ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பின்னடைவுக்கு விளையாட்டு சங்கங்கள் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிற அதேவேளையில் இந்தியா முழுவதிலும் இருக்கும் அங்கீகாரம் இல்லாத விளையாட்டு சங்கங்கள், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் அங்கீகாரம் இல்லாத சங்கங்கள் வீரர்களின் வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாடுகின்றன என்பதை அலசுவதும் அவசியமாகும்.
ஒரு மாநிலத்தில் ஒரு விளையாட்டை நிர்வகிக்க ஒரு மாநில சங்கத்துக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட மாநிலத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் சங்கம் அங்கீகாரம் வழங்கும். மாநில ஒலிம்பிக் சங்கத் தால் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் தான் அதிகாரப்பூர்வ சங்க மாகும்.
ஆனால் தமிழகத் தில் பெரும்பாலான விளையாட்டு களுக்கு இரண்டு சங்கங்கள் இருக் கின்றன. அதுவும் குத்துச்சண்டை யில் 3 சங்கங்கள் இருக்கின்றன. இவர்களில் யார் அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தினர் என்று கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. இரண்டு சங்கங்கள் இருந்தால் அந்த இரு தரப்புமே தங்களை அங்கீகரிக் கப்பட்டவர்களாகக் கூறிக் கொள்கிறார்கள். தனித்தனியாக போட்டியும் நடத்துகிறார்கள். இதனால் எந்த சங்கம் அங்கீகரிக்கப் பட்ட சங்கம் என தெரியாமல் வீரர்கள் திணறுகிறார்கள்.
வசூல் வேட்டை
அங்கீகாரம் இல்லாத சங்கங்களும் அரசுக்கு சொந்தமான மைதானங்களில் போட்டி நடத்த அனுமதிக்கப்படுகின்றன. அரசு மைதானங்களில் போட்டி நடை பெற்றால் அது அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக இருக்கும் என நம்பி வீரர்கள் ஏமாறுகிறார்கள். அங்கீகாரம் இல்லாத பெரும்பாலான சங்கங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் வாதிகள், செல்வாக்கு மிக்கவர்களை தலைவர்களாக நியமித்துக் கொள்கின்றன. சில சங்கங்கள் பயிற்சியாளர்களுக்கு பணம் கொடுத்து வீரர்களை இழுக்கின்றன.
போட்டியின் தொடக்க விழா வுக்கு அமைச்சர்கள் வரா விட்டாலும், அவர்களின் அனுமதி யோடு அவர்களுடைய பெயர்களை போட்டியின் அழைப்பிதழில் அச்சிடும் சங்கங்கள், அதன்மூலம் ஸ்பான்சர்களை பிடிப்பதோடு, வசூல் வேட்டையும் நடத்தி வருவாய் ஈட்டுவதாக வீரர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
விழிப்புணர்வு இல்லை
வெகுதொலைவில் இருக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பெரும் செலவு செய்து சென்னை போன்ற பெரு நகருக்கு வந்து போட்டிகளில் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு அங்கீகாரம் இல்லாத சங்கங்களை பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை.
ஆனால் விளையாட்டு ஒதுக்கீட்டில் கிடைக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்று வரும்போதுதான் தங்களிடம் உள்ள சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்டதல்ல என்பது வீரர்களுக்கு தெரிய வருகிறது. அவர்கள் தங்களின் அறியாமையை உணரும் அந்த தருணத்தில் அவர்களின் விளையாட்டு வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிடுகிறது.
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் 500 இடங்களும், மருத்துவ படிப்பில் 3 இடங்களும், வேறு சில படிப்புகளில் சில இடங்களும் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஆண்டுதோறும் நடைபெறும் கவுன்சிலிங்கின்போது நீங்கள் வைத்திருக்கும் சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்டதல்ல எனக்கூறி ஏராளமான வீரர்கள் திருப்பியனுப்பப்படுவது இன்றும் தொடர் கதையாகி வருகிறது.
வீரர்களை காக்குமா ஒலிம்பிக் சங்கம்?
அங்கீகாரமில்லாத சங்கங்கள் குறித்து வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமையும், மோசடி பேர்வழிகளிடமிருந்து வீரர்களை காக்க வேண்டிய பொறுப்பும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தையே சேரும். ஆனால் அவர்கள் அதை செய்ய தவறியது தான் பிரச்சினையே என்கிறார்கள் தமிழக விளையாட்டு வீரர்கள்.
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம், வீரர்களின் எதிர்காலம் கருதி பிரத்யேக இணையதளம் ஒன்றை உருவாக்கி, அதில் அங்கீகரிக்கப் பட்ட சங்கம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் பட்டியலை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தலாம்.
அங்கீகாரமில்லாத சங்கங்கள் எங்கேயாவது போட்டி நடத்தினால் அதில் யாரும் பங்கேற்க வேண்டாம் என்றுகூட அறிவிக்கலாம். அப்படி அறிவித்தால் அங்கீகாரம் இல்லாத சங்கம் நடத்தும் போட்டியில் யாரும் பங்கேற்கமாட்டார்கள். அதற்கு தமிழக ஒலிம்பிக் சங்கத்துக்கு அதிகாரம் இருக்கிறது. ஒருவேளை தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் அறிவிப்பை எதிர்த்து போலி சங்கங்கள் நீதிமன்றத்துக்கே போனாலும்கூட அது செல்லுபடியாகாது. ஆனாலும் ஏன் அதிரடி நடவடிக்கையில் இறங்க ஒலிம்பிக் சங்கம் தயங்குகிறது என்பது தெரியவில்லை?
கண்காணிப்பது அவசியம்
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களுக்கும் தமிழக அரசு நிதியுதவி அளித்து வருகிறது. ஆனால் அவர்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணிப் பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக 1994 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வெங்கடேஷ் தேவராஜனிடம் கேட்டபோது, “விளையாட்டு சங்கங்களின் தேர்தலில் தொடங்கி, அவர்கள் நடத்தும் போட்டிகள் வரை அனைத்தையும் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். அதற்காக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழுவை அமைக்க வேண்டும். சரியாக செயல்படாத சங்கங்களுக்கு நிதியுதவியை நிறுத்தினாலே பாதி பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்” என்றார்.
மொத்தத்தில் தமிழக அரசும், ஒலிம்பிக் சங்கமும் அதிரடி நடவடிக்கையில் இறங்கினா லொழிய போலி சங்கங்களை ஒழிக்க முடியாது.
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பட்டியலை வெளியிடுகிறோம்: டி.என்.ஓ.ஏ.
இது தொடர்பாக தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் (டி.என்.ஓ.ஏ) பொருளாளர் ஜே.எம்.பெர்னாண்டோவிடம் கேட்டபோது, “அங்கீகாரம் இல்லாத விளையாட்டு சங்கங்கள் வீரர்களின் வாழ்க்கையை அழித்து வருவது உண்மைதான். தற்போதைய நிலையில் தமிழகத் தில் 32 விளையாட்டு சங்கங்கள் ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. அதன் முழு விவரங்களையும் நிச்சயம் வீரர்களுக்கு தெரியப்படுத்துகிறோம். நான் இப்போது வெளியூரில் இருக்கிறேன். திங்கள்கிழமை சென்னை திரும்பியபோதும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பட்டியலை ஊடகங்களுக்கு தருகிறேன். இணையதளத்தில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கேள்விக்குறியாகும் எதிர்காலம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாதில் நடைபெற்ற தேசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தமிழக வீரர்கள் 10 பேர் சென்றனர். ஆனால் அவர்கள் அங்கீகாரம் இல்லாத சங்கத்தின் மூலம் வந்திருப்பதாகக் கூறி திருப்பியனுப்பப்பட்டனர். இதில் 4 பேர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) அணியைச் சேர்ந்தவர்கள் என்பது தான் ஆச்சர்யம். தமிழக விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற் காக அமைக்கப்பட்டிருக்கும் எஸ்டிஏடியே ஏமாந்திருக் கிறது என்றால், மற்ற வீரர்கள் என்ன செய்வார்கள்?
இது தொடர்பாக அப்போதைய அணியில் இடம்பெற்றிருந்த வீரர் ஒருவர் கூறுகையில், “காலையில் ஹைதராபாத் சென்ற நாங்கள் மாலை வரை போட்டி ஏற்பாட்டாளர்களிடம் கெஞ்சி பார்த்தும் பலனில்லாததால் ஏமாற்றத்தோடு ஊருக்கு திரும்பினோம். இந்த போட்டிக்கு முன்பு வரை இதே சங்கத்தின் கீழ்தான் போட்டிகளில் பங்கேற்று வந்தோம். ஆனால் இந்த சங்கத்தின் அங்கீகாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது எங்களுக்குத் தெரியாது. யாரை நம்புவது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. எங்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளது” என்றார்.
விளையாட்டுத் துறையை மேம்படுத்த என்ன செய்யலாம்
No comments:
Post a Comment