மத்திய அரசு ஊழியர்களின் வருகையை பதிவு செய்து, அவர்களது நிகழ்நேர நிலையைத் தெரிந்துகொள்ளும் வகையில் புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
http://attendance.gov.in/ என்ற இந்தத் தளத்தில் அரசு மட்டுமல்லாது, பொதுமக்களும்கூட அரசு ஊழியர்களின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
குறிப்பிட்ட அதிகாரி வேலைக்கு வந்துள்ளாரா, இல்லையா, விடுமுறையில் இருக்கிறாரா என அனைத்துத் தகவல்களையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி துவங்கப்பட்ட இந்தத் தளத்தில், பதிவு செய்துள்ள அரசு ஊழியர் எப்போது வேலைக்கு வந்தார், எத்தனை மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார், அல்லது வேலை முடியும் முன்னரே வெளியேறி விட்டாரா எனத் தெரிந்துகொள்ள உதவும் வருகைப் பதிவேடும் உள்ளது.
இதுவரை 149 வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த, 50,926 மத்திய அரசு ஊழியர்களின் பெயர்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆயுதப்படைகள் தீர்ப்பாயம், மத்திய நீர் வள ஆணையம், வெளியுறவுத்துறை அமைச்சகம் உட்பட பல அமைப்புகள் இதில் தற்போது இணைந்துள்ளன.
இது குறித்து பேசிய மூத்த அதிகாரி ஒருவர், இது பிரதமர் நரேந்திர மோடியின் யோசனை எனவும், இதன் மூலம் அதிகாரிகளின் நேரம் தவறாமை மேம்படுவதோடு வேலை செய்யாத ஆட்களை கண்டறிந்து பணிநீக்கமும் செய்யமுடியும் என்று கூறினார்.
No comments:
Post a Comment