ரோம அரசரின் தூதுவராக இந்தியா வந்த மெகஸ்தனிஸ், இங்கிருந்த மரங்களையும், உயிரினங்களையும் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்.
பிரம்மாண்ட மரங்கள்
மரத்துக்கு வெளியேயும் வேர்களை விட்டுச் செழிக்கும் பெரிய ஆலமரங்கள் அவரை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன. அவர் பார்த்த சில ஆலமரங்கள் ஐந்து மனிதர்கள் கைகளை விரித்து சுற்றி நின்றாலும்கூட தழுவிக் கொள்ள முடியாத வகையில் மிகப் பெரிதாக இருந்தனவாம். 400 குதிரை வீரர்கள் நிழலில் தங்கி இளைப்பாறும் அளவுக்கு ஒரு பிரம்மாண்ட ஆலமரத்தின் நிழல் பரந்து விரிந்து இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இனிப்பும் துணியும்
அத்துடன் இந்தியாவின் தட்பவெப்பநிலை நன்றாக இருந்ததாகவும், ஆண்டுக்கு இரண்டு போகம் சாகுபடி நடைபெற்றதாகவும் கூறியுள்ளார். குளிர் காலத்தில் கோதுமை, பார்லி, பருப்பு உள்ளிட்டவையும் மழைக் காலத்தில் நெல், தினை, எள், சணல் போன்றவையும் பயிரிடப்பட்டிருக்கின்றன.
வயலில் விளைந்தவற்றுள் இரண்டு பொருட்கள் மெகஸ்தனிஸை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
தேனீக்கள் இல்லாமல் தேன் (இனிப்பு) உருவானது முதலாவது. அவர் குறிப்பிட்டது கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட வெல்லத்தைக் குறிப்பதாக இருக்கலாம். இரண்டாவதாக, செடிகளிலேயே துணி விளைந்ததாக அவர் கூறியிருக்கிறார். அதெப்படி செடியில் துணி விளைய முடியும்? துணிக்கு முந்தைய நிலையான நூல் எடுப்பதற்கு உதவும் பருத்திச் செடியை அவர் குறிப்பிட்டிருக்கலாம்.
மதிப்புமிக்க முத்து
அத்துடன் தங்கச் சுரங்கங்களும், முத்துக் குளிக்கும் துறைமுகங்களும் நிறைந்த வளமான நாடு என்று இந்தியாவை அவர் கூறியுள்ளார். அந்தக் காலத்தில் இந்திய முத்துகளுக்கு மேலை நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது. முத்துக்களின் மதிப்பு எவ்வளவு அதிகமாக இருந்தது என்றால், அவற்றின் எடையைப் போல மூன்று மடங்கு தங்கம் சமமமாகக் கருதப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
பெரும் புலி
விலங்குகளைப் பற்றியும் மெகஸ்தனிஸ் குறிப்பிட்டிருக்கிறார். கிழக்கிந்திய புலி மிகவும் வலிமையும் கம்பீரமும் பொருந்திப் பெரிதாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். அநேகமாக அது நமது வங்கப் புலிக்கு மூதாதையாக இருந்திருக்கலாம்.
நீண்ட வால், கரிய முகம் கொண்ட மந்திகளைப் பற்றியும், பறவைகளில் கிளிகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். குதிரைகளை தேரில் பூட்டி அவற்றின் கண்களை துணியால் கட்டிவிட்டு ஓட்டப் பழக்கியதைப் பற்றியும் அவரது குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.
No comments:
Post a Comment