பங்குச் சந்தை என்னும் மாய உலகம் எப்படியெல்லாம் இயங்குகிறது!
பங்குச் சந்தை சுவாரசியமான இடம். அங்கே ஜெயித்தவர்கள் மேலும் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள், ‘ஷேர் மார்க்கெட்டில் வெற்றி பெறுவது எப்படி?’ என்று புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மூலதனத்தைப் பொதுமக்களிடம் பங்குத்தொகையாக வாங்கிச் சேர்த்து நடைபெறும் நிறுவனங்களின் லாப நிலவரம், வளர்ச்சிக்கான வாய்ப்பு, சொத்து மதிப்பு இப்படிப் பலவற்றையும் பொறுத்துப் பங்கு மதிப்பு உயரும் அல்லது தாழும். பங்கு விலை குறையும்போது வாங்கி, உயரும் போது விற்றால், பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்கலாம்.
அரசு அமைத்த பங்குப் பரிவர்த்தனை மையங்கள் (ஸ்டாக் எக்சேஞ்சுகள்) மூலமே பல நிறுவனங்களின் பங்குகளும் வாங்குகிறவர்கள், விற்பவர்களுக்கு இடையே கைமாறுகின்றன. அயல் நாடுகளில் தனியார் துறை பங்குப் பரிவர்த்தனை மையங்களும் உண்டு.
பங்கு வர்த்தகம் செய்ய பரிவர்த்தனை மையத்தை நேரடியாக அணுக முடியாது. முன்பெல்லாம் பங்கு விற்க, வாங்க வேண்டுமென்றால், அரசு அனுமதி பெற்ற தரகர்கள் மூலமே அதை நடத்தியாக வேண்டும். இப்போது வங்கிகளும் இந்தச் சேவையை அளிக்கின்றன. வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுத்து, வங்கி மூலம் நிறுவனங்களின் பங்குகளை வாங்க வேண்டுமென்றால், அலைச்சல் இல்லாமல் வீட்டிலிருந்தே இணையம் மூலம் கச்சிதமாக முடித்து விடலாம்.
மின்னணு உருவில்…
நாற்பது வருடங்களுக்கு முன்பு, பங்குத் தரகர்கள் பங்குப் பரிவர்த்தனை மையத்துக்குப் போய், மற்ற பங்குத் தரகர்களைச் சந்தித்து, அவர்களோடு வாடிக்கையாளர்கள் சார்பில் பங்கு வர்த்தகம் செய்வார்கள். சத்தமும் சந்தடியும் நிறைந்த இந்த வியாபாரம் முடிவுக்கு வரத் தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம்.
வாங்க, விற்கக் குவியும் ஆர்டர்களை ஏற்று, அவற்றை வகைப்படுத்தி, பரிவர்த்தனை மையத்தோடு தொடர்புகொண்டு, நிலவர விலைகளில் துல்லியமாகக் கொடுக்கல் வாங்கல் நடத்த கணினி அமைப்புகள் வந்தன. ஆர்டர்களுக்காகப் பணம் செலுத்த அல்லது பெற, பங்குகளின் உரிமையாளர் பற்றிய தகவல்களை முறைப்படி மாற்ற, மின்னணு உருவில் பங்குகளைக் கொடுத்தும் பெற்றும் கணக்கு வைக்க என்று கிரமமாகச் செயல்படும் அமைப்புகள் இவை.
பங்குகள் குறித்த சகல நேற்றைய, இன்றைய தகவல்களையும் பதிந்து நுட்பமாக அலசி ஆராய்ந்து பங்கு முதலீட்டைக் கிட்டத்தட்ட வெற்றிகரமாக நடத்த இந்த அமைப்புகளை வங்கிகளும் வர்த்தகர்களும் பயன்படுத்துகிறார்கள்.
நம் போன்று நூறு, இருநூறு என்று பங்கு வாங்கி விற்றுச் ‘சில்லறை வியாபாரம்’ செய்யும் சாமானி யர்கள் மட்டுமில்லாமல், ஒரு லட்சம், இரண்டு லட்சம் பங்குகளை அநாயாசமாக வாங்கி விற்கும் நிதி நிறுவனங்கள்கூட பங்குச் சந்தையில் இயங்குகின்றன. இவர்கள் தவிர, பங்குச் சந்தை நிலவரத்தைக் கரைத்துக் குடித்து, விரைவாகச் செயல்பட்டுப் பணம் பண்ணுவதையே குறிக்கோளாகக் கொண்ட தனிநபர்களும் உண்டு.
நாள் வர்த்தகர்கள்
ஒரே தினத்தில் வாங்கி, விற்றுக் காசு பார்க்கும் ‘நாள் வர்த்தகர்கள்' இந்த வல்லுநர் கூட்டத்தில் உண்டு. சரியாகச் சொல்வதென்றால், விற்று வாங்குகிறவர்கள். சந்தை நிலவரம் சுருதி சுத்தமாக அறிந்தவர்கள் இவர்கள் என்பதால், காலையில் பங்கு வர்த்தகம் ஆரம்பித்ததும் விலை ஏற ஆரம்பிக்கும் ஒரு சில நிறுவனங்களின் பங்குகளை உச்ச விலை நிலவும்போது விற்பார்கள். அவை சாயந்திரத்துக்குள் விலை குறையும் என்று அவதானித்திருப்பார்கள். காலையில் 1,000 ரூபாய்க்கு விற்ற பங்கு கொஞ்சம் சல்லிசாக மாலையில் 900 ரூபாய்க்கு விலை படிந்து திரும்ப வாங்கக் கிடைக்கலாம். இப்படி விற்று வாங்க, கை மேல் நிகர லாபம் ரூ. 100
கையில் பங்கு வைத்திருந்துதான் விற்க வேண்டும் என்றில்லை. காலையில் வங்கியிடம் இருந்து பங்கைக் கடனாகப் பெற்று சந்தையில் விற்று, மாலையில் அங்கேயே வாங்கி, வங்கியிடம் திரும்பச் சேர்த்துவிடலாம். லாபம் ரூ 100-ல் வங்கிக் கட்டணம் போக ரூ 80 மிஞ்சும். முதலீடு இல்லாத இந்த வர்த்தகம், ‘ஷார்ட் செல்லிங்’ எனப்படும். இப்படி வெறும் கையால் முழம்போட உதவி செய்து, கட்டணம் பெறவும் வங்கிகளின் கணினி அமைப்பு வழி செய்யும்.
இப்போது உலகமெங்கும் பங்குச் சந்தைப் பங்காளிகள் பரபரப்பாகப் பேசும் விஷயம் ‘ஹை ஃப்ரீக்வென்ஸி டிரேடிங்’. தமிழில் சொல்ல முயன்றால், ‘மிகு அதிர்வெண் வர்த்தகம்’.
கணினிகளின் வன்பொருள் (ஹார்ட்வேர்) அளவு சிறுத்து, கணக்கிடும் சக்தி அதிவேகமாக உயர, மிகவும் சிக்கலான கணக்குகளையும் விநாடிக்கும் குறைவான நேரத்தில் நடத்தி முடிவெடுக்க கணினி மென்பொருள் தயார். இந்த மேதைமை அமைப்புகள் பங்கு வர்த்தகத்தில் வாங்க விற்க ஆர்டர்களைப் பதிந்து பங்குப் பரிவர்த்தனை அமைப்புகளுடன் தொடர்புகொள்வதோடு நிறுத்திக்கொள்வதில்லை. ‘இந்தப் பங்கை இப்போது வாங்கலாம், அந்தப் பங்கை இப்போது விற்கலாம்’ என்றும் முடிவுசெய்து ஆர்டர்களையும் உடனுக்குடன் உருவாக்கிச் செலுத்திவிடும் திறமை மிக்கவை இவை.
கண நேரத்தில் பெரும் வியாபாரம்
ஓய்வூதியத் தொகையை நிர்வகிக்கும் நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகள் (மியூச்சுவல் ஃபண்டுகள்) போன்றவை பங்கு வாங்குவதும் விற்பதும் ஒரு லட்சம், ரெண்டு லட்சம் பங்குகள் என்று பெருமளவில் இருக்கும். இந்தப் பிரம்மாண்டமான ஆர்டர்கள் பங்குச் சந்தையில், குறிப்பாக, வர்த்தகம் நடைபெறும் நிறுவனப் பங்கு விலையில் சில நிமிடங்களுக்காவது அதிர்வை உண்டாக்கும். அதிர்வை உடனடியாக இனம்கண்டு, மிகு அதிர்வெண் வர்த்தக அமைப்புகள் வாங்க விற்க ஆணை பிறப்பித்துவிடும். நாள் வர்த்தகர்களும் மற்ற பங்குச் சந்தைப் புலிகளும் கணினியை வைத்துக் கணக்குப் போட்டு வாங்கவோ விற்கவோ முடிவு செய் வதற்குள், கண நேரத்துக்குக் குறைவான காலத்தில் மிகு அதிர்வெண் வர்த்தக அமைப்புகள் பெரிய தோதில் வியாபாரம் செய்து லாபம் ஈட்டிவிட வல்லமை வாய்ந்தவை. பல நாட்டுப் பங்குச் சந்தைகளில் விலை கூறப்படும் பல்லாயிரம் பங்கு விவரங்களைப் பதிந்து, புதுப்பித்து, ஆராய்ந்து முடிவெடுத்து, நாள் முழுக்க சுதாரிப்போடு இவற்றின் பணி தொடர்கிறது.
தடாலடியாக, இப்படி ‘ஹை ஃப்ரீக்வென்ஸி’ கணினி அமைப்புகளைத் துணை கொண்ட ஒரு சிலர் காட்டில் மழை என்பதால், மற்ற சந்தை வர்த்தகர்கள் இவற்றை எதிர்க்கிறார்கள். அமெரிக்க அரசும், ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்களும் இந்த அமைப்புகளை அனுமதிப்பதா வேண்டாமா என்று தொடர்ந்து ஆராய்ந்துகொண்டிருக்கின்றன.
பெருங்கடலாகத் தொழில்நுட்பம் அலையடித்து வருகிறது. அலையே நில்லென்று ஆணையிட அரசால் முடியுமா?
- இரா. முருகன், ‘விஸ்வரூபம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்,
No comments:
Post a Comment