வடகிழக்குப் பருவமழை வர வேண்டிய நேரத்தில் சரியாக வந்துவிட்டது. சரி, 10-20 ஆண்டுகளுக்கு முன் தினசரி மழை வருவதற்கு முன் அதைப் பாட்டுப் பாடி வரவேற்ற, மழையின் வருகையை முன்கூட்டியே அறிவித்துக்கொண்டிருந்த தவளைச் சத்தத்தை எங்கேயாவது கேட்க முடிகிறதா? எங்கே போயின அந்தத் தவளைகள் எல்லாம்?
பெரும்பாலான உயிரினங்களைப் போல மனிதர்களுக்குப் பல்வேறு வகைகளில் உதவி வரும், உலகில் மூன்றில் ஒரு பங்கு தவளை இனங்கள் அழியும் தறுவாயில் உள்ளதாகக் காட்டுயிர் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
நீரிலும் நிலத்திலும் வாழும் தகவமைப்பைப் பெற்ற இருவாழ்விகள் தவளையும் தேரையும். இரவில் இரை தேடுவதாலும், மற்ற பெரிய உயிரினங்களைப் போலக் கவர்ச்சியாக இல்லாமல் இருப்பதாலும் இவை போதிய கவனம் பெறாமல் உள்ளன. உடலை உறைய வைக்கும் குளிர் நிலவும் ஆர்டிக், அண்டார்டிக் துருவப் பிரதேசங்கள் தவிர உலகின் எல்லா நாடுகளிலும் தவளைகள் வசிக்கின்றன.
மீன்-ஊர்வன இணைப்பு
ஏறத்தாழ 36 கோடி ஆண்டுகளுக்கு முன்பே, முதுகெலும்பு உடைய மீனில் இருந்து தோன்றிய உயிரினம்தான் தவளை. பரிணாம வளர்ச்சியில் மீனுக்கும், ஊர்வனவற்றுக்கும் இடைப்பட்ட உயிரினங்கள் என்ற பெருமையை உடையவை தவளையும், தேரையும்.
நிலத்தில் முதன்முதலில் தோன்றிய நான்கு கால்களைக் கொண்ட உயிரினம் தவளைதான். அதன் பரிணாம வளர்ச்சியை விளக்குவதைப் போல, இளமைப் பருவத்தில் தவளை மீனைப் போன்று காணப்படுவதால் தலைப்பிரட்டை எனப்படுகிறது. இவை நீரில்தான் வசிக்கின்றன, நீரில் உள்ள பாசியையும், தன்னைவிட சிறிய உயிர்களையும் உண்டு வாழ்கின்றன. பின்னர் பெரிதாக வளர்ந்து உருவ மாற்றம் அடைந்தபின், தவளையாகி நிலத்துக்கு இடம்பெயர்கின்றன. அதன் பின்னர் பூச்சிகளைப் பிடித்துத் தின்ன ஆரம்பிக்கின்றன.
இரவுப் பார்வைத் திறன்
உலகத்தில் 6,771 வகையான தவளை, தேரை வகைகள் உள்ளன. தவளைக்கும் தேரைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம், தவளையின் தோல் வழுவழுப்பாக இருக்கும். தேரையின் தோல் காய்ந்து சொரசொரப்பாகக் காணப்படும்.
தவளைக்கு விஷ உறுப்பு கிடையாது. தேரைக்கு உண்டு. முக்கியமாக நீர், அதை ஒட்டியுள்ள நிலப்பகுதியில் தவளை வசிக்கும். தேரை நிலத்தில் மட்டுமே காணப்படும்.
தண்ணீர், சகதி, பாறைகளின் இடுக்கு, மண்ணுக்குள், புதருக்குள், பெரிய மரக் கிளைகள், கழிப்பறைகள் எனப் பல இடங்கள் தவளை, தேரைகளின் வாழ்விடம். இவை இரவில் சுறுசுறுப்பாக இரைதேடும். பெரிய கண்கள் இரவிலும் பார்க்க வசதியாக உள்ளன. மழைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. இனப்பெருக்கம் செய்வதற்கும், இரவில் துணையைத் தேடுவதற்கும் மழைக்காலத்தில் இவை எழுப்பும் குரல் தெளிவாகக் கேட்கும்.
தவளையும் சுற்றுச்சூழலும்
“சுற்றுச்சூழலுக்கு ஏற்பத் தவளை தனது உடலின் வெப்பநிலையைத் தகவமைத்துக்கொள்ளும். தோல் மூலம் சுவாசிக்கும் தன்மை, அமினியாட்டிக் திசுவால் சூழப்பட்ட கருவைப் போன்ற பண்புகளைத் தவளை கொண்டுள்ளதால், சுற்றுச்சூழலில் ஏற்படும் மோசமான மாற்றங்களைத் தாங்கிக்கொள்வது ரொம்பவும் கடினம். அதனால், சுற்றுச்சூழலில் ஏற்படும் தீய மாற்றங்களால், இதன் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது” என்கிறார் கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்.
சில தவளை வகைகள் பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் பெற்றவை என்று கருதப்படுகின்றன. மனிதர்களிடையே நோயைப் பரப்பும், பயிர்களை நாசம் செய்யும். பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் தவளை, தேரைகள் முக்கிய இரைகொல்லிகளாக உள்ளன. ஒரு தேரை மூன்று மாதங்களில் சுமார் 10,000 பூச்சிகளைச் சாப்பிடும். பறவைகள், பாம்புகள், மேலும் சில உயிரினங்களுக்குத் தவளையும் தேரையும் உணவாகின்றன.
தவளைகள், தேரைகள் இல்லையென்றால் சுற்றுச்சூழல் சமநிலை கடுமையாகப் பாதிக்கப்படும். தவளைகளின் தோலில் சேமித்து வைக்கப்படும் சில வேதிப்பொருட்கள் மூலம் எய்ட்ஸைக் குணப்படுத்தும் மருந்துகள் தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
“ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 200 வகையான தவளை, தேரை வகைகள் முற்றிலும் அற்றுப் போய்விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது மூன்றில் ஒரு பங்கு தவளை, தேரை வகைகள் அழிந்து போகக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளன” என்று எச்சரிக்கிறார் வெங்கடேஷ்.
No comments:
Post a Comment