Tuesday, 7 October 2014

டீயா, விஷமா?

கிரீன்பீஸ் அமைப்பு நியாயமாகச் சில கேள்விகளை எழுப்பினாலும் அதன் மீதும் சில சந்தேகங்கள் இருக்கின்றன.
‘நீங்கள் அருந்தும் தேநீர் ஒரு விஷம்’ என்று பரபரப்பாக கிரீன்பீஸ் அமைப்பு சமீபத்தில் இந்தியத் தேயிலைகுறித்து ஒரு ஆய்வக அறிக்கையை வெளியிட்டது. சந்தையில் கிடைக்கும் பிரபல பிராண்டுகளை வேதியியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி, அதில் இருக்கும் பூச்சிக்கொல்லிகளைப் பட்டியலிட்டிருக்கிறது. இதைப் படித்தால், ‘அதிகாலையில் எழுந்ததும் விஷத்தையா வாய்க்குள் விடுகிறோம்?’ என்ற கேள்வி நியாயமாகவே எழும்.
இதற்கு முன்பே, 2012-ல் சீனாவில் பெய்ஜிங் நகரில் ‘லிப்டன்’ தேயிலையை கிரீன்பீஸ் பரிசோதித்து, அவற்றில் தடைவிதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளும், நச்சுப் பொருட்களும், உட்கொள்ளும் அளவுக்கு அதிக மாகக் காணப்படுவதாக ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தது. கிரீன்பீஸ் இந்திய அமைப்பின், இந்தியத் தேயிலை அறிக்கையை மறுத்து, இந்தியத் தேயிலை வாரியம் விளக்கமளித்திருக்கிறது.
இத்தோடு இது நின்றுவிடவில்லை. கிரீன்பீஸ் அமைப்பின் துணை நிறுவனரும், முன்னாள் தலை வருமான டாக்டர் பேட்ரிக் மூர், “கிரீன்பீஸின் அறிக்கை முற்றிலும் புறக்கணிக்கத் தக்கது” என்று பேட்டியளித் திருக்கிறார்.
என்னதான் நடந்தது?
கிரீன்பீஸ் இந்தியா, ஜூன் 2013-லிருந்து மே 2014 வரையிலான காலகட்டத்தில் பலவகை தேயிலை மாதிரிகளை, பெருநகரச் சந்தைகளிலிருந்து நுகர்வோர் போன்றே வாங்கி, 49 மாதிரிகளாக ஐரோப்பாவில் இருக்கும் உலகத்தரம் வாய்ந்த தகுதிபெற்ற ஆய்வகத்துக்கு அனுப்பி, அவற்றில் எந்த பூச்சிக்கொல்லி, எந்த அளவில் இருக்கிறது என்பதையெல்லாம் கண்டறிந்தது. இவற்றில் டாடா, வாக் பக்ரி, ட்விங்கிங், கோல்டன் டிப், கிர்நார் போன்ற பிரபல தயாரிப்புகளும் உண்டு.
ஆய்வின் அறிக்கை கீழ்க்கண்ட முடிவுகளைக் கொண்டிருந்தது.
1. தேயிலை மாதிரிகளில் மொத்தம் 34 வகை பூச்சிக்கொல்லிகள் காணப்பட்டன. அவற்றில், 94% தேயிலை மாதிரிகள் குறைந்தபட்சம் ஒரு பூச்சிக் கொல்லியையாவது கொண்டிருந்தது.
2. 59% தேயிலை மாதிரிகளில் குறைந்தபட்சம் 10 பூச்சிக்கொல்லிகள் இருந்தன. ஒன்றில் 20 பூச்சிக் கொல்லிகள் இருந்தன.
3. 59% தேயிலை மாதிரிகளில் சில பூச்சிக்கொல்லிகள், ஐரோப்பிய நாடுகள் விதித்த அதிகபட்ச எச்ச அளவு (மேக்ஸிமம் ரெசிடியூ லிமிட்) எனப்படும் அளவைத் தாண்டி இருந்தன. இதிலும் 37% மாதிரிகளில், ஐரோப்பிய நாடுகளின் அதிகபட்ச எச்ச அளவைவிட 50% அதிகம் காணப்பட்டது.
இந்தப் பட்டியலில் 23 பூச்சிக்கொல்லிகள், தேயிலை வளர்ப்பு, காப்புக்கான விதிமுறைகளில் குறிக்கப்படா தவை. விதிக்குப் புறம்பாக அவை காணப்படுகின்றன.
“ஒருங்கிணைந்த ஆலோசனைகளைத் தேயிலை வளர்ப்பவர்களுக்கு அரசு தராததே காரணம்” என்கிறது கிரீன்பீஸ் அமைப்பு. “ஆய்வகங்கள், மத்திய பூச்சிக் கொல்லிப் பதிவாணையம், கல்வி நிறுவனங்கள், தேயிலை வாரியம் போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பூச்சிக்கொல்லிப் பட்டியலையும், அவற்றின் அனுமதிக்கப்பட்ட அளவையும் தருகின்றன.”
எதிர்வாதம்
இந்த அறிக்கைக்கு, இந்தியத் தேயிலை வாரியம் தனது எதிர் வாதத்தை முன்வைத்திருக்கிறது. முக்கிய மாக, அந்த அறிக்கையில் காணப்படுபவை:
1. பூச்சிக்கொல்லிகளில் கிரீன்பீஸ் அமைப்பு கூறும் பட்டியலில் 34 உள்ளன. ஆனால், மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவாணையம் 37 பூச்சிக்கொல்லிகளைப் பட்டியலிட்டிருக்கிறது. இவை அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன. (சுருக்கமாக, நீங்க 34-தான் பார்த்திருக்கீங்க, நாங்க 37 கவனிக் கிறோம்.)
2. கிரீன்பீஸ், உலகெங்கும் தடைசெய்யப்பட்ட
டீ.டீ.டி (D.D.T) என்ற பூச்சிக்கொல்லி காணப்படுவதை விமர்சிக்கிறது. இந்தப் பூச்சிக்கொல்லி இந்தியாவில் 1989-லேயே தடைசெய்யப்பட்டுவிட்டது. ஆனால், இது விரைவில் சிதைந்துபோகும் வேதியியல் மூலக்கூறு அல்ல. மண்ணிலிருந்து மறையப் பல வருடங்களாகும். முன்பே இட்டிருந்த டீ.டீ.டி இப்போதும் தேயிலையில் காணப்பட வாய்ப்பிருக்கிறது. தோட்டத் தொழிலாளிகள் இந்தப் பூச்சிக்கொல்லியைப் புதிதாகப் பயன்படுத்தியிருக்கச் சாத்தியமில்லை.
3. கிரீன்பீஸ் “தேயிலை வளர்ப்பில் தாவரக் காப்புக் கலவைகளின் (பிளாண்ட் புரொடெக்‌ஷன் ஃபார்மு லேஷன்ஸ்) ஒட்டுமொத்த அளவு அதிகமானால் நுகர்வோரைப் பாதிக்கலாம்” என்கிறது. தேயிலை வாரியம், “ஒவ்வொரு பூச்சிக்கொல்லிக்கும் அதிகபட்ச எச்ச அளவு என்பது கணக்கில் உள்ளது. அவற்றின் தனிப்பட்ட அளவை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டுமே தவிர, அவற்றின் கூட்டு அளவு அதிக மானால் பாதிப்பு வருமென்று அறிவியல் ஆய்வுகள் நிரூபிக்கவில்லை. தவிரவும், தினசரி, அதிகபட்ச நுகரும் அளவு என்று ஒன்று உண்டு. இந்தியர்கள் அருந்தும் தேநீர் அளவில் பார்த்தால், இந்த அளவு மிகக் குறைவு. பாதிப்பு ஏற்படாது” என்கிறது. இந்த வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.
கிரீன்பீஸ் குறிப்பாக சில பூச்சிக்கொல்லிகளின் அளவைச் சுட்டிக்காட்டுகிறது. அதில் ஒன்று, மோனோக்ரோட்டோஃபாஸ். தேயிலை வாரியம், “இது பெருமளவில் அரிசி, கரும்பு, பருப்பு வகைகள் போன்ற பயிர்களில் பயன்படுத்தப்படுவது. எனவே, விவசாயப் பழக்கத்தில் இது வந்திருக்கலாம்” என்கிறது. தேயிலைக்கும் சமவெளி விவசாயத்துக்கும் தொடர்பு குறைவு. அடுத்த வரியிலேயே வாரியம், “நாங்கள் புதிய வழிமுறை ஒன்றை அறிவித்திருக்கிறோம்” என்றும் சொல்கிறது. மொத்தத்தில் இது தகுந்த பதிலல்ல.
சப்பைக்கட்டு
இதேபோல் ட்ரையாஸோஃபாஸ் என்னும் பூச்சிக்கொல்லி காணப்படுவதற்கும் சரியான பதில் வாரியத்திடமிருந்து இல்லை. “நாங்கள் 2005-லேயே நிறுத்தச் சொல்லிட்டோமே?” என்பது சரியான பதிலல்ல. கண்காணிப்பற்ற பூச்சிக்கொல்லிப் பயன் பாடு என்பது தெளிவு. “பிற விவசாயப் பயிர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும் நீரிலிருந்தும், காற்றின் மூலமும் இது பரவியிருக்கக் கூடும்” என்று ஒரு ஊகத்தை வாரியம் முன்வைக்கிறது.
மொத்தத்தில், இந்த இரு பூச்சிக்கொல்லிகளுக்குமான வாதம் வெறும் சப்பைக்கட்டாகவே தெரிகிறது.
ஆனால், தையாமீத்தோக்ஸாம், தையாக்ளோப்ரிட், டெல்ட்டாமெத்ரின், டைக்கோஃபோல் போன்றவை, கட்டுப்பாட்டு அளவைவிடக் குறைவாகவே காணப் படுகிறது என்பதை கிரீன்பீஸ் அறிக்கையும் ஒப்புக் கொண்டுள்ளது. இது இந்திய அமைப்பான
எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. நிர்ணயித்த அளவுக்கும் குறைவாகவே இருக்கிறது.
கிரீன்பீஸ் குறித்த சந்தேகங்கள்
கிரீன்பீஸ் அமைப்பின் திடீர் ஆய்வறிக்கை நெருட லாகவே இருக்கிறது. “தரம் வாய்ந்த ஆய்வகங்கள் இந்தியாவில் இருக்க, ஏன் ஐரோப்பாவில் ரகசியமாகச் சோதனை செய்ய வேண்டும்? ஆய்வு முடிவுகளை ஏன் முழுவதும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை? இந்தியத் தேயிலைத் தோட்டங்கள், பதனிடும் நிறுவனங்கள், தேயிலை வளர்ப்புக்கான அரசு அமைப்பு களுடன் ஏன் அவற்றை விவாதிக்கவில்லை?” என்ற கேள்விகளை டாக்டர் பேட்ரிக் மூர் எழுப்பியிருக்கிறார்.
“தேநீரைக் கொதிக்க வைத்துவிடுகிறோமே? அப் புறம் என்ன பெரிதாக இருந்துவிடப்போகிறது?” என்று நாம் நினைக்கலாம். சில பூச்சிக்கொல்லிகள் 100 டிகிரி செல்சியஸுக்கு மேலும் சிதறாமல், உடையாமல் இருக்கும். சில பூச்சிக்கொல்லிகள் வாயுநிலைக்குச் செல்லும். சில திரவ நிலையிலேயே கண்டறியப்படும். இவற்றைக் கண்டறிய வாயுநிலை, திரவநிலை பொருண்மை நிறமானிகள் தேவைப்படும். இவை அதிக விலையுள்ளவை. இவற்றை இயக்குவதற்கு ஆழமான அறிவியல் பயிற்சி தேவை. தேயிலை வாரியம் இதில் கணிசமாக முதலீடு செய்திருக்கிறது. பல ஆய்வகங்கள், தேயிலை ஆராய்ச்சியில் பயிற்சி பெற்று, சிறப்பாகச் செயல்படுகின்றன.
கிரீன்பீஸின் அறிக்கையையும், தேயிலை வாரி யத்தின் எதிர் அறிக்கையையும் கொண்டு நாம் அறிந்து
கொள்வதென்ன? தேயிலை நிறுவனத்தினர் தரக் கட்டுப்பாட்டை உயர்த்த வேண்டும். தேயிலைத் தோட்டங்களில் தாவரக்காப்பு கண்காணிக்கப்பட வேண்டும். பூச்சிக்கொல்லிகள் மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தப்படும் மாற்று வழிகள் செயல் படுத்தப்பட வேண்டும். ஏற்கெனவே, டாடா, வாக் பக்ரி, ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனங்கள் இதற்கு முயற்சிகள் எடுத்துவருகின்றன. டாடா, வாக் பக்ரி போன்றவை ‘பூச்சிக்கொல்லியற்ற தேயிலை’ வளர்ப்பை மேற்கொள்ளப்போவதாக உறுதியளித்திருக்கின்றன. இது, கிரீன்பீஸ் அமைப்புக்கும், தேயிலை வாரியம், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. அமைப்புகளுக்கும் கிடைத்த வெற்றி என்றே கொள்ள வேண்டும்.
தற்சமயம் பயப்படாமல், அடுத்த கோப்பைத் தேநீரைப் பருகுங்கள்.
- சுதாகர் கஸ்தூரி, அறிவியல் கருவிகள் மற்றும் மென்பொருட்கள் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசகர், ‘6174' என்னும் அறிவியல் புனைகதை நாவலின் ஆசிரியர்,

No comments:

Post a Comment