Wednesday, 29 October 2014

ஐஸக் மெரிட் சிங்கர் 10

நியுயார்க் நகரின் பிட்ஸ்டவுனில் பிறந்தவர். 12 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய இவர், எங்கெங்கோ சுற்றி, கிடைத்த வேலைகளைச் செய்து ஒரு மெக்கானிக்காகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
* மெக்கானிக்காக இருந்த அவர் ஓயாமல் ஏதாவது புதிய பொருளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். 1839-ல் இல்லினோயிசில் இருந்தபோது, பாறை துளையிடும் இயந்திரத்தைக் கண்டறிந்தார். அதன் காப்புரிமையை விற்றார். நடிகனாக வேண்டும் என்ற ஆசையால், அந்தப் பணத்தில் ‘மெரிட் ப்ளேயர்ஸ்’ என்னும் நாடகக் குழுவை உருவாக்கி, நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ஐஸக் மெரிட் என்ற பெயரில் மேடைகளில் தோன்றினார்.
* ஒன்பது வருடங்கள் தொடர்ந்த இந்த நாடகக் குழுவின் தொடர் தோல்விகளால் குழு கலைக்கப்பட்டது. நடிப்புத் தொழில் கை கொடுக்கவில்லை என்பதால் சிங்கர் துவண்டுவிடவில்லை. மீண்டும் மெக்கானிக்காகவும், கண்டுபிடிப்பாளராகவும் மறுஅவதாரம் எடுத்தார்.
* 1949-ல் மரம் மற்றும் உலோகம் செதுக்கும் கருவியை உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்றார். சொந்தமாக ஒரு தொழிற்சாலையை உருவாக்கி உற்பத்தியைத் தொடங்கினார். துரதிர்ஷ்டவசமாக, அங்கு ஏற்பட்ட ஒரு வெடி விபத்தில் தொழிற்சாலை தரைமட்டமானது.
* 1950-ல் ஒரு தையல் இயந்திரக் கடையில் பழுது பார்க்கும் மெக்கானிக்காக வேலை பார்த்தார். முதலாளி அவரிடம் தையல் இயந்திரம் ஒன்றைப் பழுது பார்க்கும்படி கூறினார். சிங்கரின் கண்டுபிடிப்பாளர் மூளை உடனே செயல்பட்டது. ஒரு சில நாட்களிலேயே உயர்தரம் வாய்ந்த புதுமையான முறையில் அதை மேம்படுத்தினார். மிகவும் சவுகரியமாகவும், ஒரு நிமிடத்திற்கு 900 தையல் போடக்கூடிய அதி வேகத் திறன் வாய்ந்ததாகவும் அது செயல்பட்டது.
* அதற்கு சிங்கர் தையல் மிஷின் என்று பெயரிட்டார். இதற்கான காப்புரிமைக்காக இவர் விண்ணப்பித்தபோது, இதன் அடிப்படை எலியாஸ் ஹவ் என்பவருடைய கண்டுபிடிப்பு என்பதால், அவர் சிங்கர் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கில் எலியாஸ் வென்றார். இந்தத் தோல்வியும் இவரை ஒன்றும் செய்துவிடவில்லை. அதிர்ஷ்டவசமாக, அவர் தான் தயாரித்த இயந்திரங்களைத் உற்பத்திசெய்யக் கூடாது என்று தீர்ப்பில் தடை விதிக்கப்படவில்லை. 1857-ல், எட்வர்ட் கிளார்க் என்பவருடன் கூட்டாகச் சேர்ந்து ஐ.எம். சிங்கர் & கம்பெனியைத் தொடங்கினார்.
* இந்த நிறுவனம் புதுமையான உத்திகளைப் பயன்படுத்தி, உற்பத்திச் செலவைக் குறைத்து, வேலைக்குச் செல்லாத நடுத்தர வர்க்கக் குடும்பப் பெண்களும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் தையல் இயந்திரத்தைத் தயாரித்து விற்பனை செய்தது.1860-ல் உலகிலேயே மிகப் பெரிய அளவில் தையல் இயந்திரம் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இது உயர்ந்தது. மேலும் 22 புதிய தயாரிப்புகளுக்கான காப்புரிமைகளை இந்த நிறுவனம் பெற்றது.
* முதன்முதலாக வீட்டு உபயோகத் தையல் இயந்திரத்தை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்த நிறுவனத்தைத் தொடங்கியவர் சிங்கர். இவரது கண்டுபிடிப்புகளால் அமெரிக்கா அதுவரை கண்டிராத மிகப் பெரிய தொழிற்துறை வளர்ச்சியைக் கண்டது.
* இவர் பல திருமணங்கள் செய்துகொண்டவர். திருமணங்கள் மூலமாகவும் திருமணம் இல்லாமலும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வாரிசுகள் உண்டு.
* சிங்கர் ஆறடி ஐந்தங்குலம் கொண்ட ‘உயர்ந்த’ மனிதர். பூஜ்ஜியத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தன் உழைப்பாலும் புதுமைக் கண்ணோட்டத்தாலும் மேதைமையாலும் மிக உயர்ந்த இடத்தை எட்டினார். தனது 63-வது வயதில் மரணமடைந்தார் இந்தச் சாதனையாளர்.

No comments:

Post a Comment