தேசத்தின் முதல் பவழத் திட்டு (Coral reef) பூங்கா குஜராத்தில் அமைய இருக்கிறது. சுற்றுலா நோக்கத்தைத் தாண்டி பார்க்கையில், இந்தப் பூங்காவால் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் என்கிறார்கள் சூழலியலாளர்கள்.
பல்லாயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாக இருக்கும் கடல், இன்னும் அறியப்படாத ரகசியங்களின் பொக்கிஷம் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது! கடல்வாழ் உயிரினங்களின் வகைகளையும், மொத்த எண்ணிக்கையையும்கூட இன்னும் முழுமையாகக் கணக்கிட முடியவில்லை. தினமும் ஒரு புதிய உயிரினத்தின் அறிமுகம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது!
காட்டை மீட்க முடியுமா?
‘மனிதனின் அதீதத் தலையீட்டால் தாவர வகைகள் அருகி வருகின்றன... மழை குறைந்து வருகிறது’ என்றெல்லாம் கடந்த இருபதாண்டுகளாக உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
ஒரு பக்கம் காடுகளை அழித்துக்கொண்டே, மற்றொரு புறம் மரக்கன்று நடும் வேலைகளைச் செய்கிறோம். என்னதான் மரங்களை நட்டாலும், இயற்கையில் உருவான காடுகளை நம்மால் திரும்ப உருவாக்கவே முடியாது என்பதே நிஜம்.
காடு என்பது வெறும் தாவரங்களை மட்டுமே கொண்டதல்ல. கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளில் ஆரம்பித்துப் புழு பூச்சிகள், விலங்குகள், பறவைகள் என்று ஏராளமான உயிரினங்கள் காடுகளில் வசிக்கின்றன.
காடு அழியும்போது நம் கண்களுக்கு வெளிப்படையாகப் புலப்படாமலேயே இந்த உயிரினங்களும் மடிந்துவிடுகின்றன. அதிகபட்சமாக சில மரக்கன்றுகளை மட்டுமே நடுகிறோம்… ஆனால், அழிந்து போன உயிரினங்கள் அழிந்து போனவைதான்… அவற்றை நம்மால் மீட்டெடுக்க முடியாது. அந்த மந்திரம் இயற்கையிடம்தான் இருக்கிறது.
கடலின் ஆதாரம்
கடல்வாழ் உயிரினங்களில் மிக முக்கியமானவை பவழத் திட்டுகள். வெப்பம் நிறைந்த கடல் பகுதிகளில் சுமார் 50 மீட்டர் ஆழத்தில் வளரக்கூடியவை இவை. இவை வளர்வதற்கு அளவான உப்பும் தெளிவான நீரும் அவசியம். இவற்றை ஒட்டி வளரும் சிவப்புப் பாசிகளில் இருந்தே, பெரும்பகுதி உணவை இவை பெறுகின்றன.
சிறிய மீன்கள், மிதவை உயிரினங்களையும் (ஸூ பிளாங்க்டன்) உணவாக்கிக் கொள்வதுண்டு. பவழத் திட்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் பாசிகளுக்குச் சக்தி அளிக்கின்றன.
கடல் பரப்பில் 1 சதவீதத்துக்கும் குறைவாக, இருக்கும் பவழத் திட்டுகள் 25 சதவீதத்துக்கும் அதிகமான கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கின்றன!
வேகமடையும் அழிவு
உலகிலேயே மிக நீண்ட தூரத்துக்குப் பரந்து விரிந்துள்ள உயிரினம் ஆஸ்திரேலியாவில் உள்ள கிரேட் பாரியர் ரீஃப் என்ற பவழத் திட்டுதான். மெதுவாக வளர்ந்தாலும் நீண்ட ஆயுள் கொண்டவை பவழத் திட்டுகள்.
அதாவது, சில ஆண்டுகளில் இருந்து சில நூற்றாண்டுகள்வரை வாழும் இயல்புடையவை. பூமியில் உள்ள சில பவழத் திட்டுகள் உருவாகிச் சுமார் 5 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!
மனிதர்கள் தோன்றியதற்கு முன்பிருந்தே வாழ்ந்துவரும் பவழத் திட்டுகள், இன்றைக்கு மனித இனத்தால் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. பூமி வெப்பம் அடைவதால் கடல் நீர்மட்டம் உயர்வது, நீரின் வெப்பநிலையில் மாற்றம், ரசாயனக் கழிவுகள் கலப்பது, அளவுக்கு அதிகமாக மீன் பிடிக்கும்போது கடலில் நிலவும் உயிரினச் சமநிலையில் ஏற்படும் மாற்றம், படகுகள், மனிதர்களால் ஏற்படும் சேதம் போன்ற பல்வேறு காரணங்களால் 10 சதவீத பவழத் திட்டுகள் ஏற்கெனவே அழிந்துவிட்டன.
இன்னும் 60 சதவீதம் பவழத் திட்டுகள் அழியும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் இருக்கும் பவழத் திட்டுகளில் 80 சதவீதம் அழிந்துவிடும் நிலையில் உள்ளன. அடுத்த 30 ஆண்டுகளில் தற்போது இருக்கும் பவழத் திட்டுகளில் பாதியளவு அழிந்துவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
புதிய பூங்கா
எப்பொழுதுமே ஒன்றை அழித்துவிட்டு, பிறகு காப்பாற்ற முயற்சி செய்வதுதான் மனிதனின் இயல்பாக இருக்கிறது. இந்தச் சூழலில் பல்வேறு நாடுகள் பவழத் திட்டுகளைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன.
குஜராத் மாநிலம் மிதாபூரில் இந்தியாவின் முதல் பவழத் திட்டு பூங்கா அமைய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சி மற்றும் சுற்றுலாவுக்காக மட்டுமின்றி, பவழத் திட்டுகளைப் பாதுகாப்பதற்காகவும் இந்தப் பூங்கா அமைக்கப்படுகிறது என்கிறார்கள் அதிகாரிகள்.
பூங்கா காப்பாற்றுமா?
‘‘பவழத் திட்டுகளுக்குச் சரியான வெப்பநிலை அவசியம். மிதாபூர், பழைய போர்க் கப்பல்களை உடைத்துப் பிரிக்கக்கூடிய இடம். கப்பல்களில் இருந்து பிரிந்துவரும் எண்ணெய், ரசாயனம் போன்றவற்றால் பவழத் திட்டுகளுக்கு ஆபத்து ஏற்படுவது நிச்சயம்.
ஓர் உயிரினத்தை அழித்துவிட்ட பிறகு, மீண்டும் அதை உருவாக்க முடியாது. இப்போது இருக்கும் பவழத் திட்டுகளை இன்னும் மோசமடையாமல் பாதுகாக்கத்தான் முடியுமே தவிர, புதிதாக உருவாக்க இயலாது. பல நூறு ஆண்டு கள் வாழக்கூடிய இந்தப் பவழத் திட்டுகளைச் சார்ந்து பல்லாயிரக்கணக்கான உயி ரினங்கள் வாழ்ந்துவருகின்றன.
வெப்பநிலை உயர்வு, கடல் மாசு, அளவுக்கு அதிகமாக மீன் பிடித்தல், படகு, கப்பல் போக்குவரத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பு போன்றவற்றை நிறுத்தாமல் பவழத் திட்டுகளைக் காப்பாற்ற முடியாது.
சூழலியல் பாதுகாப்பு என்பது நாம் நினைப்பது போல அத்தனை எளிதான விஷயம் இல்லை’ என்கிறார் மதுரைக் கல்லூரியின் விலங்கியல் துறை இணைப் பேராசிரியரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான தினகரன்.
எல்லாம் பிணைந்தவை
உயிர்ச் சங்கிலியில் எல்லா உயிர்களுக்கும் சம அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். பவழத் திட்டுகளால் சுனாமியில் இருந்து காப்பாற்றப்படுகிறோம், பவழங்களில் இருந்து மருந்து, அணிகலன்கள் கிடைக்கின்றன…
அது மட்டுமில்லாமல், மனிதனுக்குப் பயன் இருப்பதால் ஓர் உயிரினத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனைகூட மாற வேண்டும். ஓர் உயிரினத்தால் மனிதனுக்குப் பயன் இல்லாவிட்டாலும்கூட இந்தப் பூமியில் அந்த உயிரினம் வசிக்க, நம்மைப் போலவே அத்தனை உரிமைகளும் இருக்கின்றன என்ற தெளிவு நமக்குப் பிறந்தாலே, சுற்றுச்சூழலை முழுமையாகப் பாதுகாக்க முடியும். நமது நலவாழ்வும் அதன் ஒரு பகுதிதான்.
No comments:
Post a Comment