கவுரவத்துக்கான போராட்டம்
உண்மையில், கவுரவம்தான் மனித குலத்துக்கு இன்றியமையாதது, பொருள் சார்ந்த லாபங்கள் அப்படிப்பட்டவையல்ல. நல்ல இயல்புகளைக் கொண்ட ஒரு பெண்ணுக்குத் தெரியும், பாலியல் தொழிலில் வருமானம் கிடைக்கும் என்று. ஆனால், அவர் அப்படிச் செய்வாரா? தாழ்த்தப்பட்ட என்னுடைய சகோதரிகளுக்குச் சாதாரண சப்பாத்தி-சட்னிகூடக் கிடைப்பதில்லை. ஆனாலும், அவர்கள் கண்ணியத்துடன் வாழ்கிறார்கள். நாங்கள் எங்கள் கவுரவத்துக்காகப் போராடுகிறோம்.
துரதிர்ஷ்டத்தின் ஆயிரம் ஆண்டுகள்
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நம் நிலைமை மாறாது என்ற சூழல்தான் இந்த நாட்டில் தற்போது காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்துவைப்பதற்குச் சாத்தியமே கிடையாது. இந்து மதத்தில் இருந்துகொண்டு நம்மால் எதையும் செய்ய முடியவில்லை. மனுஸ்மிருதி சொல்லும் நான்கு வர்ணங்கள் மனித குல முன்னேற்றத்துக்குப் பெரும் ஆபத்து விளைவிப்பவை. சூத்திரர்கள் இழிவான வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று மனுஸ்மிருதி சொல்கிறது.
அவர்களுக்குக் கல்வி எதற்காக? பிராமணர்களெல்லாம் கல்வி கற்க வேண்டும்; சத்திரியர்கள் போரிட வேண்டும்; வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும்; சூத்திரர்களோ தொண்டூழியம் புரிய வேண்டும்- நுட்பமான இந்த ஏற்பாட்டை யாரால்தான் குலைக்க முடியும்? பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய சாதியினருக்கு இதில் பலன்கள் உண்டு. ஆனால், சூத்திரர்களுக்கு? இந்த அடுக்கில் கீழ்நிலையில் உள்ள சாதியினர் ஊக்கம் கொள்ள ஏதும் இருக்கிறதா? இந்து மதத்தில் சமத்துவத்துக்கு இடமேயில்லை. இந்த மதத்தின் பெயரால் எங்களை அழித்தவர்கள் அதே மதத்தால் அழிந்துபோவார்கள்.
மனசாட்சியுடன் உரையாடல்
ஒரு பிராமணப் பெண், குழந்தை பெறுகிறாள் என்று வைத்துக்கொள்வோம்; அப்போதிருந்தே அவள் தனது குழந்தைக்காக, வருங்காலத்தில் காலியாகக் கூடிய நீதிபதியின் பணியிடத்தைக் கனவுகாண்பாள். ஆனால், நமது துப்புரவுப் பணியாளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி குழந்தை பெறுகிறாள் என்றால், ஒரு துப்புரவுப் பணியைத்தான் தனது குழந்தைக்காகக் கனவுகாண முடியும். இப்படிப்பட்ட விசித்திரமான அமைப்பைத்தான் இந்து மதம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அமைப்பில் இருந்துகொண்டு எந்த முன்னேற்றத்தை அடைய முடியும்?
இந்துவாக இறக்க மாட்டேன்!
“இந்துவாக நான் பிறந்திருந்தாலும் இறக்கும்போது ஒரு இந்துவாக இறக்க மாட்டேன்” என்று முன்பு சபதம் எடுத்திருந்தேன். நேற்று அதை நிறைவேற்றிவிட்டேன். மிகவும் பரவசமாக இருக்கிறது எனக்கு!
ஏன் இந்த அக்கறை?
நேற்று ஒரு ஆதிக்க சாதிப் பையன் என்னிடம் வந்து, "நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உங்கள் மக்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் உதறிவிட்டுச் செல்கிறீர்களே?" என்று கேட்டான். நான் அவனிடம் சொன்னேன், "நீ மஹராக (அம்பேத்கர் பிறந்த குலம்) மாறி நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் நாங்கள் விட்டுச்செல்லும் இடை வெளியை நிரப்பிக்கொள்! அந்த இடங்களுக்காக ஆதிக்க சாதியினரிடமிருந்து எவ்வளவு மனுக்கள் வருகிறதென்று பார்ப்போம்!"
கடலில் கலந்த பின்...
புத்த பகவான் சொல்கிறார், "பிட்சுகளே, நீங்களெல்லாம் வெவ்வேறு நாடுகளிலிருந்தும் வெவ்வேறு சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். நதிகளெல்லாம் அவரவர் நாடுகளில் தனித்தனியாக ஓடுகின்றன. ஆனால், கடலில் கலந்த பிறகு அவற்றை நாம் வேறுபடுத்திப் பார்க்கவே முடியாது. நீங்களெல்லாம் இரண்டறக் கலந்து விட்டிருக்கிறீர்கள். புத்த மத பிட்சுகளெல்லாம் கடலைப் போன்றவர்கள்.
இந்தச் சங்கத்தில் எல்லோரும் சமமே. கடலில் கலந்த பிறகு கங்கையையும் மகாநதியையும் பிரித்தறிய முடியாது. அதே போன்றுதான் இந்த புத்த சங்கத்தில் வந்து கலப்பதன்மூலம் உங்கள் சாதி மறைகிறது, அனைவரும் சரிநிகர் சமானமாகிறீர்கள்." சமத்துவத்தைப் பற்றி ஒரே ஒரு மாமனிதர் மட்டுமே பேசியிருக்கிறார். அந்த மாமனிதர் புத்தர்தான்.
அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய நாள்: அக்டோபர் 14, 1956
நாக்பூரில் லட்சக்கணக்கான மக்களுடன் அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவியதற்கு மறுநாள் அவர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்...
தமிழில்: ஆசை
நாக்பூரில் லட்சக்கணக்கான மக்களுடன் அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவியதற்கு மறுநாள் அவர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்...
தமிழில்: ஆசை
No comments:
Post a Comment