயைக் கட்டுப்படுத்தும் முறை போன்ற மருத்துவத்தின் எல்லா அங்கங்களையும் பற்றிக் கூறுகிறது. அல்-ராசி தனது மற்றொரு புத்த கத்தில் கூறுகிறார்:
“மருந்துகளின் பயன்களைப் பற்றிச் சிலர் உண்மையைச் சொல்கிறார்கள். சிலர் சொல்வது பொய். எனவே, நாம் செய்யக் கூடியது, நமது அனுபவத்தின் மூலமாக அறிவதுதான். அறிந்ததை அங்கங்கே விட்டுவிடக் கூடாது. சேர்த்து, பகுத்து வைக்க வேண்டும். எந்த மருந்தின் பயனையும்
நாங்கள் மற்றவர் சொன்னார்கள் என்று நம்பத் தயாராக இல்லை. ஆராய்ந்து அதனால் பலன் இருந்தால் மட்டுமே நம்புவோம்.”
அல்-ராசி ஏழைகளை மறக்கவில்லை. ‘மருத்துவரிடம் போக முடியாதவர்களுக்கு’ என்ற ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.
இஸ்லாம் தந்த மற்றொரு பேரறிஞர் பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த அவி சென்னா என்று அழைக்கப்படும் இபின் சென்னா. இவரது இரண்டு புத்தகங்கள் இன்றுவரை பேசப்படு பவை. ‘கிதாப் அல்-ஷிஃபா’ அறிவியலைப் பற்றியது. மற்றது, ‘கிதாப் அல்-கானூன்’ என்று அழைக்கப்படும் மருத்துவப் புத்தகம். ஐந்து பாகங்கள் கொண்ட இந்தப் புத்தகம் 10 லட்சம் வார்த்தைகளில் அன்று வரை அறியப்பட்ட மருத்துவ முறைகளைப் பற்றி யும் மருந்துகளைப் பற்றியும் சொல்கிறது. பல நூற் றாண்டுகளாக இஸ்லாமிய நாடுகளிலும், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளிலும் இவரது புத்தகம்தான் மருத்துவ உலகில் கோலோச்சிவந்தது.
அல்-பிரூனி
இஸ்லாமிய அறிஞர்கள் புனித குரானைத் தவிர, வேறு எங்கும் செல்ல மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. இருப்பவர்கள் அல்-பிரூனி பதினொன்றாம் நூற்றாண்டில் எழுதிய ‘இந்தியா’ நூலைப் படிக்க வேண்டும். ‘முத்துக்களும் கூழாங்கற்களும் கலந்தது இந்திய அறிவியல்’ என்பது அவரது கூற்று. அறிவியல் பற்றிய தெளிவான புரிதல் இருந்தாலும், அதை வகைப்படுத்தி அளிப்பதில் கவனம் காட்டாததைப் பற்றியே அவர் குறிப்பிடுகிறார். பூமியின் ஆரத்தை அன்றே துல்லியமாக அளந்த சகலகலா வல்லவர் பிரூனி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இஸ்லாமுக்கும் அறிவியலுக்கும் நீண்ட தொடர்பு இருந்திருக்கிறது. அது அறுந்துபோகாமல் பார்த்துக்கொள்வது இன்றைய இஸ்லாமியர்களின் கைகளில் இருக்கிறது.
- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை', ‘கலங்கிய நதி' ஆகிய நாவல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
No comments:
Post a Comment