Wednesday, 15 October 2014

உலகம் மெச்சும் மச்சுபிச்சு

உலக அதிசயங்களில் ஒன்று மச்சுபிச்சு. பெரு நாட்டில் காஸ்கோ நகரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உரும்பாம்பா பள்ளத்தாக்கின் மேல் உள்ள மலைத் தொடரில் இது அமைந்துள்ளது. இன்கா பேரரசு காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய நகரம்.
கி.பி. 1450-ம் ஆண்டில் இந்த நகரம் அமைக்கப்பட்டது. மலையின் மேலே வீடுகளையும் கட்டி வசித்திருக்கிறார்கள். வீடு, கட்டிடங்கள் கட்டுவதற்காக உலர் கற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நில நடுக்கத்திலும் சேதமடையாத வகையில் இந்தக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன என்பது ஆச்சரியம் அளிக்கும் விஷயம்.
பெரு நாட்டை ஸ்பானியர்கள் கைப்பற்றிய பிறகு பல நூறு ஆண்டுகள் இந்தப் பழமையான நகரம் உலகின் பார்வையில் படாமலேயே இருந்தது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1911-ம் ஆண்டில் அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் ஹிராம்பிங்கம் என்பவர் இந்த நகரைப் பற்றிய தகவல்களை வெளியே கொண்டுவந்தார். அதன்பிறகே மச்சுபிச்சுவைப் பார்த்து, இந்த உலகம் மூக்கில் மேல் விரல் வைத்தது.
தற்போது பழமையான உலக அதிசயங்களுள் ஒன்றாக இது உள்ளது. பெரு நாட்டுக்குச் சுற்றுலா வருபவர்கள் முக்கியமாகச் சென்று பார்க்கும் சுற்றுலாத் தலங்களில் முதல் இடத்தில் மச்சுபிச்சு உள்ளது. 1983-ம் ஆண்டில் இந்த இடத்தை உலகப் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவித்து யுனெஸ்கோ பெருமை சேர்த்தது.

No comments:

Post a Comment