Wednesday, 1 October 2014

உடல் பலத்தை மிஞ்சிய அறிவு பலம்

நாம் பிராணிகளைக் கவனித்து அவற்றின் பழக்க வழக்கங்களுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வதற்குப் பதிலாக இப்போது அவை நம்மைக் கூர்ந்து கவனித்து நம்மைப்போலவே வாழ முற்படுகின்றன!
பரதன் என்கிற யானை, செயலில் மனிதர்களை மிஞ்ச கற்றுக்கொண்டுவிட்டது. யானைகளின் போக்கில் காணப்படும் மாறுதல்களை டார்வினின் கொள்கைப்படி அறிவதைவிட கலாச்சாரத்தை ஆராய்வதன் மூலம் நன்கு அறிந்துகொள்ள முடியும். 

பரதன் என்பது தந்தமில்லாத ஆண் யானை. மைசூர்-ஊட்டி நெடுஞ்சாலையில் உள்ள தொரப்பள்ளிப் பகுதியில் இப்போது அதைப்பற்றித்தான் பேசுகிறார்கள். தமிழ்நாட்டின் முதுமலை காப்புக்காட்டின் ஓரத்தில் இருக்கும் சின்ன கிராமம்தான் தொரப்பள்ளி. பரதனைப் பார்த்தாலே உள்ளுக்குள் உதறல் எடுக்கும் அளவுக்கு பெரிய மேனி. நல்ல புத்திசாலி. தன்னைச் சுற்றியிருக்கும் மக்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஊன்றிக் கவனித்து செயலில் அவர்களை வென்றுவிடுகிறது. 

தினந்தோறும் இரவு காப்புக்காட்டிலிருந்து இரைதேடி கிராமத்துக்கு வருகிறது. பலாப்பழ வியாபாரி எப்போது மறைவிடத்துக்குப் போவார் என்று புதர் மறைவில் காத்திருக்கிறது. அவர் அசந்த நேரத்தில் பழத்தை தூக்கிக்கொண்டு இருளில் மறைகிறது. 

வனத்துறையினர் காப்புக்காட்டின் தங்கள் எல்லையில் யானை வெளியேற முடியாத பள்ளத்தை வெட்டி வைத்துள்ளனர். பரதனோ காப்புக்காட்டின் காவலரை, தன்னுடைய பிளிறலால் அச்சுறுத்தி ஓட வைத்துவிட்டு செக்-போஸ்ட் பக்கமாகவே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக நடந்து எல்லையைத் தாண்டிவிடுகிறது. அதன் குறும்புத்தனங்களை ரசிக்கும் உள்ளூர் மக்கள் கிராமத்துக்கு அது வந்துவிடக்கூடாது என்பதற்காக நெடுஞ்சாலையில் மனிதச் சுவராக நிற்கிறார்கள். அதுவோ துணைக்கு இன்னொரு யானையைக் கூட்டிவந்து நிறுத்துகிறது. மக்களின் பின்னால் சென்று பலமாக பிளிறி எல்லோரையும் அலறியடித்து ஓடவைத்துவிட்டு கிராமத்துக்குள் ஓடிவிடுகிறது. மனிதர்களைத் தூக்கிப்போட்டு மிதிப்பதோ, அடிப்பதோ நீண்டகாலத்துக்குப் பயன்படாது என்று தெரிந்துகொண்டு தினம் ஒரு தந்திரத்தைக் கடைப்பிடிக்கிறது. 

மனித - புவியியல் 

மனிதர்களுக்கும் பிராணிகளுக்குமான உறவை இப்போது மனித-புவியியல்தான் தீர்மானிக்கிறது. மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் உலகம் முழுக்க பூர்வகுடிகளும் பிராணிகளும் விலங்குகளும் எப்படி காட்டில் ஒன்றாக வாழ்கிறார்கள் என்று ஆராய்ந்து வருகிறார்கள். மனிதனுக்கும் பிராணிகளுக்கும் வாழ்வியல் கலாச்சாரம் மாறிக்கொண்டிருக்கிறது. பிராணிகளுக்கும் விலங்குகளுக்குமான வனப்பகுதி சுருங்கிக்கொண்டே வந்து இப்போது நாம் வசிக்கும் இடத்திலேதான் அவையும் வசித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை நாம் ஏற்படுத்திவிட்டோம். நாம் அவற்றைக் கவனித்து அவற்றின் பழக்க வழக்கங்களுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வதற்குப் பதிலாக இப்போது அவை நம்மைக் கூர்ந்து கவனித்து நம்மைப்போலவே வாழ முற்படுகின்றன! 

காட்டில் வாழும் பிராணிகளுக்கும் விலங்கு களுக்கும்கூட வாழ்க்கை அனுபவங்கள் இருக் கின்றன. அவற்றுக்கும் உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. அவற்றுக்கென்று சில நம்பிக்கைகளும் இருக்கின்றன. அறிவுபூர்வமாகவே அவை கூட்டாகச் சிந்திக்கின்றன, வரும் ஆபத்தை உணர்கின்றன, வாழ்வதற்குரிய வழிகளைக் கண்டுபிடிக்கின்றன. 

காட்டு நாயக்கர்கள் 

பிராணிகளுடன் வாழ்வது என்ன என்பதை பூர்வகுடிகளிடமிருந்து மானுடவியலாளர்கள் கற்றுவருகின்றனர். காட்டில் வசிக்கும் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் காடும் மரமும் கற்களும் பாறைகளும் புதர்களும் நீரோடைகளும் பொது. 

நூரிட் பேட்-டேவிட் என்ற மானுடவியலாளர் நீலகிரி மலைப்பகுதியில் வசிக்கும் காட்டு நாயக்கர்களுடன் தங்கி அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அவர்கள் காட்டில் உள்ள எல்லா விலங்குகளின் குணங்களையும் நன்கு அறிந்துவைத்துள்ளனர். யானைகளை, ‘மனிதர்கள் அல்லாத காட்டு குடிமக்கள்’ என்றே பார்க்கின்றனர். அவற்றில் சில நல்லவை, சில தீயவை. அவற்றுக்கு உரிய மரியாதையைக் கொடுத்துவிட்டால் அவை நம் வழியில் குறுக்கிடுவதில்லை என்பதை அனுபவபூர்வமாகக் கண்டுள்ளனர். முரட்டுத்தனமாக பிளிறிக்கொண்டு வரும் காட்டு யானைகளிடம்கூட அவர்கள் சாந்தமாகப் பேசுகின்றனர். உயிரியலாளர்கள் இந்தப் பாடங்களைச் சமூக அறிவியலில் படிக்க முடியாது. 

மனிதர்களுக்கு அடுத்தபடியாக யானைகள்தான் அறிவிற்சிறந்தவை. நம்முடைய மூளையைப் போலவே அவற்றின் மூளையும் அமைப்பிலும் நுட்பத்திலும் சிறந்தவை. அவற்றின் மூளைக்குள்ளும் ஏகப்பட்ட நியூரான்கள். கருவிகளைப் பயன்படுத்த அவை விரைவில் கற்றுக்கொள்கின்றன. சிக்கலான வேலைகளைப் பிற யானைகளுடனோ மனிதர்களுடனோ சேர்ந்து செய்கின்றன. கண்ணாடி முன்னால் நிற்கும்போது அது தான்தான் என்பதை ஒவ்வொரு யானையும் தெரிந்துகொள்கிறது. கண்ணாடியில் தெரிவது இன்னொரு யானை என்று வெருள்வதோ கோபம் கொள்வதோ இல்லை. காட்டில் தாங்கள் எடுக்கும் பழங்கள், முறிக்கும் மரங்கள் போன்றவற்றின் எண்ணிக்கையைக்கூட அவை தெரிந்துவைத்துள்ளன. பிற உயிரினங்களைக் காக்க அவை சமயங்களில் உயிர்த்தி யாகமும் செய்கின்றன.
 

யானைகளின் புத்திகூர்மை 

ஒரு முறை கூடலூருக்கும் ஊட்டிக்கும் இடையே 9 யானைகள் ஒன்றாக வந்துகொண்டிருந்தன. ஒரு வீட்டுக்கு மிக அருகில் சென்றபோதுதான் மின்சார வேலி போட்டிருந்ததை யானைகள் கவனித்தன. அந்த ஒயரை மிதிக்காமல் இடையில் இருந்த இடைவெளியில் எச்சரிக்கையாக கால்களை வைத்து அந்த வீட்டை மேலும் நெருங்கி, சுற்றிப்பார்த்துவிட்டு சென்றுவிட்டன. 

இத்தனை யானைகள் அந்த வீட்டுக்கு அருகில் ஏன் வந்தன, அந்த வீட்டை ஏன் சுற்றின, வீட்டுக்குள் என்ன பார்த்தன என்றெல்லாம் யாருக்கும் புரியவில்லை. யானைகளை ஆராய்ச்சி செய்கிறவர்களிடம் கேட்டனர். “அந்த யானைகள் அந்தக் காட்டுக்குப் புதிதாக வலசை வந்துள்ளன, தங்களின் தங்குமிட சுற்றுப்புறம் எப்படி என்று தெரிந்துகொள்ளவே அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்துள்ளன. எனவேதான் எதையும் உடைக்கவில்லை. பூக்களைப் பறிக்கவில்லை, மாஞ்செடிகளைப் பிய்க்கவில்லை, மூங்கில் குருத்துகளைக்கூட உண்ணவில்லை” என்று அவர்கள் விளக்கினர். அந்த வீட்டையும் அதன் சுற்றுப்புறத்தையும் அந்த யானைகள் தங்களுடைய மூளையில் பதியவைத்துக்கொள்ளுமாம். அதைத் தங்களுடைய எல்லையாகவோ எல்லைக்கு உள்பட்ட பகுதியாகவோ கருதுமாம். 

இவ்வளவு அறிவுக்கூர்மையுள்ள பிராணிகளை இந்தியாவில் வைத்துக் காப்பது சவாலான வேலை. யானைக்கான இடத்தில் 22% மட்டுமே காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய இடம் நம்மோடுதான் அவை பகிர்ந்துகொள்ள வேண்டும். ‘காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம்’ என்று இனி வசைபாடாதீர்கள். காடும் நாடும் நமக்கும் அதற்கும் பொது. நாம்தான் அவற்றுக்கு ஆபத்து நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் வீட்டில் குழந்தை, தாத்தா, பாட்டி ஆகியோரைப் பராமரிப்பதைப்போல நம்முடைய ஊருக்கு அருகில் வரும் காட்டு யானைகளை இம்சித்து விரட்டாமல் அதன் போக்கில் போகவிட்டுவிடவேண்டும். மனிதர்கள் இல்லாமல் விலங்குகளும், விலங்குகள் இல்லாமல் மனிதர்களும் வாழ்வது முழுமையான வாழ்க்கை இல்லை. வனவிலங்குகளுடன் வாழ்வது எப்படி என்று வெளிநாட்டவர்கள் நமக்குக் கற்றுத்தரத் தேவையில்லை, நமக்கே தெரியும். சற்றே பெரிய மனது வைத்து அவற்றின்பால் இரக்கமும் அக்கறையும் காட்டுவோம்.
*
குற்றவுணர்ச்சி
யானைகள் யாரையாவது தவறுதலாகக் கொல்ல நேர்ந்துவிட்டால் குற்றவுணர்ச்சியால் அந்த இடத்தைவிட்டுப் போகாது. அந்த சடலத்தை இலைகளாலும் தழைகளாலும் சில சமயங்களில் மண்ணைப் போட்டும் மூடி மறைக்கப் பார்க்கும். அந்த சடலத்தை நாய், நரி போன்ற விலங்குகள் கடித்துக் குதறாமல் இருக்க அவை தங்களுக்குத் தெரிந்த வகையில் பாதுகாக்கின்றன!
யானையை நிறுத்திய குழந்தை
சமீபத்தில் மத்திய இந்தியாவில் காட்டுக்கு அருகிலிருந்த ஒரு வீட்டை முரட்டு யானையொன்று இடித்துத்தள்ளத் தொடங்கியது. திடீரென வீட்டுக்குள்ளிருந்து பச்சிளம் குழந்தையின் அழுகைச் சத்தம் வீறிட்டுக் கிளம்பியது. உடனே அந்த யானை அந்த வீட்டை இடிப்பதை நிறுத்தி விட்டு உள்ளே சென்று, அந்தக் குழந்தைக்கு அருகிலிருந்த இடிபாடுகளைத் தும்பிக்கையால் தூக்கி வெளியே வீசிவிட்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு அகன்றது.
பிராணி நேயம்
வீட்டு வேலைகளுக்கு நன்கு பழக்கப்படுத்தப்பட்ட ஒரு யானை, பெரிய கொட்டாரம் அமைக்க மூங்கில்களை அவற்றுக்காக தோண்டப்பட்டிருந்த குழிகளில் ஒவ்வொன்றாக இறக்கிக்கொண்டே வந்தது. ஒரு குழியில் மட்டும் மூங்கிலை இறக்க மறுத்தது. சில முறை அங்குசத்தால் குத்திய பாகன், ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறது என்று யோசித்தபடியே அந்தக் குழிக்குள் எட்டிப்பார்த்தார். அந்த குழிக்குள் ஒரு நாய்க்குட்டி தூங்கிக்கொண்டிருந்தது.
தர்ஷ் தெக்கேகரா - உயிரிப் பன்மையியலாளர், வன உயிரினக் காவலர், ஷோலா அறக்கட்டளை ஆய்வாளர். 

No comments:

Post a Comment