பவளப் பாறைகளின் அழிவு மற்றும் வேட்டை ஆகியவற்றால் பட்டாம்பூச்சி மீன்கள் அழிந்து, அரிதாகி வருவதாக கடலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
மன்னார் வளைகுடா கடற்பரப்பில் 21 தீவுகளும், அதைச் சுற்றி கடல் உயிரினப் பெருக்கத்துக்கு ஆதாரமான பவளப் பாறைகளும், கடற்புற்களும் அதிகளவில் காணப்
படுவதால், அரிதான கடல்வாழ் உயிரினங்கள் ஏராளமாக காணப்படுகின்றன. அவற்றில், பட்டாம்பூச்சி மீனும் ஒன்று.
112 வகை பட்டாம்பூச்சி மீன்கள்…
தங்க நிற பட்டாம்பூச்சி மீன், நான்கு கண் பட்டாம்பூச்சி மீன், நீண்ட மூக்கு பட்டாம்பூச்சி மீன் என்று பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் 112 வகையான பட்டாம்பூச்சி மீன் இனங்கள் உள்ளன. இதில் 10-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி மீன்கள் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
வண்ணத்துப்பூச்சிகளைப்போல பல வண்ணங்களும், அழகிய துடுப்பு அசைவும் இருப்பதால், இந்த மீன்களை பட்டாம்பூச்சி மீன்கள் என்று மீனவர்கள் அழைக்கின்றனர். ‘Chaetodontidae’ என்பது இதன் அறிவியல் பெயர்.
முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மையுடைய பட்டாம்பூச்சி மீன்கள், 12 செ.மீ. முதல் அதிகபட்சமாக 30 செ.மீ. வரையிலும் வளரக் கூடியவை. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இந்த மீன்கள் ஒரே நேரத்தில் 5000 முட்டைகள் வரை ஈனும்.
உத்தம இணை…
ஒரு பட்டாம்பூச்சி ஆண் மீன், ஒரேயொரு பெண் மீனுடன்தான் ஆயுள் முழுவதும் இணையாக வாழும். பட்டாம்பூச்சி மீன்கள் பெரும்பாலும் மஞ்சள், நீலம், சிவப்பு, ஆரஞ்சு நிறங்களில் காணப்படும். இந்த மீன்கள் உடலில் உள்ள புள்ளிகளையும், கோடுகளையும் அசைத்து நடனமாடி எதிரிகளுக்கு அச்சம் ஏற்படுத்தும். பவளப் பாறைகளில் உள்ள முதுகெலும்பில்லாத பூச்சிகள் மற்றும் புழுக்களை இவை உணவாக உட்கொள்கின்றன.
மில்லியன் கணக்கில் விற்பனை…
பட்டாம்பூச்சி மீன்கள் மிகச் சிறந்த அலங்கார மீன்களாக உலகெங்கிலும் வளர்க்கப்படுகின்றன. அலங்கார மீன் வணிகத்தில் ஆண்டுக்கு 10 மில்லியன் பட்டாம்பூச்சி மீன்கள் விற்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பவளப் பாறைகளின் அழிவு மற்றும் வண்ண மீன் சேகரிப்புக்காக பட்டாம்பூச்சி மீன்கள் வேட்டையாடப்படுவதால், இந்த இனம் அழிந்து கொண்டே போகிறது. இதனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டாம்பூச்சி மீன்களைப் பார்ப்பதே அரிதாகிவிடும் என்று கடலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பட்டாம்பூச்சி மீன்களின் வாழ்
விடங்களான பவளப் பாறைகளைப் பாதுகாப்பதன் மூலமும், பட்டாம்பூச்சி மீன்கள் வேட்டைக்கு முழுமையாகத் தடை விதிப்பதன் மூலமும் இந்த அரிய வகை மீன் இனத்தை அழியாமல் தடுக்கலாம்.
இதுகுறித்து கடலியல் ஆய்வாளர் தாகிர் சைபுதீன் கூறியது:
உலக அளவில் 14 தேசிய கடல் வாழ் உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன. இதில், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் தென்கிழக்கு ஆசிய கண்டத்திலேயே அறிவிக்கப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோள காப்பகம் ஆகும். மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக பகுதிகளில் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன.
லட்சக்கணக்கான சிறிய உயிரினங்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவானவை பவளப் பாறைகள். கூட்டம் கூட்டமாக வளரும் பவளப் பாறைகளுக்கு மத்தியில் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் வாழ்வதால், பட்டாம்பூச்சி மீன்கள் அவற்றை உணவாகக் கொண்டு பவளப் பாறைகளை சுற்றிக் கூட்டமாக வாழும்.
தமிழக விசைப்படகு மீனவர்கள் வாருதல் (trawling) என்ற மீன்பிடி முறையை கடந்த 40 ஆண்டுகளாக கடைப்பிடிக்கின்றனர். இந்த மீன்பிடி முறையால் மன்னார் வளைகுடா கடலுக்கடியில் உள்ள பவளப் பாறைகள் சிதைக்கப்பட்டு, கடலின் சூழல் மண்டலம் பாதிக்கப்படுகிறது. மேலும், அழகு மீன்களாக வளர்ப்பதற்காக வேட்டையாடுவதாலும் தற்போது பட்டாம்பூச்சி மீன்கள் அரிதாகி வருகின்றன. பட்டாம்பூச்சி மீன்களைக் காக்க அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment