Tuesday, 28 October 2014

ஆமைகளைக் காப்பாற்றிய குட்டி நட்சத்திரங்கள் - இயற்கையின் வாசலில் 17

‘‘அங்கிள்... தாபேலு... தாபேலு..." எனக் கத்திக்கொண்டே வீட்டின் கதவைத் திறந்து, உள்ளே ஓடி வந்தன பக்கத்து வீட்டு வாண்டுகள். என்னவென்று கேட்டபோது, கூப்பியிருந்த கையைத் திறந்து காண்பித்தார்கள். அவர்களது உள்ளங்கைகளில் இருந்தன சின்னஞ்சிறிய நட்சத்திர ஆமைக் குட்டிகள்! தாபேலு என்றால் தெலுங்கில் ஆமை.
கேள்விகளும் ஆமைகளும்
கடப்பா மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன் களப் பணியில் ஈடுபட்டிருந்த காலம். நாங்கள் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் என்பதை அறிந்திருந்த அக்கம்பக்கத்திலுள்ள சிறுவர், சிறுமியர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் எனக் கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். அவ்வப்போதுக் கீழே விழுந்த குயில் குஞ்சு, கிளிக் குஞ்சு முதலியவற்றையும் எங்களிடம் எடுத்துக்கொண்டு வந்து, அவற்றை என்ன செய்யலாம் என உதவி கேட்பார்கள். ஆனால், ஆமைக் குட்டிகளை எடுத்து வந்தது அதுதான் முதல் முறை.
சின்னஞ்சிறிய பிஞ்சுக் கைகளில் அடைக்கலமாகியிருந்த ஆமைக் குட்டிகளைப் பார்த்த எனக்கு ஆச்சரியமாகவும், கூடவே கவலையாகவும் இருந்தது. எனது கவலைக்குக் காரணம் இந்த நட்சத்திர ஆமைகளை அவற்றின் அழகிய ஓடுகளுக்காக, திருட்டுத்தனமாகக் காட்டிலிருந்து பிடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென்றே ஒரு கும்பல் இயங்கிவந்ததுதான். இவ்வாறு கடத்தப்படும்போது சென்னையில் பல வேளைகளில், இவை பெட்டி பெட்டியாகப் பிடிக்கப்படுவதும் உண்டு. உடனே அந்தச் சிறுவர்களிடம் எப்படி, எங்கிருந்து இந்த ஆமைகள் கிடைத்தன எனத் தெலுங்கில் அடுகினேன். அவர்களும் சுந்தரத் தெலுங்கில் செப்ப ஆரம்பித்தார்கள்.
எப்படி வந்தன?
நடந்தது இதுதான்: இவர்கள் இன்னும் பல குழந்தைகளுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒருவன் சிக்ஸர் அடித்ததில், அருகில் புதர் மண்டிக் கிடந்த காலி மனையில் பந்து விழுந்திருக்கிறது. பந்தைத் தேடும் முயற்சியில் இருந்தவர்களுக்குக் கிடைத்தவை அழகான நட்சத்திர ஆமைக் குட்டிகள். அந்த அழகிய ஆமைகள், கிரிக்கெட்டைவிடவும் அவர்களது கவனத்தை அதிகம் ஈர்த்ததால், விளையாடுவதை நிறுத்திவிட்டு அனைவரும் ஆமைக் குட்டிகளைச் சேகரிக்கும் வேலையில் இறங்கிவிட்டார்கள். பல குழந்தைகள் வீட்டில் வளர்ப்பதற்காக எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
ஊருக்கு நடுவில் இருக்கும் குடியிருப்புப் பகுதிக்கு எப்படி இந்த ஆமைகள் வந்திருக்க முடியும்? அருகில் காட்டுப் பகுதிகூடக் கிடையாது. ஒன்றிரண்டானாலும் பரவாயில்லை, ஆளுக்கு ஒரு ஆமைக் குட்டியை எடுத்துச் சென்றதாகச் சொல்கிறார்கள். குழப்பத்துடன், அங்கே கூட்டிச் செல்லுமாறு குழந்தைகளிடம் கேட்டேன். சுற்றிலும் வீடுகள்; இடையே கருவேல மரங்கள் அடர்ந்த ஒரு காலி மனையில் பாதி கட்டப்பட்டு முடிக்கப்படாத ஒரு குட்டிச்சுவரும் இருந்தது. அக்கம்பக்கத்தினர் தங்கள் வீடுகளில் இருந்து காய்கறி மீதங்களையும், குப்பைகளையும் அந்த இடத்தில் கொட்டி வைத்திருந்தனர்.
பண்டமாற்று
முட்செடிகள் நிறைந்த இடத்தில் அப்போதும் ஆமைக் குட்டிகளைத் தேடும் முயற்சியில் ஓரிரு குழந்தைகள் இருந்தனர். இரண்டு குட்டிகளைத் தேடி எடுத்தும்விட்டனர். வீட்டில் ஆமைகளை வைத்துக் கொள்ளக் கூடாது, வனத்துறையினர் வந்து பிடித்துக் கொள்வார்கள் என அக்குழந்தைகளிடம் சொல்லிப் பார்த்தேன். அதற்கெல்லாம் அவர்கள் பயப்படுவதாகத் தெரியவில்லை. சரி, என்ன கொடுத்தால் அவற்றை அவர்கள் திரும்பித் தருவார்கள் எனக் கேட்டேன்.
புது ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்களே இருந்தன. அவர்கள் அனைவரும் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். ஒவ்வொரு குட்டி ஆமைக்கும் ஐந்து வாழ்த்து அட்டைகளும், மற்றக் குழந்தைகள் எடுத்துச் சென்ற ஆமைகளை மீட்டுத் தந்தால், பத்து வாழ்த்து அட்டைகளும் தருவதாகச் சொன்னவுடன், அவர்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
ஆமை மீட்பு
முதலில் குழந்தைகளால் எடுத்துச் செல்லப்பட்ட ஆமைகளை மீட்கும் பணியைத் தொடங்கினோம். ஐந்து குழந்தைகள் எங்களுடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று, வீட்டிலிருந்த குழந்தைகளிடம் விஷயத்தைச் சொல்லி ஆமைக் குட்டிகளை மீட்டு ஒரு அட்டைப் பெட்டியில் பத்திரமாகச் சேர்த்து வைத்துக்கொண்டனர். இதற்குள் தகவல் பரவி, இன்னும் பல குழந்தைகள் எங்களோடு ஆமை மீட்புப் பணியில் இறங்கினர்.
சில குழந்தைகள் அவர்களது செல்ல ஆமைக் குட்டிகளைத் தர முடியாது என அடம்பிடித்தனர். அவர்களுடைய பெற்றோர்களிடம் இந்த ஆமைகள் இந்திய வனப் பாதுகாப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டவை என்றும், இவற்றை வனத் துறையினரிடம் ஒப்படைப்பதுதான் முறை என்றும் எடுத்துச் சொன்னோம். அவர்களும் அதை உணர்ந்து, விளையாட வேறு பொம்மைகள் வாங்கித் தருவதாக அக்குழந்தைகளைச் சமாதானப்படுத்தி ஆமைக் குட்டிகளை எங்களிடம் ஒப்படைத்தனர்.
மூடநம்பிக்கை
சில குழந்தைகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆமைக் குட்டிகள் ஈரமாக இருந்தன. ஆமையென்றால் நீருக்குள் இருக்க வேண்டும் எனத் தவறாக எண்ணிய சில குழந்தைகள், வாளியில் நீரை நிரப்பி அவற்றை உள்ளே விட்டிருக்கிறார்கள். நல்ல வேளையாகச் சரியான நேரத்தில் சென்று மீட்டதால், ஒன்றும் ஆகவில்லை.
நட்சத்திர ஆமைகள் தரையில் வாழ்பவை, நீருக்குள் அல்ல. அவை சமவெளியில் உள்ள வறண்ட புதர்க் காடுகளிலும், இலையுதிர் காடுகளிலும் பொதுவாகத் தென்படும் என்று அவர்களுக்கு விளக்கினோம். ஒரு வழியாக எடுத்துச் செல்லப்பட்ட 15 ஆமைக் குட்டிகளும் மீட்கப்பட்டன.
அடுத்த நடவடிக்கையாகப் புதருக்குள் மேலும் ஆமைக் குட்டிகள் உள்ளனவா என்று தேட வேண்டும். அதற்குள் இருட்ட ஆரம்பித்தது. சரி, மறுநாள் அந்த வேலையைத் தொடங்கலாம் என மீட்கப்பட்ட ஆமைக் குட்டிகளை எங்களது ஆராய்ச்சி நிலையத்துக்குக் கொண்டு சென்றோம். வனத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்திருந்ததால், அவர்களும் ஆமைக் குட்டிகளைப் பார்வையிட்டனர். குழந்தைகள் ஆர்வத்துடன் நடந்ததை அவர்களுக்கு விளக்க ஆரம்பித்தனர். பத்திரிகையாளர்களுக்கும் இந்தச் செய்தி எட்டி, அவர்களும் குழந்தைகளைப் பேட்டி எடுத்துச் சென்றனர்.
தேடுதல் வேட்டை
மறுநாள் காலை நான் விழிக்கும் முன்பே, என் வீட்டு வாசலில் குழந்தைகள் கூடிவிட்டனர். வனத் துறையினரும் வந்து சேர்ந்தனர். எல்லோருமாகச் சேர்ந்து ஆமை தேடுதல் வேட்டையில் இறங்கினோம். புதர்கள் அகற்றப்பட்டன. குழந்தைகள் அன்று பகல் முழுவதும் பள்ளிக்குச் செல்லாமல் ஆர்வத்துடன் கண்களில் அகப்பட்ட ஆமைக் குட்டிகளையும், ஒரு சில முதிர்ந்த ஆமைகளையும் சேகரிக்க ஆரம்பித்தனர். அந்தச் சிறிய இடத்திலிருந்து சிறியதும் பெரியதுமாக மொத்தம் 55 நட்சத்திர ஆமைகளைக் கண்டெடுத்தோம்.
இந்த நட்சத்திர ஆமைகள் பொதுவாகத் தாவர உண்ணிகள். அந்தக் காலி மனையின் ஒரு மூலையில் அப்பகுதி மக்கள் காய்கறிக் கழிவுகளையும், குப்பைகளையும் வீசி வந்திருக்கின்றனர். இவற்றையும் அங்கு வளர்ந்திருந்த புற்களையுமே, அவை உண்டு வாழ்ந்திருக்க வேண்டும். யாராவது காட்டிலிருந்து பிடித்துக்கொண்டு வந்து வளர்த்துக் கொண்டிருந்தபோது, இடையே தப்பித்து இங்கே அவை வந்திருக்கலாம்.
கொண்டு வந்தது பெண் ஆமையாக இருந்திருக்கக் கூடும். இவை மண்ணில் குழி தோண்டி முட்டையிடுபவை. இந்த இடத்துக்கு வந்த பின் முட்டையிட்டு ஆமைக் குஞ்சுகள் வெளியேறி, இங்கேயே வாழ ஆரம்பித்திருக்கலாம். பல வகைகளில் யூகிக்க முடிந்ததே தவிர, இவை எப்படி இங்கே வந்தன, எத்தனை காலமாக இங்கே வசிக்கின்றன என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருந்தது எங்களுக்கு.
பிரியா விடை
அடுத்த நாள், நட்சத்திர ஆமைகள் அனைத்தையும் திருப்பதியில் உள்ள விலங்குக் காட்சி சாலைக்கு எடுத்துச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. குழந்தைகளுக்குச் சோகம் தாளவில்லை. இங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்றார்கள். அவர்கள் சேகரித்த பல ஆமைக் குட்டிகளின் கால்களிலும், கழுத்துப் பகுதிகளிலும் புண்ணும் அதில் புழுக்களும் நெளிந்துகொண்டிருந்தன. சுகாதாரமற்ற சூழலில் இருந்ததால் இந்தப் புண்கள் ஏற்பட்டிருக்கலாம்.
ஆகவே, இவற்றைக் காட்டுப் பகுதியில் கொண்டு விடுவது நல்லதல்ல. அங்கு இயற்கையாகத் திரியும் ஆமைகளுக்கும், பிற காட்டுயிர்களுக்கும் இவற்றின் மூலம் நோய் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். அதனால் இவற்றைக் குணப்படுத்தவும், மற்ற ஆமைகளுக்கு நோய் பரவாமல் இருக்கவும் இவற்றை அடைத்து வைத்துப் பராமரிப்பதே சிறந்தது. இதையெல்லாம் விளக்கிய பின்னும், குழந்தைகள் சமாதானமடையவில்லை.
ஆமைக் குட்டிகள் இங்கேயே இருந்தால் ஒவ்வொன்றாக உயிரிழக்க நேரிடும் என்றும், இதனால் அவர்கள் இவ்வளவு முயன்று காப்பாற்றியது எல்லாம் வீணாகப் போய்விடும் என்றும், விலங்குக் காட்சி சாலைக்கு எப்போது வேண்டுமானாலும் போய் ஆமைக் குட்டிகளைப் பார்த்து வர முடியும் என்றும் நம்பிக்கையூட்டிய பின்னரே அக்குழந்தைகள் முகம் லேசாக மலர்ந்தது. கடைசியில் அவர்களது செல்ல ஆமைக் குட்டிகளுக்குப் பிரியா விடை கொடுத்தார்கள்.
ஆமை தரையில் வாழுமா?
இந்தியாவில் தென்படும் ஆமைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். நட்சத்திர ஆமை போன்ற தரை ஆமைகள் (tortoise), குளங்களிலும், ஏரிகளிலும், ஆறுகளிலும் தென்படுபவை நன்னீர் நீர்வாழ் ஆமைகள் (terrapins), கடலில் இருப்பவை கடலாமைகள் (sea turtles). இந்தியாவில் ஐந்து வகை கடலாமை களும், 34 வகை ஆமைகளும் தென்படுகின்றன.
கடலாமைகள் பொதுவாக உருவில் பெரியவை. அந்தமான் - நிகோபார், லட்சத்தீவு கடற்கரைகளில் முட்டையிட வரும் தோணி ஆமை (Leatherback sea turtle) சுமார் 200 செ.மீ நீளமும் 650 கிலோ எடையும் கொண்டது. நீர்வாழ் ஆமைகள் நீருக்குள் வாழ்ந்தாலும், முட்டையிட நிலப்பகுதிக்கே வருகின்றன. மண்ணின் வெப்பநிலையைப் பொறுத்து ஆமை முட்டைகள் பொரியும். மண்ணின் வெப்பநிலை குறைவாக இருந்தால் ஆண் ஆமைக் குஞ்சுகளும், அதிகமாக இருப்பின் பெண் ஆமைக் குஞ்சுகளும் வெளிவரும்.
ஆமைகளின் உடல் உறுதியான ஓட்டால் மூடப்பட்டிருக்கும். மேல் ஓடும் (Carapace), கீழ் ஓடும் (plastron) பக்கவாட்டில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஓடுகள் தரை ஆமைகளில் கடினமாகவும், சில வகை நீர் ஆமைகளில் சற்று மென்மையாகவும் இருக்கும். ஆமைகள் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளத் தலையையும், வாலையும், கால்களையும் கவசம் போன்ற தங்களது ஓடுகளுக்குள் இழுத்துக் கொள்கின்றன. கடலாமைகளால் இவ்வாறு செய்ய முடியாது.
ஆமைகள் அவற்றின் கடினமான ஓடுகளுக்காகவும் இறைச்சிக்காகவும் பெருமளவில் வேட்டையாடப்படுகின்றன. உணவுக்காகக் கடலாமைகளின் முட்டைகள், அவற்றின் கூட்டிலிருந்து மனிதர்களால் திருடப்படுகின்றன. மீன்பிடி வலைகளில் சிக்கியும் பல கடலாமைகள் உயிரிழக்கின்றன.
கட்டுரையாளர், 
காட்டுயிர் ஆராய்ச்சியாளர் 
தொடர்புக்கு: jegan@ncf-india.org

No comments:

Post a Comment